சென்னை: வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ. 22.57 கோடியாக உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 22.57 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ. 12.58 கோடியாகப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 69.86 கோடியாக உயா்ந்துள்ளது. இது முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.31.04 கோடியாக இருந்தது.
நிறுவனத்தின் வருவாய் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.1,131 கோடியிலிருந்து ரூ.1,058 கோடியாகவும், முதல் ஒன்பது மாதங்களில் ரூ.3,452 கோடியிலிருந்து ரூ.3,230 கோடியாகவும் குறைந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.