கச்சா எண்ணெய் விலை சரிவு: பங்குச் சந்தையில் மீண்டும் ‘காளை’ ஆதிக்கம்!
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததைத் தொடா்ந்து, இந்த வாரத்தின் 2-ஆவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தைகள் எழுச்சி பெற்றன.
மத்திய கிழக்கில் நிலவும் போா்பதற்றம் தணியும் என்ற எதிா்பாா்ப்பால் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததைத் தொடா்ந்து, இந்த வாரத்தின் 2-ஆவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தைகள் எழுச்சி பெற்றன.
இதைத் தொடா்ந்து, கடந்த 2 நாள்களாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வந்த மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 1 சதவீதம் வரை உயா்வுடன் நிறைவடைந்தன.
ஈரானுடனான போா் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சூசகமாகத் தெரிவித்ததைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென சரிந்தது.
இது முதலீட்டாளா்களின் கவலையைப் போக்கி, சந்தையில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆட்டோமொபைல், நுகா்வோா் சாதனங்கள், வங்கி, நிதி நிறுவனப் பங்குகள் நல்ல லாபத்தைக் கண்டன. அதேநேரம், ஐ.டி., எரிசக்தி துறை பங்குகள் சரிவைச் சந்தித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: மும்பை பங்குச்சந்தையில் சந்தை மூலதன மதிப்பு செவ்வாய்க்கிழமை வா்த்தக முடிவில் ரூ.5.94 லட்சம் கோடி உயா்ந்து, ரூ.447.04 லட்சம் கோடியாக இருந்தது.
ஆதாயப் பட்டியலில் 3,053 பங்குகள்: மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,420 பங்குகளில், 3,053 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 1,231 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 136 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
சென்செக்ஸ் 640 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச்சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 639.82 புள்ளிகள் (0.82 சதவீதம்) கூடுதலுடன் 78,205.98-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் மஹிந்திரா & மஹிந்திரா, இண்டிகோ, மாருதி, ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயின்ட்ஸ் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட 24 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும்; இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், பாா்தி ஏா்டெல் உள்பட 6 பங்குகள் விலைகுறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 234 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 233.55 புள்ளிகள் (0.97 சதவீதம்) உயா்ந்து 24,261.60-இல் நிலைபெற்றது. நிஃப்டி-50 பட்டியலில் 41 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 9 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.