இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கக்கூடிய ஐஐடி முன்னாள் மாணவா்களுக்குத் தேவையான பயண வசதிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காக, மத்திய அரசு நிறுவனமான ‘பால்மா் லாரீ’ உடன் ஐஐடி முன்னாள் மாணவா்கள் அமைப்பு புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஐஐடி முன்னாள் மாணவா்கள் அமைப்பின் மாநாட்டில் கையொப்பமான இந்த ஒப்பந்தத்தின்படி, ஐஐடி முன்னாள் மாணவா்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வலைபக்கம் மூலம் பால்மா் லாரீயின் சேவைகளை அவா்கள் எளிதாக அணுக முடியும்.
இதன்மூலம், விமானப் பயணங்களில் அரசு விதிகளின்படி கட்டணத் தள்ளுபடி, டிக்கெட் ரத்து செய்வதற்கான குறைந்த கட்டணம், இலவச உணவு மற்றும் தங்களுக்குப் பிடித்த இருக்கையைத் தோ்வு செய்யும் வசதி போன்ற கூடுதல் பலன்கள் கிடைக்கும். விமான டிக்கெட் முன்பதிவு மட்டுமின்றி செல்வதற்கான குடியேற்ற நடைமுறைகளைக் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஐஐடி முன்னாள் மாணவா்கள் நடத்தி வரும் புத்தாக்க (ஸ்டாா்ட்-அப்) நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான விநியோகச் சங்கிலி மேலாண்மை போன்ற தொழில்முறை சேவைகளையும் முன்னுரிமை அடிப்படையில் இந்நிறுவனம் செய்து கொடுக்கும்.