புத்தாண்டு(ஜன. 1, 2026) நாளில் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் சற்றே சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,255.55 என்ற புள்ளிகளில் ஏற்றத்துடன் தொடங்கியது. குறைந்த புள்ளிகள் வித்தியாசத்திலேயே ஏற்றத்தில் இருந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் சரிந்தது.
அதன்படி, சென்செக்ஸ் 48.02 புள்ளிகள் குறைந்து 85,172.58 புள்ளிகளில் நிலைபெற்றது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10.60 புள்ளிகள் உயர்ந்து 26,140.20 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
4 நாள்கள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தைகள் நேற்று(டிச. 31, 2025) ஏற்றத்துடன் நிறைவடைந்த நிலையில் இன்று சரிந்துள்ளன.
சென்செக்ஸ் பங்குகளில் எடர்னல், என்டிபிசி, இன்ஃபோசிஸ், ஹெச்சிஎல் டெக், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா அதிக லாபத்தைப் பெற்றன.
அதேநேரத்தில் ஐடிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்தன.
புகையிலை பொருள்கள் மீதான கூடுதல் கலால் வரி வருகிற பிப். 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், ஐடிசி, காட்பிரே பிலிப்ஸ் உள்ளிட்ட புகையிலை நிறுவனப் பங்குகள் விலை குறைந்தன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.26 சதவீதம் உயர்ந்த நிலையில் ஸ்மால்கேப் குறியீடு 0.14 சதவீதம் சரிந்தது.
துறைவாரியாக, நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு சுமார் 3 சதவீதம் சரிந்து, அதிக இழப்பைச் சந்தித்தது. தொடர்ந்து நுகர்வோர் பொருள்கள், ஹெல்த்கேர், பார்மா, ரசாயனங்கள் குறியீடுகளும் சரிந்தன. நிஃப்டி ஐடி, ஆட்டோ, உலோகம், வங்கிகள், பொதுத்துறை வங்கி, ரியல் எஸ்டேட், ஆயில் & கேஸ் துறைகள் ஏற்றம் கண்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.