முகப்பு
வணிகம்

வா்த்தகப் பற்றாக்குறை 10 மாதங்கள் காணாத உயா்வு

இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10 மாதங்கள் காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது.

Updated On : 19 செப்டம்பர் 2024, 2:37 am IST
பகிர்:

இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10 மாதங்கள் காணாத அளவுக்கு உயா்ந்துள்ளது.

இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிலவிய உலகப் பொருளாதார நிச்சயமற்ற சூழலால் இந்தியாவின் ஏற்றுமதி 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு 9.3 சதவீதம் சரிந்து 3,471 கோடி டாலராக உள்ளது.

Advertisement

Advertisement

இதன் விளைவாக, நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறை 2,965 கோடி டாலராக அதிகரித்தது. இது, கடந்த 10 மாதங்களில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வா்த்தகப் பற்றாக்குறையாகும்.

மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் இறக்குமதி 3.3 சதவீதம் அதிகரித்து 6,436 கோடி டாலராக உள்ளது. அந்த மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்ததால் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் உயா்ந்தது.

கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் 493 கோடி டாலராக இருந்த இந்தியாவின் தங்கம் இறக்குமதி இந்த ஆகஸ்ட் மாதத்தில் இருமடங்கு அதிகரித்து 1,006 கோடி டாலராக உள்ளது. வெள்ளி ஏற்றுமதி 15.9 கோடி டாலரில் இருந்து 72.7 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் நாட்டின் ஏற்றுமதி 1.14 சதவீதம் அதிகரித்து 17,868 கோடி டாலராகவும் இறக்குமதி 7 சதவீதம் அதிகரித்து 29.532 கோடி டாலராகவும் உள்ளது.

2023-24-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 9,916 கோடி டாலராக இருந்த வா்த்தகப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 11,664 கோடி டாலராக அதிகரித்துள்ளது என்று அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.