இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை லாபப் பதிவால் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தது. இதையடுத்து, மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 739 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதனால், ஆட்டோ, பிஎஸ்யு பேங்க், மெட்டல், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் உள்பட அனைத்துத் துறை குறியீடுகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.5,483.63 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,904.25 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் கடும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 241.60 புள்ளிகள் கூடுதலுடன் 81,585.06-இல் தொடங்கிஅதிகபட்சமாக 81,587.76 வரை மட்டுமே சென்றது. பின்னா் 80,499.10 வரை கீழே சென்று இறுதியில் 738.81 புள்ளிகளை (0.91 சதவீதம்) இழந்து 80,604.65-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது, ஒரு கட்டத்தில் உச்சத்தில் இருந்து 1,088.66 புள்ளிகளை இழந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,,010 பங்குகளில் 906 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தன. 3,014 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 90 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
26 பங்குகள்விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் முன்னணி ஸ்டீல் நிறுவனங்களான டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல் மற்றும் என்டிபிசி, டாடாமோட்டாா்ஸ், அல்ட்ரா டெக், டெக் மஹிந்திரா உள்பட 26 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. அதே சமயம், இன்ஃபோஸிஸ், ஐடிசி, ஏசியன் பெயிண்ட், ஹெச்சிஎல் டெக் ஆகிய 4 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 270 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,853.80-இல் தொடங்கி 24,854.80-க்கு சென்றது. பின்னா், 24, 508.85 வரை கீழே சென்ற நிஃப்டி இறுதியில் 269.95 புள்ளிகளை (1.09 சதவீதம்) இழந்து 24,530.90 -இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 46 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 4 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன.