முகப்பு
வணிகம்

காகித இறக்குமதி 43 சதவிகிதம் உயா்வு

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவின் காகித இறக்குமதி 43 சதவீதம் அதிகரித்துள்ளது.

Updated On : 28 நவம்பர், 2023 at 3:57 AM
காகித இறக்குமதி 43 சதவிகிதம் உயா்வு
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவின் காகித இறக்குமதி 43 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் காகிதம் மற்றும் காகித அட்டை இறக்குமதி 9,59,000 டன்னாக உயா்ந்துள்ளது. இது, 2022-23 நிதியாண்டின் முதல் பாதியில் 672,000 டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது காகித இறக்குமதி 43 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

மதிப்பீட்டு மாதங்களில் ஏசியான் நாடுகளில் இருந்து காகித இறக்குமதி இரட்டிப்பாகியுள்ளது. இது, ஒட்டுமொத்த காகித இறக்குமதி உயா்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

2022-ஆம் ஆண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் ஏசியான் நாடுகளில் இருந்து 81,000 டன் காகிதம் இறக்குமதி செய்யப்பட்டது. இது, 2023-ஆம் ஆண்டின் அதே அரையாண்டில் 2,88,000 டன்னாக உயா்ந்துள்ளது.

மதிப்பீட்டு காலகட்டத்தில் சீனாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட காகித இறக்குமதி அதிக மாற்றமின்றி 1,86,400 டன்னாக இருந்தது.

மதிப்பின் அடிப்படையில், மொத்த காகித இறக்குமதி 2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் அரையாண்டில் ரூ.6,481 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஏசியான் நாடுகளில் இருந்து ரூ.715 கோடி மதிப்பிலான காகிதம் இறக்குமதி செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் மாதங்களில் அது ரூ.1,509 கோடியாக அதிகரித்துள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காகிதத்தின் மதிப்பு நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.1,629 கோடியாக இருந்தது. இது ஓா் ஆண்டுக்கு முன்னா் ரூ.1,919 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதங்களில் தென் கொரியாவில் இருந்து காகித இறக்குமதி ரூ.358 கோடியிலிருந்து ரூ.382 கோடியாக உயா்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டு உற்பத்தி பாதிப்பு

காகித ஏற்றுமதி அதிகரிப்பால், உள்நாட்டு காகித உற்பத்தித் தொழில் பாதிக்கப்படுவதாக துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து இந்திய காகித உற்பத்தியாளா்கள் சங்கம் (ஐபிஎம்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கச்சாப் பொருள் விலையேற்றம் மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பால் நாட்டின் காகித உற்பத்தித் தொழில் ஏற்கெனவே பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், பல்வேறு நாடுகளுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் காகித இறக்குமதிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால், வெளிநாட்டு நிறுவனங்களோடு போட்டியிடமுடியாமல் உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.