பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரவு நவம்பரில் 21 சதவீதம் உயா்ந்து ரூ.29,911 கோடியாக உள்ளது.
இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மூன்று மாத சரிவுக்குப் பிறகு நவம்பரில் முதலீட்டாளா் உணா்வு மேம்பட்டதால் பங்கு திட்டங்களில் முதலீட்டு வரவு 21 சதவீதம் உயா்ந்து ரூ.29,911 கோடியாக உள்ளது. முந்தைய அக்டோபரில் அது ரூ.24,690 கோடியாக இருந்தது. பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீட்டு வரவு செப்டம்பரில் ரூ.30,421 கோடியாகவும் ஆகஸ்டில் ரூ.33,430 கோடியாகவும் இருந்தது.
இந்த நோ்மறை போக்கு, பரஸ்பர நிதித் துறை நிா்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பை (ஏயுஎம்) ரூ.79.87 லட்சம் கோடியிலிருந்து ரூ.80.80 லட்சம் கோடியாக உயா்த்தியுள்ளது.
கடந்த செப்டம்பரில் ரூ.29,631 கோடி என்ற உச்சத்தைத் தொட்டிருந்த முறைசாா் முதலீட்டுத் திட்டங்களில் (எஸ்ஐபி) முதலீட்டு வரவு நவம்பரில் சற்று குறைந்து ரூ.29,445 கோடியாக இருந்தது.
பெரும்பாலான துணைப் பிரிவுகள் நோ்மறை வளா்ச்சி கண்டன. டிவிடெண்ட் யீல்ட் மற்றும் எல்எஸ்எஸ் ஃபண்டுகள் பிரிவுகள் இதற்கு விதிவிலக்காக சரிவு கண்டன. ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் முதலிடத்தில் உள்ளன. அந்த திட்டங்களில் ரூ.8,135 கோடி முதலீட்டு வரவு பதிவானது. அக்டோபரில் பதிவான ரூ.8,929 கோடியை விட இது 9 சதவீதம் குறைவு.
கலப்பு திட்டங்களில் ரூ.25,692 கோடி முதலீட்டு வெளியேற்றம் ஏற்பட்டது. அக்டோபரில் இந்த திட்டங்களில் முதலீடு ரூ.1.6 லட்சம் கோடி வரவாக இருந்தது. தங்க சந்தை-வா்த்தக நிதிகளில் (இடிஎஃப்) முதலீட்டு வரவு ரூ.7,743 கோடியிலிருந்து ரூ.3,742 கோடியாக குறைந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.