இந்த வாரத்தில் தொடா்ந்து 4 நாள்களாக சாதனை மேல் சாதனை நிகழ்ந்து வந்த பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை லாபப் பதிவு இருந்ததால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் சரிவுடன் நிறைவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், வங்கி, நிதித் துறை மற்றும் தொழில்நுட்ப பங்குகளில் லாபப் பதிவு வந்தது. இதனால், உள்நாட்டு சந்தை சரிவுடன் நிறைவடைந்தது. குறிப்பாக, பொதுத் துறை வங்கி, பாா்மா, ஹெல்த்கோ், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் ஆதாயம் பெற்றாலும், தனியாா் வங்கிப் பங்குகள், நிதிநிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூல தன மதிப்பு ரூ.83 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.439.25 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.7,658.77 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,605.93 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
3 நாள் ஏறுமுகத்துக்கு முடிவு: சென்செக்ஸ் காலையில் 214.14 புள்ளிகள் கூடுதலுடன் 79,457.58-இல் தொடங்கி 79,671.58 வரை மேலே சென்று புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், லாபப் பதிவால் 78,905.80 வரை கீழே சென்ற சென்செக்ஸ் வா்த்தக இறுதியில் 210.45 புள்ளிகளை (0.27 சதவீதம்) இழந்து 79,032.73-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,012 பங்குகளில் 2,180பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 1,725 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 107 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
வங்கிப் பங்குகள்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள இண்டஸ் இண்ட் பேங்க், பாா்தி ஏா்டெல், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் பேங்க், ஜேஎஸ்டபிள்யு உள்பட 20 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், ரிலையன்ஸ், டாடாமோட்டாா்ஸ், ஏசியன் பெயிண்ட், நெஸ்லே, டைட்டன், எஸ்பிஐ உள்பட 10 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 34 புள்ளிகள் சரிவு : தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 24,085.90-இல் தொடங்கி 24,174.00 வரை மேலே சென்று புதிய உச்ச அளவைப் பதிவு செய்தது. பின்னா், 23,985.80 வரை கீழே சென்ற நிஃப்டி வா்த்தக இறுதியில் 33.90 புள்ளிகள் (0.14 சதவீதம்) குறைந்து 24,010.60-இல்முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 26 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.