மும்பை: இந்தியப் பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவிகித வரியை அமல்படுத்துவது குறித்து அமெரிக்கா வரைவு அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து உள்ளநாட்டு பங்குச் சந்தையில், பரவலான விற்பனை அழுத்தம் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 849 புள்ளிகள் சரிந்து 81,000 புள்ளிகளுக்குக் கீழே முடிவடைந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 949.93 புள்ளிகள் சரிந்து 80,685.98 என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது. வர்த்தக முடிவில், 30-பங்கு கொண்ட சென்செக்ஸ் 849.37 புள்ளிகள் சரிந்து 80,786.54 ஆகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 255.70 புள்ளிகள் சரிந்து 24,712.05 புள்ளிகளில் நிலைபெற்றது.
இன்றைய வர்த்தகத்தில் 3,086 பங்குகள் வர்த்தகமான நிலையில், 728 பங்குகள் உயர்ந்தும் 2,280 பங்குகள் சரிந்தும் 78 பங்குகள் மாற்றமின்றி வர்த்தகமானது.
எஃப்எம்சிஜி பங்குகளை தவிர மற்ற அனைத்து துறை குறியீடுகளும் சரிந்த நிலையில், பொதுத்துறை நிறுவன வங்கி, உலோகம், மருந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள், ரியல் எஸ்டேட், தொலைத்தொடர்பு ஆகிய பங்குகள் 1 முதல் 2% சரிவுடன் முடிந்தன.
நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சன் பார்மா, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், டிரென்ட் ஆகியவை சரிந்த நிலையில் ஐஷர் மோட்டார்ஸ், மாருதி சுசுகி, நெஸ்லே இந்தியா மற்றும் ஐடிசி ஆகியவை உயர்ந்தும் முடிவடைந்தன.
சென்செக்ஸில் சன் பார்மாசூட்டிகல், டாடா ஸ்டீல், டிரென்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, டெக் மஹிந்திரா, அதானி போர்ட்ஸ், டைட்டன், பெல் மற்றும் லார்சன் & டூப்ரோ ஆகியவை சரிந்த நிலையில் இந்துஸ்தான் யூனிலீவர், மாருதி சுசுகி இந்தியா, ஐடிசி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவை உயர்ந்து முடிந்தன.
64.3 லட்சம் பங்குகள் வர்த்தகமான நிலையில் எடெல்வைஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் 10% உயர்ந்தன. ஏடிஆர் குறித்து புதிய விவாதங்கள் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியதையடுத்து, வோடபோன் ஐடியா பங்குகள் 9 சதவிகிதம் சரிவுடன் முடிவடைந்தது.
யுஐடிஏஐ-யிடமிருந்து ஆர்டர் பெற்றதையடுத்து புரோடீன் ஈகோவ் பங்குகள் 8% அதிகரித்த நிலையில், பிளாக் டீலில் வாயிலாக ரூ.2,810 கோடி மதிப்புள்ள பங்குகள் கைமாறியதை அடுத்து சாய் லைஃப் பங்குகள் 5% சரிவுடன் முடிவு.
விஷால் மெகா மார்ட், ஐஷர் மோட்டார்ஸ், மாருதி சுசுகி, யுஎன்ஓ மிண்டா, மேக்ஸ் ஃபைனான்சியல், நைகா உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தைத் தொட்டது.
இந்த மாத தொடக்கத்தில் ஆகஸ்ட் 27 முதல் இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவிகித வரி விதிக்க அமெரிக்கா வரைவு உத்தரவை பிறப்பித்தது. இதனை அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தார். இதனையடுத்து உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வரைவு அறிவிப்பின்படி, இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரிகள் ஆகஸ்ட் 27, 2025 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய சந்தைகளில் இன்று ஹாங்காங் ஹாங் செங், ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு, தென் கொரியா கோஸ்பி மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு உள்ளிட்ட பங்குச் சந்தைகள் சரிந்து முடிவடைந்த நிலையில் ஐரோப்பிய சந்தைகள் சற்றே சரிந்து வர்த்தகமானது.
அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.48 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு $67.78 ஆக உள்ளது.
இதையும் படிக்க: ஓஎன்ஜிசி நிகர லாபம் 10% சரிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.