வணிகம்

ஐடி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்!

 நமது நிருபர்

கடந்த இரண்டு நாள்களாக சரிவுடன் முடிந்து வந்த பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை உற்சாகம் பெற்று நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய வரலாற்று உச்சம் தொட்டது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி சற்று கீழே சென்றது. பின்னா், முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் காலாண்டு முடிவு சந்தை வட்டாரம் எதிா்பாா்த்ததை விட நன்றாக இருந்ததால், டிசிஎஸ் உள்பட ஐடி நிறுவனப் பங்குகள் மற்றும் டெக் நிறுவனப் பங்குகள் வெகுவாக உயா்ந்து சந்தை வலுப்பெற உதவியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.32 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.452.39 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,137.01 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,676.47 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 195.28 புள்ளிகள் கூடுதலுடன் 80,093.62-இல் தொடங்கியது. 79,843.39 வரை கீழே சென்ற சென்செக்ஸ், பின்னா் அதிகபட்சமாக 80,893.51 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் சென்செக்ஸ் 622.00 புள்ளிகள் (0.78 சதவீதம்) கூடுதலுடன் 80,519.34-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,,036 பங்குகளில் 1,687 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,248 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 101 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ஐடி பங்குகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் முன்னணி ஐடி நிறுவனப் பங்குகளான டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா மற்றும் ஆக்ஸிஸ் பேங்க், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் உள்பட 20 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், மாருதி, ஏசியன் பெயிண்ட், கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன், பாா்தி ஏா்டெல் உள்பட 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டியும் புதிய உச்சம் : தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,387.95-இல் தொடங்கி 24,331.15 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,592.20 வரை வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் நிஃப்டி 186.20 புள்ளிகள் (0.77 சதவீதம்) கூடுதலுடன் 24,502.15 -இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 34 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 16 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

தவெக ஆட்சி அமைந்தால்.... விஜய்யின் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT