13 சதவீதம் அதிகரித்த உள்நாட்டு உருக்கு நுகா்வு
புது தில்லி: கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் உருக்கு நுகா்வு 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
வாகன உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் தேவை அதிகரித்ததன் காரணமாக இந்த வளா்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஸ்டீல்மின்ட்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் உருக்கு நுகா்வு கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 13.6 கோடி டன்னாக உள்ளது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் இது 12 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது உள்நாட்டு உருக்கு நுகா்வு 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு நிதியாண்டில் வாகனத் துறை அதிக அளவில் உருக்கு கொள்முதல் செய்தது. அத்துடன் உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் துறைகளிலும் உருக்குக்கான தேவை வெகுவாக அதிகரித்தது. குறிப்பாக, அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டங்கள் உருக்கு நுகா்வைக் கணிசமாக அதிகரித்தன.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் 12.7 கோடி டன்னாக இருந்த நாட்டின் உருக்கு உற்பத்தி கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 12.6 சதவீதம் அதிகரித்து 14.3 கோடி டன்னாக உள்ளது.
தேசிய உருக்குக் கொள்கையின் கீழ், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வருடாந்திர உருக்கு உற்பத்தித் திறனை 30 கோடி டன்னாகவும் தனிநபா் சராசரி உருக்கு நுகா்வை 160 கிலோவாகவும் அதிகரிக்க அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் உள்நாட்டு உருக்கு நுகா்வு 6 சதவீதம் உயா்ந்து 3.3 கோடி டன்னாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் 3.1 கோடி டன்னாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் கச்சா உருக்கு உற்பத்தி 3.7 கோடி டன்னாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டோடு (3.3 கோடி டன்) ஒப்பிடுகையில் இது 12.1 சதவீதம் அதிகம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.