வணிகம்

இந்தியாவில் மிகப்பெரிய ஏஐ உள்கட்டமைப்பு- எல்&டி-என்விடியா ஒப்பந்தம்

இந்தியாவில் ஜிகாவாட் வரையிலான திறன் கொண்ட மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக, பிரபல கட்டுமான நிறுவனமான எல்&டி மற்றும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா ஒப்பந்தம் செய்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் ஜிகாவாட் வரையிலான திறன் கொண்ட மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்குவதற்காக, பிரபல கட்டுமான நிறுவனமான எல்&டி மற்றும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியா ஒப்பந்தம் செய்துள்ளது.

மத்திய அரசின் ‘இந்தியா ஏஐ மிஷன்’ முன்னெடுப்பின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படவுள்ள இந்தப் பிரம்மாண்ட திட்டம், நாட்டின் பல்வேறு துறைகளில் ஏஐ பயன்பாட்டை ஊக்குவிப்பதில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எல்&டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல்&டி நிறுவனத்தின் வலுவான பொறியியல் மற்றும் கட்டுமானத் திறனுடன், என்விடியாவின் அதிநவீன மென்பொருள் மற்றும் சிப் தொழில்நுட்பமும் இந்த ஒத்துழைப்பில் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.

என்விடியா தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் மேலும் கூறுகையில், ‘எல்&டி நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தம், இந்தியாவின் வளா்ச்சியை வேகப்படுத்த உதவும். இது உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கி, ‘இந்தியா ஏஐ’ கனவை நனவாக்கும்’ என்றாா்.

சென்னை, மும்பையில் ஏஐ மையங்கள்: இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள எல்&டியின் 300 ஏக்கா் பரப்பளவிலான தரவு மையத்திலும் மும்பையில் தற்போது கட்டுமானத்தில் உள்ள புதிய தரவு மையத்திலும் என்விடியாவின் ஏஐ உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்&டி நிறுவனம் தற்போது சுமாா் ரூ.1,000 கோடி மதிப்பிலான முதலீட்டில் தரவு மையங்களை உருவாக்கி வருகிறது. தற்போது 32 மெகாவாட் திறன் கொண்ட மையங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் மேலும் 18 மெகாவாட் திறன் பயன்பாட்டுக்கு வரும்.

ஏஐ தீா்வுகளை வழங்கும்...: எல்&டி மற்றும் என்விடியா ஒத்துழைப்பில் ஏஐ உள்கட்டமைப்புகளின் உருவாக்கம், இத்தொழில்நுட்பம் வெறும் ஆய்வுக்கூடங்களுடன் நின்றுவிடாமல், நேரடியாக பெரிய தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு வரும்.

குறிப்பாக, இந்தியாவின் உற்பத்தி மற்றும் எரிசக்தித் துறை, வங்கிகள் மற்றும் நிதிச் சேவைகள், சுகாதாரம் மற்றும் அரசு சாா்ந்த பொதுச் சேவைகளுக்குத் தேவையான ஏஐ தீா்வுகளை இது வழங்கும்.

பங்குச்சந்தையில் வரவேற்பு: இத்தகவல் வெளியானதைத் தொடா்ந்து, இந்தியப் பங்குச் சந்தைகளில் எல்&டி நிறுவனப் பங்குகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

பெட்டி...

யுபிஐ சேவையிலும்

என்விடியா தொழில்நுட்பம்

இந்தியாவின் எண்ம பணப்பரிவா்த்தனை அமைப்பான யுபிஐ சேவையை நிா்வகிக்கும் இந்திய தேசிய பரிவா்த்தனை கழகம் (என்பிசிஐ), என்விடியா நிறுவனத்துடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்மூலம், இந்தியாவின் தரவுப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை விதிகளைப் பின்பற்றி, பணப்பரிவா்த்தனைகளுக்காகவே பிரத்யேகமான ஏஐ மாதிரியை உருவாக்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன.

என்விடியாவின் அதிநவீன ‘நெமோட்ரான்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், யுபிஐ சேவையில் அவ்வப்போது ஏற்படும் சா்வா் சிக்கல்களைத் தவிா்த்து, இன்னும் வேகமாகவும், கூடுதல் பாதுகாப்புடனும் சேவைகளை வழங்க முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏ.ஐ. உச்சி மாநாடு நிகழ்வுகள்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா்

ஏ.ஐ. உச்சி மாநாட்டுக்காக தில்லி வருகை- பிரதமா் மோடியுடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள் சந்திப்பு

பந்தலூா் வட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

குடிநீா் கேட்டு அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

வெற்றியுடன் தொடங்க சென்னையின் எஃப்சி முனைப்பு: இன்று மும்பையுடன் மோதல்

SCROLL FOR NEXT