நிஃப்டி 113.15 புள்ளிகள், சென்செக்ஸ் 330 புள்ளிகள் சரிவு!
வாரத்தின் இறுதிநாளான இன்று நிஃப்டி 113.15 புள்ளிகளும் சென்செக்ஸ் 330 புள்ளிகளும் சரிவுடன் வணிகம் நிறைவு
பங்குச் சந்தை வணிகத்தில், வார இறுதி நாளான இன்று நிஃப்டி 113 புள்ளிகள் சரிந்தும், சென்செக்ஸ் 330 புள்ளிகள் சரிந்த நிலையில் வணிகம் நிறைவுற்றது.
முன்னதாக, இன்றைய வணிகத்தின்போது, இரு பங்குச் சந்தைகளிலும் சரிவு நிலை காணப்பட்டது. நிஃப்டி 0.67 சதவீதம் அதாவது 23,050 என்ற புள்ளிகளிலும் சென்செக்ஸ் 0.56 சதவீதம் சரிந்து அதாவது 76,091.7 என்ற புள்ளிலும் வணிகமானது.
நிஃப்டி பங்குச் சந்தையில் இன்று ஹிந்துஸ்தான் யூனிலிவர், எய்சர் மோட்டார்ஸ், பிரிட்டானியா இன்டஸ்ட்ரிஸ் ஆகியவற்றின் பங்குகள் அதிக லாபம் பெற்றன. டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்டிரிஸ், டிரென்ட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்குகள் நட்டத்தை சந்தித்தன.
இந்திய பங்குச் சந்தைகள் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத வகையில், தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் சரிவிலேயே வணிகம் நிறைவு பெற்றுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரண்டு நாள்களாக சற்று ஏறியிருந்த பங்குகள் மூலம், லாபத்தைப் பார்த்த முதலீட்டாளர்கள் கூட, இன்றைய வணிகத்தின்போது நேரிட்ட சரிவால் நட்டமடைந்துள்ளனர்.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து ரூ.86.21 ஆக இருந்தது. வியாழக்கிழமை வணிகம் நிறைவு பெற்றபோது இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.86.47 காசுகளாக இருந்தது.