கோப்புப் படம் 
வணிகம்

2025: தடைகளைக் கடந்து மீண்டெழுந்த பங்குச்சந்தை! - மீள்பார்வை

2025 ஆம் ஆண்டு பங்குச்சந்தை வர்த்தகம் எப்படி இருந்தது என்பது பற்றி...

எம். முத்துமாரி

உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்குகள் அதிக வெளியேற்றம், ரூபாயின் மதிப்பு குறைவது, தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு, உலக நாடுகளின் பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகிய தடைகள் இருந்தபோதிலும் பங்குச்சந்தைகள் இந்தாண்டு ஓரளவுக்கு லாபம் கண்டுள்ளன.

2025ல் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் சுமார் 8 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளன. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரூ. 30.20 லட்சம் கோடி அளவுக்கு லாபம் பெற்றுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட பல்வேறு தடைகள் இருந்தபோதிலும் உள்நாட்டு முதலீட்டாளர்களின் தொடர் முதலீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு மற்றும் இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றால் பங்குச்சந்தைகள் லாபமடைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2025 டிசம்பர் 29 நிலவரப்படி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சென்செக்ஸ் 6,556.53 புள்ளிகள்(8.39%) உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக டிச. 1 ஆம் தேதி 86,159.02 என்ற உச்சத்தை அடைந்து வரலாற்று சாதனை படைத்தது.

சென்செக்ஸில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 30,20,376.68 கோடி அதிகரித்துள்ளது. இதன் மூலம் பங்குகளின் மொத்த மதிப்பு ரூ. 4,72,15,483.12 கோடியாக (5.25 டிரில்லியன் அமெரிக்க டாலர்) உயர்ந்துள்ளது.

இதனால் சந்தேகத்திற்கு இடமின்றி 2025 ஆம் ஆண்டு முதலீட்டாளர்களின் சிறந்த ஆண்டு என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுவே 2024 ஆம் ஆண்டு சென்செக்ஸ் 5,898.75 புள்ளிகள்(8.16 சதவீதம்) உயர்ந்தது. நிறுவனங்களின் மொத்த மூலதனம் ரூ. 77.66 லட்சம் கோடி அதிகரித்து ரூ. 4,41,95,106.44 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டில் சந்தை மூலதனம் அதிகபட்சமாக ரூ. 81. 90 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டு பங்குச்சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றிருந்தாலும் 2025 ஆம் ஆண்டு பல்வேறு சவால்களுக்கு இடையே சந்தை முன்னேற்றம் கண்டிருப்பது வரலாற்றுச் சாதனை என்றே கூறுகின்றனர். ஏனெனில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் குறைவு, வெளிநாட்டுப் பங்குகள் வெளியேற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றுடன் பங்குச்சந்தை கடும் சவாலைச் சந்தித்துள்ளது, இந்திய முதலீட்டாளர்களும் ஒரு நிலைத்தன்மையை கொண்டிருந்ததும் இந்த முன்னேற்றத்திற்குக் காரணம் என்கின்றனர்.

குறிப்பாக உலக நாடுகள் மீதான அமெரிக்காவின் வரிவிதிப்பு இந்திய பங்குச்சந்தை மட்டுமின்றி உலக பங்குச்சந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறும் நிபுணர்கள், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் குறித்த எதிர்பார்ப்புகளால் சந்தைகள் கடுமையாகவே பாதிக்கப்பட்டன என்று தெரிவிக்கின்றனர்.

2025ல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூ. 1.6 லட்சம் கோடி (18 பில்லியன் அமெரிக்க டாலர்) பங்குகளை விற்றுள்ளனர். கடந்த 12 மாதங்களில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய நான்கு மாதங்களில் மட்டுமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகம் வாங்கியுள்ளனர். வெளிநாட்டு நிதி வெளியேற்றம் குறைவாக இருந்திருந்தால் பங்குச்சந்தை இன்னும் லாபம் கண்டிருக்கும் என்பதும் நிபுணர்கள் கருத்து.

செய்யறிவு(ஏஐ) பயன்பாடு, இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தாமதம், இந்தியாவின் பொருளாதாரம் மீதான நம்பிக்கை குறைதல் ஆகியவை இதற்கு காரணங்களாக கூறப்படுகின்றன.

அதேநேரத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு, பல்வேறு பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு ஆகியவை சந்தை மீள்வதற்கு காரணமாக இருந்துள்ளன.

தனியார் நிறுவனம் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் ஐபிஒ பங்குகள் இந்தாண்டு சந்தைக்கு பெரும் ஆதரவாக இருந்துள்ளன. இதில் டாடா நிறுவனத்தின் ரூ. 15,512 கோடி பங்களிப்பு இந்த பட்டியல் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து ஹெச்டிபி ஃபைனான்சியல் சர்வீசஸ் - ரூ. 12,500 கோடி, எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா - ரூ. 11,607 கோடி, ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் - ரூ. 8,750 கோடி, லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ் -ரூ. 7,278 கோடி ஆகியவை அடுத்த 4 இடங்களைப் பிடித்துள்ளன.

