நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியது: சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வு!
நிஃப்டி புதிய உச்சம்: சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்வு.
உலகளாவிய பங்குகளில் பெரும்பாலும் இன்றைய வர்த்தகத்தில் நேர்மறையான போக்கில் வர்த்தகமான நிலையில் மின்சாரம், மூலதன பொருட்கள் மற்றும் தொழில்துறை பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் வாங்கியதன் காரணமாக நிஃப்டி அதன் புதிய உச்சத்தை எட்டியது.
இன்றைய வர்த்தகத்தில், நிஃப்டி எஃப்எம்சிஜி சரிவுடன் வர்த்தகம் ஆன நிலையில், நிஃப்டி பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிஃப்டி எனர்ஜி ஆகியவை ஒரு சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்து வர்த்தகமானது.
இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 149.98 புள்ளிகள் உயர்ந்து 76,606 ஆகவும், நிஃப்டி 58.10 புள்ளிகள் உயர்ந்து 23,322.95 ஆகவும் இருந்தது. அதில் 2,288 பங்குகள் ஏற்றத்திலும், 1,149 பங்குகள் இறக்கத்திலும், 77 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் முறையே ஒரு சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்தது.
கோல் இந்தியா மற்றும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய இரண்டு பொதுத்துறை நிறுவன பங்குகள், இன்றைய நிஃப்டியில் அதிக லாபத்தைப் பதிவு செய்தன. இதனை தொடர்ந்து டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், லார்சன் & டூப்ரோ, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவை சென்செக்ஸ் பட்டியலில் அதிகபட்சமாக 2.54 சதவிகிதம் உயர்ந்தன. நேர்மாறாக மஹிந்திரா & மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்போசிஸ் மற்றும் டைட்டன் ஆகியவை பங்குகள் பின்தங்கியது.
ஆசிய சந்தைகளில், சியோல் மற்றும் ஷாங்காய் ஏற்றத்திலும், அதே நேரத்தில் டோக்கியோ மற்றும் ஹாங்காங் இறக்கத்தில் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் லாபத்துடன் வர்த்தகமாயின.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.16 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 82.87 அமெரிக்க டாலராக உயர்ந்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்று சுமார் ரூ.111.04 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.