மும்பை: மருந்து, வங்கிப் பங்குகள் மற்றும் அந்நிய நிதி வரத்து தொடர்ந்ததால், இன்றைய வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் கிட்டத்தட்ட 329 புள்ளிகள் உயர்ந்து முடிவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 482.01 புள்ளிகள் உயர்ந்து 82,654.11 புள்ளிகளாக இருந்தது. இது இன்றைய இன்ட்ராடே வர்த்தகத்தின் புதிய உச்சமாகும். வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 328.72 புள்ளிகள் உயர்ந்து 82,500.82 புள்ளிகளாக இருந்தது. 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி முடுவில் 103.55 புள்ளிகள் உயர்ந்து 25,285.35 புள்ளிகளாக நிலைபெற்றது. அதே வேளையில், இன்றைய அமர்வில் நிஃப்டி 148.95 புள்ளிகள் உயர்ந்து 5,330.75 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
சென்செக்ஸில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, மாருதி சுசுகி இந்தியா, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, பிஇஎல், அதானி போர்ட்ஸ், எடர்னல், சன் பார்மாசூட்டிகல்ஸ், பவர் கிரிட், ஐடிசி, அல்ட்ராடெக் சிமென்ட், டிரென்ட், எச்சிஎல் டெக்னாலஜிஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை உயர்ந்தும் மறுபுறம் டாடா ஸ்டீல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா, டைட்டன், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை சரிந்தும் முடிவடைந்தன.
நிஃப்டி வங்கி குறியீடு 0.6 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்து 56,547.60 ஆக இருந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி மற்றும் கனரா வங்கி குறியீடுகள் தலா ஒவ்வொன்றும் 1 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்து முடிந்தன.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை வழிநடத்த அரசு, தனியார் துறை நிபுணர்களை அழைத்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்களின் மனநிலை வெகுவாக மேம்பட்டதும், அதே வேளையில் வங்கி மற்றும் மருந்துப் பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கியதால், இந்திய பங்குச் சந்தைகள் உயர்ந்தன.
அமெரிக்கா, குறிப்பாக சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டு நிறுவனங்களுடனான உயிரி தொழில்நுட்ப உறவுகளை துண்டிக்கும் நோக்கில், பயோசெக்யூர் சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியதால், பார்மா பங்குகள் உயர்ந்தன. இது இந்தியவின் ஒப்பந்த மேம்பாடு மற்றும் உற்பத்தி அமைப்புக்கு (CDMO) வலுவான ஊக்கத்தை அளிக்கும்.
ஆசிய சந்தைகளில் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு, டோக்கியோவின் நிக்கேய் 225 குறியீடு மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு ஆகியவை சரிவுடன் முடிவடைந்த நிலையில் சியோலின் கோஸ்பி உயர்ந்து முடிவடைந்தன. ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்ற-இறக்கத்தில் வர்த்தகமானது.
அமெரிக்க சந்தைகள் அவற்றின் உச்சத்திலிருந்து சரிந்து நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.
நேற்று (அக்டோபர் 9) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக பங்குகளை வாங்குபவர்களாக இருந்ததால், சந்தைகளின் ஏற்றத்திற்கு இதுவும் வழிவகுத்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் 0.63 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 64.81 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
இதையும் படிக்க: டிசிஎஸ் நிகர லாபம் ரூ.12,075 கோடியாக உயா்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.