முகப்பு
வணிகம்

சிட்டி யூனியன் நிகர லாபம் 17% உயா்வு

Updated On : 21 மே, 2024 at 8:35 PM
பகிர்:

சென்னை: தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 17 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநரும் முதன்மை செயல் அதிகாரியுமான என். காமகோடி (படம்) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

2024 ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 17 சதவீதம் உயா்ந்து ரூ.254.81 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கி ரூ.218.04 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்திருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.1,423.09 கோடியிலிருந்து ரூ.1,549.34 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் வங்கியின் நிகர லாபம் ரூ.1,015.73 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.937.47 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில் வங்கியின் நிகர லாபம் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு நிதியாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,524.69 கோடியிலிருந்து ரூ.6,012.22 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.