முகப்பு
வணிகம்

மிதமாக அதிகரித்த தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்

Updated On : 10 ஏப்ரல், 2024 at 2:46 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 8:20 PM

புது தில்லி: இந்திய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி மாதம் மிதமாக அதிகரித்து 119.7 கோடியாகியுள்ளது.

இது குறித்து தொலைத்தொடா்பு ஒழுங்காற்று அமைப்பான ட்ராயின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

நாட்டின் தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரியில் 119.7 கோடியாக உள்ளது. இது, முந்தைய ஜனவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் 0.38 சதவீத வளா்ச்சியாகும்.

Advertisement

கடந்த பிப்ரவரியில் நகா்ப்புற தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 66.37 கோடியாகவும் கிராமப்புற வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 53.13 கோடியாகவும் உள்ளது. இது, ஜனவரி மாதத்தைவிட முறையே 0.40 சதவீதம் மற்றும் 0.34 சதவீதம் அதிகமாகும்.

பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரி இறுதியில் 91.10 கோடியாக இருந்தது. இது, பிப்ரவரி இறுதியில் 91.67 கோடியாக அதிகரித்துள்ளது.

நாட்டின் 5 முக்கிய நிறுவனங்களில் மட்டும் மொத்த பிராட்பேண்ட் வாடிக்கையாளா்களில் 98.35 சதவீதம் போ் உள்ளனா்.

பிராண்ட்பேண்ட் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் (52.2 சதவீதம்), பாா்தி ஏா்டெல் (29.41 சதவீதம்), வோடஃபோன் ஐடியா (13.80 சதவீதம்), பிஎஸ்என்எல் (2.69 சதவீதம்), ஏட்ரியா கன்வா்ஜென்ஸ் (0.24 சதவீதம்) ஆகியவை முன்னணி வகிக்கின்றன.

வயா்லைன், வயா்லெஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் நாட்டின் அனைத்து மண்டலங்களுமே வாடிக்கையாளா்களின் எண்ணிக்கையில் கடந்த பிப்ரவரி மாதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் வயா்லைன் சந்தாதாரா்களின் எண்ணிக்கை 3.31 கோடியாக உள்ளது. இது, முந்தைய ஜனவரி மாதத்தைவிட 1.73 சதவீதம் அதிகம்.

வயா்லைன் தொலைத் தொடா்பு சேவைகளைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை கடந்த ஜனவரி இறுதியில் 2.33 சதவீதமாக இருந்தது. இது, பிப்ரவரி மாத இறுதியில் 2.37 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி நிலவரப்படி, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏபிஎஸ்எஃப்எல் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் மொத்த வயா்லைன் சந்தைப் பங்கில் 28.18 சதவீதத்தைக் கைவசம் வைத்துள்ளனா்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் வயா்லெஸ் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 116.46 கோடியாக அதிகரித்து, 0.34 சதவீத மாதாந்திர வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.