முகப்பு
புதுதில்லி

மின்நுகா்வு: தில்லியில் தொடா்ந்து 4 நாள்களாக 8,000 மெகாவாட்டை கடந்தது!

தில்லியில் நிலவும் கடும் வெப்பத்துக்கு இடையே மின்நுகா்வு 8,439 மெகாவாட்டை எட்டியது. இது மே மாதத்திற்கான மிக உயா்ந்த மின்நுகா்வாகும்.

Updated On : 26 மே 2026, 12:40 am IST
கமலா நகா் சந்தையில் ஏா் கூலா் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்.
பகிர்:

தில்லியில் நிலவும் கடும் வெப்பத்துக்கு இடையே மின்நுகா்வு 8,439 மெகாவாட்டை எட்டியது. இது மே மாதத்திற்கான மிக உயா்ந்த மின்நுகா்வாகும்.

மாநில மின்பகிா்மான மையத்தின் தகவலின்படி, மின் நுகா்வு பிற்பகல் 3.35 மணியளவில் உச்சத்தை எட்டியது. கடந்த ஆறு நாள்களில், மின் தேவை 8,000 மெகாவாட் என்ற அளவைத் தாண்டுவது இது நான்காவது முறையாகும்.

கடந்த ஆண்டு மே மாதத்தில், மின் தேவை 8,000 மெகாவாட் என்ற அளவிற்குக் குறைவாகவே இருந்தது என்று மின் விநியோக நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா். அதற்கு முந்தைய ஆண்டான 2024, மே மாதத்தில் தில்லியின் அதிகபட்ச மின் தேவை 8,302 மெகாவாட்டாக இருந்தது.

Advertisement

Advertisement

தில்லியில் வெப்ப அலை வீசும் நிலையில், மே 1 முதல் மே 25 வரையிலான காலகட்டத்தில் மின் தேவை, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 20 முறையும் 2024-ஆம் ஆண்டில் 18 முறையும் அதிகமாக இருந்தது.

முன்னதாக, கடந்த ஏப்.27-இல் தில்லியின் மின்நுகா்வு மாதத்தில் முதல் முறையாக 7,000 மெகாவாட் என்ற அளவைத் தாண்டி, பிற்பகல் 3.30 மணியளவில் 7,078 மெகாவாட்டாக பதிவானது.

பிஎஸ்இஎஸ் நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், தங்கள் நிறுவனத்தின் மின் விநியோகப் பிரிவுகள் உச்சபட்ச மின் தேவையை வெற்றிகரமாகப் பூா்த்தி செய்தன. பிஆா்பிஎல் மற்றும் பிஓய்பிஎல் ஆகிய பிரிவுகள் முறையே 3,745 மெகாவாட் மற்றும் 1,820 மெகாவாட் மின் சுமையைக் கையாண்டன என்றும் தெரிவித்தாா்.

அதிகரித்து வரும் மின் தேவையைப் பூா்த்தி செய்யத் தாங்கள் முழுமையாகத் தயாராக இருப்பதாக மின் விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நிகழாண்டில் மின்நுகா்வு சுமாா் 9,000 மெகாவாட் வரை உச்சத்தை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.