சுமார் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக விலையில் மாற்றமின்றி, அதிகம் விற்பனையாகிவந்த பார்லே-ஜியின் ரூ.5 மற்றும் ரூ.10-க்கு விற்கப்பட்ட பாக்கெட்டுகளின் விலை ஜிஎஸ்டி மறுசீரமைப்பால் சற்றுக் குறைந்துள்ளது.
இந்தியாவில், அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் மீது, ஜிஎஸ்டி 2.0 நிச்சயம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லும் அளவுக்கு ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.
அதாவது, விலை குறைந்த, ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள்கள், பொதுவாக அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் பொருள்களாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில், விலையை உயர்த்தாமல், பல ஆண்டு காலமாக, ரூ.5க்கு விற்பனையாகி வந்த பார்லே-ஜி பிஸ்கெட் விலை தற்போது ரூ.4.45க்கு விற்பனையாகிறது.
அது மட்டுமல்ல, இதுவரை ஒரு ரூபாய்க்கு விற்பனையாகி வந்த சாக்லேட் விலைகள் 88 பைசாவாகக் குறைந்திருக்கிறது. இனி, ஒரு ரூபாய் சில்லறை இல்லை என ஒரு சாக்லேட் கொடுக்க முடியாத நிலை பாவம் கடைக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமா, ஒரு பாக்கெட் வாங்கினால் போதும் இரண்டு தலைக்கு என்ற நிலையில் இருக்கும் ஏழை மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.2 ஷாம்பு பாக்கெட் விலைகளும் கணிசமாகக் குறைந்துள்ளது. இனி, அவை ரூ.1.77க்கு விற்பனையாகும்.
போர்ன்விடா ரூ.30 பாக்கெட் ரூ.26.69க்கும், ஓரியோ பிஸ்கெட் ரூ.10க்கு பதிலாக ரூ.8.90க்கும் ஜெம்ஸ் மற்றும் 5ஸ்டார் சாக்கெட் விலைகள் ரூ.20லிருந்து ரூ.17.80க்கும் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், கையில் காசு கொடுத்து பொருள்கள் வாங்குவோருக்கு இந்த விலைக் குறைப்புகள் எல்லாம் சென்று சேருமா என்றால் சேராது என்றே கணிக்கப்படுகிறது.
பால் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்கள் பூஜ்ய வரி முறைக்கும், அத்தியாவசியப் பொருள்கள் 5 சதவீத ஜிஎஸ்டி வரம்பிலும், தேவையான சேவைகள் மற்றும் சரக்கு 18 சதவீத வரி விதிப்பிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.
எப்படி வரும் இந்த விலை மாற்றம்?
இரண்டு ரூபாய் ஷாம்பு விலையை ரூ.1.77 ஆகக் குறைத்துவிட்டாலும், இது மக்களுக்கு எவ்வாறு பயன்தரும் என்பது ஆராயப்பட வேண்டியதாக உள்ளது.
இந்த விலை மாற்றம், நிச்சயம் கையில் காசு கொடுத்து பொருள்கள் வாங்கும் ஏழை மக்களுக்கு பயன்தராது என்பதால், பல்வேறு நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், அரசின் விளக்கத்துக்காகக் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதாவது, மிகக் குறைந்த பைசாக்களில் விலைகள் குறைந்திருப்பதால், விலையைக் குறைக்காமல், பொருள்களின் எடையில் மாற்றம் கொண்டு வரலாமா என்று நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.
ஒன்று, யுபிஐ மூலம் பொருள்கள் வாங்க சொல்லலாம், அதன் மூலம் உரிய தொகையை பைசாவாகவும் செலுத்த முடியும். இல்லையென்றால், முழு எண்ணிக்கையில் தொகையை மாற்ற அதிகளவில் பொருள்களை வாங்க ஊக்குவிக்க வேண்டியது இருக்கும் என்கிறார்கள் நிறுவன மேலாளர்கள்.
பொதுவாக, பொருள்களின் எடையை சற்று கூடுதலாக்கி, இந்த விலைக் குறைப்பை ஈடுகட்டுவது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஒப்புதல் கிடைத்தபிறகே, முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதாவது, இதுவரை ரூ.5, ரூ.10, ரூ.20 என்ற மேஜிக் விலைப் பட்டியல்களை சில நிறுவனங்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பணவீக்கம் அதிகரிக்கும்போதெல்லாம், இந்த நிறுவனங்கள் விலையை அதிகரிக்காமல், பொருள்களின் எடையை சற்று குறைத்து நிலைமையை சரிகட்டு வந்தன.
ஆனால், இந்த நடைமுறையால், மிகப்பெரிய பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிக்கலாக இருந்து வந்ததாகவும், இதனை, ஜிஎஸ்டி 2.0 மறுசீரமைப்பின்போது சற்று விட்டுக் கொடுக்கலாம் என்றும் பெரிய நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
இதையும் படிக்க... விமானங்களில் 13வது இருக்கை எண் இருக்காதா? நம்பிக்கையும் உண்மையும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.