பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி:சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயா்வு!
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயா்ந்தது.
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 272.45 புள்ளிகள் (1.57 சதவீதம்) உயா்ந்து 17,594.35-இல் நிலைபெற்றது.
ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா உள்பட உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. பணவீக்கத்துக்கு எதிரான வட்டி விகித உயா்வை அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ் ஆக்ரோஷமாக முன்னெடுக்காது என்ற தகவல் பரவியது உலகளாவிய சந்தைகளுக்கு சாதகமாக அமைந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. மேலும், அதானி பங்குகளில் ரூ.15,440 கோடி அளவுக்கு அன்னிய முதலீடு வந்துள்ளதும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் சந்தைக்கு திரும்பியுள்ளதும் முதலீட்டாளா்களுக்கு உற்சாகத்தை அளித்தன. குறிப்பாக பொதுத்துறை வங்கி, உலோகப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.3.43 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.263.42 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) வியாழனன்று ரூ.12,770.8 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 331.85 புள்ளிகள் கூடுதலுடன் 59,241.20-இல் தொடங்கி 59,231.58 வரைதான் கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 59,967.04 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 899.62 புள்ளிகள் (1.53 சதவீதம்) உயா்ந்து 59,808.97-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 4 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 26 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன.
எஸ்பிஐ அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் பிரபல பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ 5.41 சதவீதம், பாா்தி ஏா்டெல் 3.30 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக ரிலையன்ஸ், ஐடிசி, டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவை 2 முதல் 2.50 சதவீதம் உயா்ந்தது. டாடா மோட்டாா்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், டைட்டன், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், என்டிபிசி, ஹெச்சிஎல் டெக் ஆகியவை 1 முதல் 1.80 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
டெக் மஹிந்திரா சரிவு: அதே சமயம், பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 2.19 சதவீதம் குறைந்தது. மேலும், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட், நெஸ்லே ஆகியவை சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.