அந்நிய நிதி வெளியேற்றம்! சென்செக்ஸ் 420, நிஃப்டி 117 புள்ளிகள் சரிந்து முடிவு!
சென்செக்ஸ் 424.90 புள்ளிகள் குறைந்து 75,311.06 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 117.25 புள்ளிகள் குறைந்து 22,795.90 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: அந்நிய நிதி வெளியேற்றம், பலவீனமான அமெரிக்க சந்தைகள் மற்றும் கட்டண அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், வாரத்தின் கடைசி நாளான இன்று பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 202.21 புள்ளிகள் குறைந்து 75,533.75 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 63.5 புள்ளிகள் குறைந்து 22,849.65 புள்ளிகளாக இருந்தது.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 424.90 புள்ளிகள் குறைந்து 75,311.06 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 117.25 புள்ளிகள் குறைந்து 22,795.90 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள மஹிந்திரா & மஹிந்திரா, கோடக் மஹிந்திரா வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், மாருதி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் சோமேட்டோ, டாடா ஸ்டீல், என்டிபிசி, லார்சன் அண்ட் டூப்ரோ ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தது.
ஜூன் 05, 2024 க்குப் பிறகு முதல் முறையாக நிஃப்டி 22,800 க்கு கீழே முடிவடைந்தது. சென்செக்ஸ் 425 புள்ளிகள் குறைந்து 75,311 ஆகவும், நிஃப்டி பேங்க் 353 புள்ளிகள் சரிந்து 48,981 ஆகவும், மிட்கேப் குறியீடு 648 புள்ளிகள் சரிந்து 50,486 ஆகவும் இருந்தது.
நிஃப்டி மெட்டல் தவிர, அனைத்து துறை குறியீடுகளும் சரிந்து முடிந்தது. மஹிந்திரா அண்ட மஹிந்திரா கிட்டத்தட்ட 7 சதவிகிதம் சரிந்தது. இது அதன் ஏழு மாதங்களில் உள்ள மோசமான வீழ்ச்சியாகும். நிஃப்டி ஆட்டோ கடந்த 13 அமர்வுகளில் 11 முறை இழப்பை பதிவு செய்தது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.3,311.55 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
ஆசிய சந்தைகளில் சியோல் மற்றும் டோக்கியோ சரிந்தும் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயரந்தும் முடிந்தது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தது.
குறிப்பாக மலிவான விலையில் கிடைக்கும் சீன பங்குகள் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் எஃப்ஐஐ விற்பனை தொடர வாய்ப்புள்ளது. எஃப்ஐஐ விற்பனை தொடர்வதால் லார்ஜ்கேப் பங்குகள் மீதான அழுத்தம் வெகுவாக ஏற்படுத்தும்.
இன்றைய வர்த்தகத்தில் 2,916 பங்குகள் வர்த்தகமான நிலையில், 1,100 பங்குகள் உயர்ந்தும் 1,744 பங்குகள் சரிந்தும் 72 பங்குகள் மாற்றமின்றி முடிந்தது.
உலகளாவிய பிரெண்ட் எண்ணெய் 0.04 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 76.45 டாலராக உள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஒரே இரவில் வீழ்ச்சி, வர்த்தகத்தை சீர்குலைக்கும் டிரம்ப் கட்டணங்கள், தொடர்ச்சியான அமெரிக்க பணவீக்கம் மற்றும் வட்டி விகிதக் குறைப்புகளில் எச்சரிக்கையான ஃபெட் அணுகுமுறை ஆகியவை பங்குச் சந்தை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) சென்செக்ஸ் 203.22 புள்ளிகள் சரிந்து 75,735.96 ஆக முடிவடைந்தது. நிஃப்டி 19.75 புள்ளிகள் குறைந்து 22,913.15 ஆக இருந்தது.
இதையும் படிக்க: வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்த எஸ்பிஐ