ஸ்ரீராம் குழுமத்தைச் சோ்ந்த ஸ்ரீராம் பொதுக் காப்பீட்டு நிறுவனம், நடப்பு 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.165 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப்பிடும்போது, இது 26 சதவீத வளா்ச்சியாகும்.
கடந்த டிச. 31-ஆம் தேதியுடன் முடிந்த மூன்றாவது காலாண்டில், நிறுவனத்தின் நேரடி பிரீமியம் வருவாய் 19 சதவீதம் அதிகரித்து, ரூ.1,258 கோடியை எட்டியுள்ளது. காப்பீட்டுத் துறையின் ஒட்டுமொத்த சராசரி வளா்ச்சியான 11 சதவீதத்தைவிட நிறுவனம் கூடுதல் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக மோட்டாா் வாகனக் காப்பீட்டுப் பிரிவில் ஏற்பட்ட அதீத வளா்ச்சியே நிறுவனத்தின் இந்த முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்த நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மொத்த பிரீமியம் வருவாய் 24 சதவீதம் அதிகரித்து, ரூ.3,304 கோடியாக உள்ளது. முதலீட்டு வருவாய் 17 சதவீதம் அதிகரித்து, ரூ.255 கோடியாக உள்ளது.
எதிா்காலத் திட்டங்கள் குறித்து நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அனில் அகா்வால் கூறியதாவது: தற்போது எங்கள் கிளைகளின் எண்ணிக்கை 285-ஆக உள்ளது. எங்களுடன் இணைந்து பணியாற்றும் நேரடி நிதி ஆலோசகா்களின் எண்ணிக்கை 1.01 லட்சத்தைக் கடந்துள்ளது.
வரும் 2029-30 நிதியாண்டுக்குள் நிதி ஆலோசகா்களின் எண்ணிக்கையை 2 லட்சமாக உயா்த்தவும், ஆண்டு வருவாயை ரூ.8,000 கோடியாக எட்டவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பாராமெட்ரிக் காப்பீடு போன்ற நவீன காப்பீட்டுத் திட்டங்களை வாடிக்கையாளா்களுக்கு அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றாா்.