இதுமட்டுமன்றி எஸ்ஐபி முதலீடுகள், சில்லறை முதலீட்டாளர்களின் பங்குகள் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்தின்போது பெரிதும் கைகொடுத்துள்ளன.

சந்தை மதிப்பை பொருத்தவரை, முதலிடத்தில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 20,91,173 கோடி.

தொடர்ந்து எச்டிஎஃப்சி வங்கி - ரூ. 15,25,457.75 கோடி.

பார்தி ஏர்டெல் - ரூ. 11,86,978.75 கோடி

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் - ரூ. 11,77,199.05 கோடி

ஐசிஐசிஐ வங்கி - ரூ. 9,60,478.36 கோடி ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

நிஃப்டி 50 ஒட்டுமொத்தமாக 10% வளர்ச்சி பெற்றுள்ளது. உள்நாட்டு முதலீட்டாளர்கள் 2025 ஆம் ஆண்டு ரூ. 7.72 லட்சம் கோடி பங்குகளை வாங்கியுள்ளனர். டிசம்பரில் ரூ. 64,056 கோடி பங்குகளையும் அதிகபட்சமாக ஜனவரியில் ரூ. 86,591 கோடிக்கு முதலீடு செய்துள்ளனர். மார்ச், ஏப்ரலில் முதலீடு சற்று மந்தமடைந்த நிலையில் பின்னர் மே, ஜூனில் முன்னேற்றம் அடைந்தது.

அமெரிக்க வரிவிதிப்பு தாக்கம்

அமெரிக்க அதிபராக டிரம்ப் இந்தாண்டு தொடக்கத்தில் பதவியேற்ற பிறகு உலக நாடுகள் மீதான வரிவிதிப்பினால் 2025 ஏப்ரல் மாதம் பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது.

இந்தியா, சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் மீது அதிக வரி விதிப்பினால் இந்திய பங்குச்சந்தை குறிப்பாக ஏப்ரல் 2 முதல் 10 ஆம் தேதி வரை இதுவரை இல்லாத அளவு சரிவைச் சந்தித்தது. அதற்கு முன்னதாக கரோனா பரவல் நேரத்தில் 2020ல் பங்குச்சந்தை இதேபோல இறக்கம் கண்டது குறிப்பிடத்தக்கது. உலக பங்குச்சந்தைகளுக்கும் இதே நிலைமைதான்.

அதன்பிறகு அமெரிக்கா, மற்ற நாடுகளுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினால் பங்குச்சந்தை மீண்டது. மிக விரைவாகவே இந்திய பங்குச்சந்தை முன்னேற்றம் கண்டது. எனினும் இன்றுவரை இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படவில்லை என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு உள்ளது.

உலக நாடுகளின் போர்களும் பங்குச்சந்தை சரிவுக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்

ரூபாயின் மதிப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

டிச. 16 ஆம் தேதி அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.91.01ஆக சரிந்தது. அன்றைய நாளில் அதிகபட்சமாக ரூ.91.14-யை எட்டியது. பின்னர் ரூபாயின் மதிப்பு சற்று மீண்டு டிச. 29 அன்று ரூ. 89.98 ஆக இருந்தது.

தங்கம், வெள்ளி

தங்கம் மற்றும் வெள்ளியில் உலக நாடுகளின் முதலீடு அதிகரித்து வருவதால் சந்தையில் அவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளியின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 165%, தங்கம் விலை 82% உயர்ந்துள்ளது.

சென்னை நிலவரப்படி ஜனவரி தொடக்கத்தில் 22 காரட் ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் விலை ரூ. 57,000 ஆக இருந்த நிலையில் டிச. 27ல் அதிகபட்சமாக ரூ. 1,04,800 ஆக அதிகரித்துள்ளது. ஓராண்டில் தங்கம் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஜனவரியில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ. 45,000 ஆக இருந்த நிலையில் டிச. 27ல் அதிகபட்சமாக ரூ. 2,85,000 யை எட்டியுள்ளது.

இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் சூழலிலும் உலக நாடுகளின் போர் பதற்றம் குறையும்பட்சத்தில் பங்குச்சந்தை முதலீடுகள் வரும் ஆண்டில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

India stock market sees highest ever FPI outflows in 2025

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோடியக்கரை கடலில் தவறி விழுந்த இடிந்தகரை மீனவர் உடல் மீட்பு

டி20 உலகக் கோப்பைக்கான ஓமன் அணி அறிவிப்பு!

கேரள இசை நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் 6 பேருக்கு மூச்சுத் திணறல்!

2,000 தொழில்நுட்ப கலைஞர்கள், 6 மாத உழைப்பு... மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு நிறைவு!

மகரவிளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்பட்ட சபரிமலை கோயில்!

SCROLL FOR NEXT