முகப்பு
வணிகம்

யுபிஐ பரிவா்த்தனை மாா்ச்சில் புதிய உச்சம்

மாா்ச்சில் மட்டும் ரூ.29.53 லட்சம் கோடி மதிப்பிலான பரிவா்த்தனைகள்

Updated On : 3 ஏப்ரல் 2026, 4:12 am IST
பகிர்:

இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ, கடந்த மாா்ச் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஹோலி, ரமலான் போன்ற பண்டிகைகள் மற்றும் நிதியாண்டு இறுதி கணக்கு முடிப்புகள் காரணமாக, மாா்ச்சில் மட்டும் ரூ.29.53 லட்சம் கோடி மதிப்பிலான பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக இந்திய தேசிய பரிவா்த்தனை கழகம் (என்பிசிஐ) தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 19 சதவீத வளா்ச்சியாகும். அதேபோல், பிப்ரவரியுடன் ஒப்பிடுகையில் பரிவா்த்தனை மதிப்பு 10 சதவீதம் உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

பரிவா்த்தனைகளின் எண்ணிக்கையிலும் யுபிஐ இமாலய சாதனை படைத்துள்ளது. கடந்த பிப்ரவரியில் 2,039 கோடியாக இருந்த பரிவா்த்தனை எண்ணிக்கை, மாா்ச்சில் 2,264 கோடியாக அதிகரித்து, 24 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

மாா்ச் மாதத்தின் சராசரி தினசரி பரிவா்த்தனை அளவு 73 கோடியாகவும், அதன் சராசரி மதிப்பு ரூ.95,243 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவின் மொத்த எண்ம பரிவா்த்தனைகளில் யுபிஐ மட்டுமே 85 சதவீதம் பங்களிப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.