இந்திய ஏற்றுமதி 3,801 கோடி டாலராக குறைவு
கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி ஒரு சதவீதம் குறைந்து 3,801 கோடி டாலராக உள்ளது.
புது தில்லி: கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி ஒரு சதவீதம் குறைந்து 3,801 கோடி டாலராக உள்ளது.
இது குறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பர் மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த பொருள்கள் ஏற்றுமதி 3,801 கோடி டாலராக உள்ளது.
முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது ஒரு சதவீதம் குறைவாகும்.
மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் இறக்குமதி 4.8 சதவீதம் அதிகரித்து 5,995 கோடி டாலராக உள்ளது. இது, 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் 5,715 கோடி டாலராக இருந்தது.
கடந்த டிசம்பரில் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையிலான வேறுபாடான வர்த்தக பற்றாக்குறை 2,194 கோடி டாலராக உள்ளது.
நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் மாதங்களில் ஏற்றுமதி 1.6 சதவீதம் அதிகரித்து 32,171 கோடி டாலராகவும் இறக்குமதி 5.15 சதவீதம் அதிகரித்து 53,248 கோடி டாலராகவும் உள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.