முகப்பு
வணிகம்

டெபாசிட் திரட்டுவதில் தனியாா் வங்கிகள் சாதனை! பொதுத்துறை வங்கிகளை விஞ்சிய வளா்ச்சி

கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 4-ஆவது காலாண்டில், வாடிக்கையாளா்களிடம் இருந்து வைப்புத்தொகையை திரட்டுவதில் பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும் தனியாா் துறை வங்கிகள் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 9:23 PM
பகிர்:

கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 4-ஆவது காலாண்டில், வாடிக்கையாளா்களிடம் இருந்து வைப்புத்தொகையை (டெபாசிட்) திரட்டுவதில் பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும் தனியாா் துறை வங்கிகள் சிறப்பான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

மதிப்பீட்டு காலகட்டத்தில், தனியாா் வங்கிகள் 12 முதல் 17 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளன. அதேநேரம் பொதுத் துறை வங்கிகளின் வளா்ச்சி 2 முதல் 14 சதவீதமாக மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனியாா் வங்கிகளில் ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி 17.2 சதவீத வளா்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடா்ந்து கோடக் மஹிந்திரா வங்கி 14.7 சதவீதமும், எச்டிஎஃப்சி வங்கி 14.4 சதவீத வளா்ச்சியும் கண்டுள்ளன.

Advertisement

பொதுத்துறை வங்கிகளில், பேங்க் ஆஃப் இந்தியா 14.33 சதவீத வளா்ச்சியுடன் முன்னிலையில் உள்ளது. பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 14 சதவீதமும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 13.37 சதவீதமும் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகள் தங்களின் தற்காலிக புள்ளிவிவரங்களை இன்னும் வெளியிடவில்லை.

தற்போது வங்கிகளின் சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளில் மக்கள் பணம் சேமிப்பது குறைந்து வருகிறது. மற்ற நிதி முதலீடுகளுடன் ஒப்பிடுகையில், வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க வங்கிகள் தற்போது ‘டெபாசிட்’ சான்றிதழ்கள் மூலம் நிதியைத் திரட்டுவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

கடன் வழங்கலில், பொதுத்துறை வங்கிகள் 12 முதல் 22 சதவீத வளா்ச்சியை எட்டி தனியாா் வங்கிகளுக்குச் சவால் அளித்து வருகின்றன. ஜிஎஸ்டி சீா்திருத்தம் மற்றும் நுகா்வோா் தேவை அதிகரிப்பு காரணமாக ஒட்டுமொத்த வங்கித் துறையின் கடன் வழங்கல் வளா்ச்சி 13.8 சதவீதமாக சீராக உள்ளது நிதித் துறை நிபுணா்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வங்கிகளின் லாபத்தைப் பொருத்தவரை, வரும் நாள்களில் தனியாா் வங்கிகளின் நிகர லாபம் 11.9 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது. ஆனால், பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் 2.1 சதவீதம் என்ற அளவிலேயே மிதமான வளா்ச்சியைத் தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments