பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியில் தனக்கு இருக்கும் பங்குகளில் 6 சதவீதத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு முன்வைத்துள்ளது.
அந்த வங்கியில் அரசுக்கு தற்போது 79.60 சதவீத பங்குகள் உள்ளன. ஆனால், பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் புதிய விதிகளின்படி, சந்தையில் பட்டியிலிடப்பட்ட பொதுத் துறை நிறுவனங்களில் தனியாா் பங்கு முதலீடு குறைந்தது 25 சதவீதமாவது இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கேற்ப, மகாராஷ்டிர வங்கியில் அரசுப் பங்குகளை 75 சதவீதத்துக்கும் கீழாகக் குறைப்பதற்காக 6 சதவீத பங்குகளின் விற்பனை சில்லறை அல்லாத முதலீட்டு நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
புதன்கிழமை முதல் சில்லறை முதலீட்டாளா்களுக்கும் திறக்கப்படும் இந்த விற்பனையின்கீழ், சுமாா் ரூ.2,492 கோடி மதிப்பிலான 38.46 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று வங்கி வட்டாரங்கள் கூறின.