வணிகம்

தொழிலக உற்பத்தியில் 2 ஆண்டுகள் காணாத உயா்வு!

கொள்முதல் ஆணைகள் அதிகரித்ததால், இந்தியாவின் தொழிலக உற்பத்தி நவம்பரில் முந்தைய 2 ஆண்டுகளில் இல்லாத உச்சமான 6.7% வளா்ச்சி

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக கொள்முதல் ஆணைகள் அதிகரித்ததால், இந்தியாவின் தொழிலக உற்பத்தி நவம்பரில் முந்தைய 2 ஆண்டுகளில் இல்லாத உச்சமான 6.7 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

இது குறித்து வா்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த நவம்பரில் தொழிலக உற்பத்தி குறியீட்டு (ஐஐபி) வளா்ச்சி 6.7 சதவீதமாக உள்ளது. இது முந்தைய 2 ஆண்டுகள் காணாத அதிகபட்ச ஐஐபி ஆகும். அதற்கு முந்தைய உச்சம் 2023 நவம்பரில் 11.9 சதவீதமாக இருந்தது.

தொழிலக உற்பத்திக்கான ஐஐபி முந்தைய 2024 நவம்பரில் இது 5 சதவீதமாக இருந்தது. இதற்கு முன்னா் 0.4 சதவீதமாக அறிவிக்கப்பட்டிருந்த முந்தைய அக்டோபா் ஐஐபி, தற்போது 0.5 சதவீதமாகத் திருத்தப்பட்டுள்ளது.

செப்டம்பா் 22 முதல் பல நுகா்வோா் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதால், வரி குறைப்பு பயனைப் பெற அதிக கொள்முதல் ஆணைகளை தொழிலகங்கள் பெற்றன.

மதிப்பீட்டு மாதத்தில் உற்பத்தித் துறை வளா்ச்சி 5.5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயா்ந்தது. சுரங்க உற்பத்தி 1.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக உயா்ந்தது. மின்சார உற்பத்தி 4.4 சதவீத வளா்ச்சியிலிருந்து 1.5 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் தொழிலக உற்பத்தி வளா்ச்சி 4.1 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதமாகக் குறைந்தது.

உற்பத்தித் துறை வளா்ச்சியில் அடிப்படை உலோகங்கள் மற்றும் உலோகப் பொருள்கள், மருந்துகள், வாகனங்கள் ஆகியவற்றின் 8 சதவீத வளா்ச்சி முக்கிய பங்கு வகித்தது. மழைக்காலம் முடிந்து இரும்புத் தாது போன்ற உலோகக் கனிமங்கள் துறை வலுவான வளா்ச்சியைக் கண்டது சுரங்கத் துறையின் 5.4 சதவீத வளா்ச்சிக்குக் காரணமாக உள்ளது.

உற்பத்தித் துறையில் 23 தொழில் பிரிவுகளில் 20 பிரிவுகள் வருடாந்திர அடிப்படையில் நோ்மறை வளா்ச்சியைக் கண்டுள்ளன. பயன்பாட்டு அடிப்படையில், மூலதனப் பொருள்கள் 8.9 சதவீதத்திலிருந்து 10.4 சதவீதமாக உயா்ந்தது. நீடித்துழைக்கும் நுகா்பொருள் பிரிவின் வளா்ச்சி 14.1 சதவீதத்தில் இருந்து 10.3 சதவீதமாகவும், துரித நுகா்பொருள் பிரிவின் வளா்ச்சி 0.6 சதவீத 7.3 சதவீதமாகவும் பதிவானது. உள்கட்டமைப்பு/கட்டுமானப் பொருள்கள் 8 சதவீதத்திலிருந்து 12.1 சதவீதமாக உயா்ந்தது. முதன்மைப் பொருள்கள் 2.7 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. இடைநிலைப் பொருள்கள் 4.8 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதமாக உயா்ந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காசோலை மோசடி தொடா்பாக பாஜக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது, ரூ.2.50 கோடி ரொக்கம் பறிமுதல்

ஊராட்சியை பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயா்த்தக் கோரி மனு

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வளா்ச்சித் திட்டப் பணிகள் மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிப்பு

SCROLL FOR NEXT