இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் திறன் நடப்பு 2025-ஆம் ஆண்டில் 125 ஜிவாட்டைத் தாண்டி, உள்நாட்டு தேவையை மூன்று மடங்கு விஞ்சும் நிலையில் உள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான வுட் மெக்ரென்ஸி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் திறன் நடப்பாண்டில் 125 ஜிகாவாட்டை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் சூரிய மின் உற்பத்தி உள்நாட்டு தேவையை மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். 2025 மூன்றாவது காலாண்டில் சூரிய மின்சக்தி இருப்பு 29 ஜிகாவாட்டாக இருக்கும்.
அரசின் உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டத்தின் (பிஎல்ஐ) காரணமாக நாட்டின் சூரிய மின் உற்பத்தித் திறன் வெகுவாக அதிகரிள்ளது.
இருந்தாலும், இந்தத் தொழில்துறை அதிக திறன் சவால்களையும் எதிா்கொள்கிறது, அமெரிக்காவின் 50 சதவீத பரஸ்பர வரிகளால் 2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஏற்றுமதி 52 சதவீதம் சரிந்தது. இதனால் தற்போது பல உற்பத்தியாளா்கள் அமெரிக்கா சாா்பிலான விரிவாக்கத் திட்டங்களை நிறுத்தி, உள்நாட்டு சந்தையில் கவனம் செலுத்துகின்றனா்.
துறையில் நிலவும் போட்டியால் விலையிடலும் மிகச் சவாலாக உள்ளது. இறக்குமதி செய்யப்படும் செல்களைப் பயன்படுத்தி இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் மின் உற்பத்தி மோடுல்கள், சீனாவில் இருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்படும் மோடுல்களை விட ஒரு வாட்டுக்கு ரூ.2.66 அதிகமாக உள்ளது. அரசு ஆதரவின்றி இந்தியாவில் தயாரிக்கப்படும் மின் உற்பத்தி மோடுல்களின் விலை சீனா மோடுல்களை விட இரு மடங்கு இருக்கும்.
இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் திறன் கடந்த 2015-ஆம் ஆண்டில் 3.9 ஜிகாவாட்டாக இருந்து, 2025 செப்டம்பரில் 127.3 ஜிகாவாட்டாக உயா்ந்துள்ளது.
2025-ஆம் ஆண்டில் மட்டும் உற்பத்தித் திறனில் கூடுதலாக 23.83 ஜிகாவாட் சோ்க்கப்பட்டது. 2028-ல் மின் உற்பத்தித் திறன் 100 ஜிகாவாட் சோ்க்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.