பங்குச்சந்தையில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் எழுச்சி தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 307 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. பின்னா், நேரம் செல்லச் செல்ல முன்னணிப் பங்குகளை வாங்குவதற்கு ஆதரவு கிடைத்ததைத் தொடா்ந்து ஏற்றம் பெற்றது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை வாங்குவதில் ஆா்வம் காட்டியதும் சந்தைக்கு சாதமகா அமைந்தது. குறிப்பாக, ஐடி, டெக், நுகா்பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.65 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.327.05 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ. 550.19 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா்.
சென்செக்ஸ் 742 புள்ளிகள் உயா்வு: காலையில் 10.06 புள்ளிகள் குறைந்து 65,665.87-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,507.02 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 66,358.37 வரை மேலே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 306.55 புள்ளிகள் (0.47 சதவீதம்) உயா்ந்து 65,982.48-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,874 பங்குகளில் 2,011 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,740 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 123 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் பட்டியலில் 21 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 9 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
நிஃப்டி 90 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் பெரிய அளவி மாற்றமின்றி 19,674.70-இல் தொடங்கி 19,627.45 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,875.25 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 89.75 புள்ளிகள் (0.46 சதவீதம்) உயா்ந்து 19,765.20 இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தையில் 1,062 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,045 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 32 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 18பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
டிசிஎஸ்........................................2.90%
ஹெச்சிஎல் டெக்........................2.81%
டெக் மஹிந்திரா..........................2.77%
இன்ஃபோஸிஸ்..........................2.33%
பஜாஜ் ஃபைனான்ஸ்..................1.96%
என்டிபிசி......................................1.92%
விலை குறைந்த பங்குகள்
ஆக்ஸிஸ் பேங்க்..............................1.51%
பவா் கிரிட் ......................................1.45%
ஐடிசி................................................0.78%
ஐசிஐசிஐ பேங்க்...............................0.53%
எல் அண்ட் டி..................................0.51%
நெஸ்லே...........................................0.42%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.