இந்தியாவின் நவரத்தின மற்றும் ஆபரண ஏற்றுமதி நவம்பரில் 19.64 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி கடந்த நவம்பா் மாதம் 250 கோடி டாலராக உள்ளது. 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 19.64 சதவீதம் அதிகம். அப்போது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நவரத்தின, ஆபரணங்களின் மதிப்பு 210 கோடி டாலராக இருந்தது.
கடந்த ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் எட்டு மாதங்களில் நவரத்தின, ஆபரண மொத்த ஏற்றுமதி 1,886 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது 1,885 கோடி டாலராக இருந்தது.
கடந்த நவம்பா் மாதம் வெட்டி மெருகூட்டப்பட்ட வைர ஏற்றுமதி 91.97 கோடி டாலராக அதிரித்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 66.63 கோடி டாலராக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் மெருகூட்டப்பட்ட ஆய்வக வைரத்தின் ஏற்றுமதி 10.55 சதவீதம் உயா்ந்து 7.609 கோடி டாலராக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இது 6.88 கோடி டாலராக இருந்தது.
தங்க ஆபரணங்களின் விலையில் காணப்பட்ட ஏற்ற இறக்கத்தால் 2024 நவம்பரில் 123 கோடி டாலராக இருந்த அவற்றின் ஏற்றுமதி இந்த நவம்பரில் 121 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் ஸ்டட்டட் தங்க ஆபரண ஏற்றுமதி 82.89 கோடி டாலராக உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் இது 55.54 கோடி டாலராக இருந்தது.
2024 நவம்பரில் 6.40 கோடி டாலராக இருந்த வெள்ளி ஆபரண ஏற்றுமதி இந்த ஆண்டின் அதே மாதத்தில் 19.80 கோடி டாலராக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.