மும்பை: இந்த வார இறுதியில் ரிசர்வ் வங்கி வட்டி விகித குறித்த அறிவிப்பை முன்னிட்டும், தொடர்ச்சியாக அந்நிய நிதியானது வங்கிப் பங்குகளை விட்டு வெளியேறுவதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தொடர்ந்து ஏழாவது நாளாக சரிவுடன் முடிவடைந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதிகபட்சமாக 80,851.38 புள்ளிகளும் பிறகு குறைந்தபட்சமாக 80,248.84 புள்ளிகளை எட்டிய நிலையில், ஏற்றம் மற்றும் சரிவின் இடையில் சுழன்ற வந்த இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 61.52 புள்ளிகள் சரிந்து 80,364.94 ஆகவும் 50-பங்கு கொண்ட நிஃப்டி 19.80 புள்ளிகள் சரிந்து 24,634.90 ஆக நிலைபெற்றது. தொடர்ந்து முதலீட்டாளர்களின் விற்பனையால் நிஃப்டி தொடர்ந்து ஏழு அமர்வுகளில் 3 சதவிகிதத்திற்கும் அதிகமாக சரிந்தது.
சென்செக்ஸில் மாருதி, ஆக்சிஸ் வங்கி, லார்சன் & டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல், இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் ஆகியவை சரிந்தும் டைட்டன், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, எடர்னல் மற்றும் டிரென்ட் ஆகியவை உயர்ந்தும் முடிந்தன.
நிஃப்டி-யில் ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி, எல் அண்ட் டி, அப்பல்லோ மருத்துவமனைகள், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் ஆகியவை சரிந்த நிலையில் எடர்னல், பாரத் எலக்ட்ரானிக்ஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டைட்டன் கம்பெனி, விப்ரோ ஆகிய பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.
எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத்துறை வங்கி, எரிசக்தி, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் தலா 1 சதவிகிதம் அதிகரித்த வேளையில் மீடியா குறியீடு கிட்டத்தட்ட 1 சதவிகிதம் சரிந்து முடிந்தன.
தொடர்ந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனையை செய்து வருவதால், முதலீட்டாளர்கள் கடந்த சில அமர்வுகளாக மிகவும் எச்சரிக்கையாக இருந்ததால் உள்நாட்டு பங்குச் சந்தை நிலையற்ற அமர்வில் முடிவடைந்தன. இதற்கிடையில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்ம் குறித்த தெளிவின்மையால் ஐடி மற்றும் மருந்து குறியீடுகள் மீதான நீண்டகால அழுத்தம் குறித்து கவலையில் முதலீட்டாளர்கள் ஆழ்ந்தனர்.
எஃப்&ஓ தடையிலிருந்து பங்குகள் வெளியேறியதால் சம்மன் கேபிடல் பங்குகள் 11% க்கும் அதிகமாக உயர்ந்தன. ரூ.32 கோடி மதிப்புள்ள பேக்கிங் ஆர்டரில் பெற்றதையடுத்து எஸ்.இ.பி.சி. பங்குகள் 1% அதிகரிப்பு. வீல்ஸ் இந்தியா பங்குகள் தென் கொரிய நிறுவனத்துடன் தொழில்நுட்ப ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால் 4% அதிகரித்தன. ரிலையன்ஸ் பவர் இந்தோனேசியாவின் நிலக்கரி துணை நிறுவனங்களை பயோடிரஸ்டருக்கு 12 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்ததால் 1% அதிகரித்தது.
ரேஸ்மோசா எனர்ஜியில் 76% பங்குகளை வாரீ எனர்ஜிஸ் வாங்கியதால் அதன் பங்குகள் 2% உயர்ந்தன. இன்டர்ஆர்க் பில்டிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் அதன் புதிய ஆலையில் ரூ.100 கோடி முதலீடு செய்யவுள்ளதால் அதன் பங்குகள் 2% சரிந்தன. அதானி இன்ஃப்ராவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வாஸ்கான் இன்ஜினியர்ஸ் கையெழுத்திட்டதால் அதன் பங்குகள் 11% உயர்ந்தன. சிஜிஎஸ்டி அபராதம் விதித்த பிறகு சம்பல் பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் 2% சரிந்தன.
சுப்ரீம் பெட்ரோ, உஷா மார்ட்டின், டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப், இந்தியன் வங்கி, ஆர்பிஎல் வங்கி, மிண்டா கார்ப் உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட பங்குகள் பிஎஸ்இ-யில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.
ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்த நிலையில் ஜப்பான் நிக்கேய் 225 குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் உயர்ந்த நிலையில், அமெரிக்க சந்தைகள் வெள்ளிக்கிழமை அன்று உயர்ந்து முடிந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் செப்டம்பர் 27ஆம் தேதியன்று ரூ.5,687.58 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5,843.21 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.25 சதவிகிதம் குறைந்து ஒரு பீப்பாய் ஒன்றுக்கு 69.25 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: பெங்களூரில் வீடுகளின் விற்பனை 21% அதிகரிக்கும்: ப்ராப் ஈக்விட்டி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.