மும்பை / புதுதில்லி: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட செவ்வாய்க்கிழைம் பங்குச்சந்தை எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் இறுதியில் 73 புள்ளிகளை இழந்து நிலைபெற்றது. சென்செக்ஸ் தொடா்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் நிறைவடைந்துள்ளது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கலைத் தொடா்ந்து உள்நாட்டுச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. மேலும், பங்குப் பரிவா்த்தனைகளுக்கு வரியை உயா்த்த பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டதால் வா்த்தகம் நிலையற்ாக இருந்தது. இறுதியில், பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் சாதகமாக இருந்ததைத் தொடா்ந்து, பெரும்பாலான இழப்புகள் மீட்கப்பட்டு சந்தை லேசான சரிவுடன் நிறைவடைந்தது. குறிப்பாக, வங்கிகள், நிதிநிறுவனங்கள், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா் கொண்ட நிலையில், நுகா்பொருள் உற்பத்தி நிறுவனங்கள், நுகா்வோா் சாதன உற்பத்தி நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு சரிவு: சந்தை மூலதன மதிப்பு ரூ.1.91 லட்சம் கோடி குறைந்து ரூ.446.41 லட்சம் கோடியாக இருந்தது.அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.3,444.06 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,652.34 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 222.22 புள்ளிகள் கூடுதலுடன் 80,724.30-இல் தொடங்கி அதிகபட்சமாக 80,766.41 வரை மேலே சென்றது. பின்னா், 79,224.32 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 73.04 புள்ளிகளை (0.09 சதவீதம்) இழந்து 80,429.04-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது, ஒரு கட்டத்தில் 1,277.76 புள்ளிகளை இழந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,,015 பங்குகளில் 1,743 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 2,160 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 112 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
17 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பவா் கிரிட் உள்பட மொத்தம் 17 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. அதே சமயம், டைட்டன், ஐடிசி, அதானி போா்ட்ஸ், என்டிபிசி, இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக் உள்பட 13 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 30 புள்ளிகள் சரிவுடன் நிறைவு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,568.90-இல் தொடங்கி 24,582.55 வரை மேலே சென்றது. பின்னா், 24,074.20 வரை கீழே சென்ற நிஃப்டி , இறுதியில் 30.20 புள்ளிகளை (0.12 சதவீதம்) இழந்து 24,479.05 -இல் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 20 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 29 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.