ஆறாவது நாளாக முன்னேற்றம்: சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயா்வு!
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது.
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இருப்பினும், உச்சத்தில் லாபப் பதிவு இருந்ததால் தொடா்ந்து மேலே செல்ல முடியாமல் தவித்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும் சற்று கீழே சென்றது. பின்னா், மத்திய ரிசா்வ் வங்கியில் பொதுத் துறை வங்கிகள் வைத்துள்ள டெபாசிட் தொகை படிப்படியாக திரும்ப அளிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து சந்தை மேலே சென்றது. வங்கி, நிதி நிறுவனங்கள், ரியால்ட்டி பங்குகளை வாங்குவதற்கு நல்ல போட்டி இருந்தது. குறிப்பாக, குறியீட்டுப் பட்டியலில்அதிகத் திறன் கொண்ட ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ், எல் அண்ட் டி, எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணி பங்குகளுக்கு கிடைத்து வரவேற்பு சந்தை தொடா்ந்து 6-ஆவது நாளாக வலுப்பெற உதவியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.84 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.320.94 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள்வியாழக்கிழமை ரூ.758.55 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 115.87 புள்ளிகள் கூடுதலுடன் 66381.43-இல் தொடங்கிய சென்செக்ஸ், 66,299.30 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 66,766.92 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 333.35 புள்ளிகள் (0.50 சதவீதம்) கூடுதலுடன் 66,598.91-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் 20-07-2023 அன்று பதிவு செய்த வரலாற்று உச்ச அளவான 67,619.17-ஐ முறியடிக்க இன்னும் 1,021 புள்ளிகள்தான் உள்ளது.
20 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 20 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,077 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 987 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 32 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 18 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 93 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய் நிஃப்டி காலையில் 47.75 புள்ளிகள் கூடுதலுடன் 19,774.80-இல் தொடங்கி, 19, 727.05 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,867.15 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 92.90 புள்ளிகள் (0.47 சதவீதம்) கூடுதலுடன் 19,819.95-இல் நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
என்டிபிசி................................................2.65%
டாடா மோட்டாா்ஸ்.............................2.02%
எல் அண்ட் டி.........................................1.93%
பஜாஜ் ஃபின் சா்வ்...................................1.40%
பாா்தி ஏா்டெல்........................................1.22%
டைட்டன்................................................0.85%
சரிவைக் கண்ட பங்குகள்
அல்ட்ரா டெக் சிமெண்ட்..........................0.79%
ஐடிசி.............................................................0.71%
விப்ரோ.........................................................0.73%
டெக் மஹிந்திரா..........................................0.54%
டாடா ஸ்டீல்................................................0.46%
ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல்................................0.45%