மும்பை: உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுப்பது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜூலை 9 ஆம் தேதி வரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 50 சதவிகித வரிகளை தாமதப்படுத்துவது ஆகிய பல காரணத்தால் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்து முடிந்தன.
30 பங்குகளை கொண்ட மும்பை பங்கு சந்தை பெஞ்ச்மார்க் அளவான சென்செக்ஸ், இன்றைய காலை நேர வர்த்தகத்தில் 771.16 புள்ளிகள் உயர்ந்து 82,492.24-ல் இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 455.37 புள்ளிகள் உயர்ந்து 82,176.45 புள்ளிகளாகவும், நிஃப்டி 148 புள்ளிகள் உயர்ந்து 25,001.15 ஆக நிலைபெற்றது.
பருவமழை முன்கூட்டியே தொடங்கியதும், ரிசர்வ் வங்கி 2025 நிதியாண்டில் அரசுக்கு ரூ.2.69 லட்சம் கோடி ஈவுத்தொகையை அறிவித்ததும் சந்தைகளின் நம்பிக்கையான போக்கை அதிகரித்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கியானது, மத்திய அரசுக்கு ரூ.2.69 லட்சம் கோடி ஈவுத்தொகையை அறிவித்தது. இது 2023-24 ஐ விட 27.4 சதவிகிதம் அதிகமாகும். மேலும் இது அமெரிக்க வரிகள் மற்றும் பாகிஸ்தானுடனான மோதல் காரணமாக பாதுகாப்புக்கான அதிகரித்த செலவினங்களால் ஏற்படும் சவால்களை சமாளிக்க கருவூலத்திற்கு வெகுவாக உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸில் மஹிந்திரா அண்டு மஹிந்திரா, எச்.சி.எல். டெக், டாடா மோட்டார்ஸ், நெஸ்லே, ஐ.டி.சி, இந்துஸ்தான் யூனிலீவர், லார்சன் & டூப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை உயர்ந்தும் இதற்கு நேர்மாறாக எடர்னல் 4.51 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமென்ட், பவர் கிரிட், டாடா ஸ்டீல் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.
இதனிடையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது கடுமையான வரிகளை விதிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க பரிசீலிக்க அமெரிக்கா எடுத்த முடிவும், டாலர் குறியீட்டில் ஏற்பட்ட சரிவு, உள்நாட்டில் பங்குச் சந்தைகளில் மீட்சிக்கு வழிவகுத்தது.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கி 225 குறியீடும் உயர்ந்த நிலையில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
ஐரோப்பாவில் சந்தைகள் இன்றைய மத்திய நேர வர்த்தகத்தில் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சரிவுடன் முடிவடைந்தன.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரூ.1,794.59 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.17 சதவிகிதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு $64.89 ஆக உள்ளது.
இதையும் படிக்க: அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ் நிகர லாபம் 8% அதிகரிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.