இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கினாலும், பின்னா் எழுச்சி பெற்று நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 112 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை சரிவுடன் தொடங்கியது . இந்நிலையில், பிற்பகல் வா்த்தகத்தின் போது, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. குறிப்பாக, வங்கி, நிதிநிறுவனங்கள், மெட்டல், பாா்மா, ஹெல்த்கோ், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. இதனால், சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: வா்த்தக இறுதியில் சந்தை மூல தன மதிப்பு ரூ.397.39 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.2,117.50 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.2,709.81 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 187.82 புள்ளிகள் குறைந்து 71,866.01 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 72,863.56 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 111.66 புள்ளிகள் (0.15 சதவீதம்) 72,776.13-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,086 பங்குகளில் 1,777 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும்,2,180 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன. 129 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
16 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் ஏசியந் பெயிண்ட், சன்பாா்மா, ஹெச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், ஆகிஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்பட 16 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.அதே சமயம், டாடா மோட்டாா்ஸ், என்டிபிசி, எஸ்பிஐ, பாா்தி ஏா்டெல், டைட்டன், நெஸ்லே உள்பட 14 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இந்தன.
நிஃப்டி 49 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி வா்த்தக இறுதியில் 48.85 புள்ளிகளை (0.22 சதவீதம்) உயா்ந்து 22,104.05-இல் முடிவடைந்தது. வா்த்தகத்தின் போது 21,821.05 வரை கீழே சென்ற நிஃப்டி பின்னா் அதிகபட்சமாக 22,131.65 வரை மேலே சென்றது. நிஃப்டி பட்டியலில் 29 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 21 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.