போர், எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!
சென்செக்ஸ் 1,836.57 புள்ளிகள் சரிந்து 72,696.39 புள்ளிகளிகளாகவும், நிஃப்டி 601.85 புள்ளிகள் சரிந்து, 22,512.65 புள்ளிகளாக நிலைபெற்றது.
மும்பை: மத்திய கிழக்கில் போர் தணியும் அறிகுறிகள் தென்படாத நிலையில், உலகளாவிய பங்குச் சந்தை சரிந்த நிலையில், இதற்கு இணையாக, இந்திய பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வெகுவாக சரிந்தன. இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கி சரிவுடன் நிறவடைந்தன.
4வது வாரத்திற்குள் நுழைந்துள்ள போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, தொடர்ந்து வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி மற்றும் இந்திய ரூபாயின் பலவீனம் ஆகியவை முதலீட்டாளர்களின் அச்சத்தை அதிகரித்தது.
30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ், இன்றைய காலை நேர வர்த்தகத்தில் 1,974.52 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,836.57 புள்ளிகள் சரிந்து 72,696.39 புள்ளிகளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 601.85 புள்ளிகள் சரிந்து, 22,512.65 புள்ளிகளாக நிலைபெற்றது. மேலும் அனைத்துத் துறைகளிலும் பரவலான விற்பனை காரணமாக, நிஃப்டி ஏப்ரல் 9, 2025-க்குப் பிறகு முதல் முறையாக இன்று 22,500-க்குக் என்ற நிலைக்கு சென்றது.
சென்செக்ஸில் டைட்டன் 6.24 சதவீதம் சரிந்து மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. ட்ரென்ட், அல்ட்ராடெக் சிமென்ட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன், டாடா ஸ்டீல் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகளும் சரிந்தன. மறுபுறம் எச்.சி.எல் டெக், பவர் கிரிட், இன்ஃபோசிஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய பங்குகள் உயர்ந்தன.
பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம், வெள்ளிக்கிழமை ரூ. 429.11 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) ரூ. 14 லட்சம் கோடிக்கும் மேல் சரிந்து ரூ. 414.75 லட்சம் கோடியாக உள்ளது.
நிஃப்டி-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ட்ரென்ட், அல்ட்ராடெக் சிமெண்ட், டைட்டன் கம்பெனி, ஜியோ ஃபைனான்ஸ் ஆகிய பங்குகள் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தன. மறுபுறம் எச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஓ.என்.ஜி.சி, பவர் கிரிட் கார்ப், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.
அனைத்துத் குறியீடுகளும் சரிவுடன் முடிவடைந்தன. ரியல்டி, மூலதனப் பொருட்கள், நுகர்வோர் பொருட்கள், உலோகம், தொலைத்தொடர்பு, பொதுத்துறை வங்கி ஆகியவை 4 முதல் 5% வரை சரிந்தன. அதே சமயம், ஆட்டோ, எரிசக்தி, ஊடகம், தனியார் வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை தலா 3% சரிந்தன.
நிஃப்டி மிட் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் கிட்டத்தட்ட 4% சரிந்தன.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு, ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை வெகுவாக சரிந்தன. கோஸ்பி குறியீடு 6.49 சதவீதம் சரிந்து மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.
ஐரோப்பிய சந்தைகள் பெரும் சரிவுடன் வர்த்தகமானது. அமெரிக்க சந்தை (வெள்ளிக்கிழமைய) கணிசமாக சரிந்தது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்த அச்சத்தின் மத்தியில், ஆசிய சந்தைகள் முழுவதும் நிலவிய சரிவை தொடர்ந்து பிரதிபலிக்கும் வகையில் உள்நாட்டு சந்தைகள் கடுமையான சரிவைக் கண்டன. இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரானுக்கு டிரம்ப் விடுத்த 48 மணி நேர இறுதி எச்சரிக்கையைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தனர்.
தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ. 5,518.39 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 5,706.23 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஐடிபிஐ வங்கி, பெட்ரோநெட் எல்என்ஜி, ஆதித்யா பிர்லா ஃபேஷன், ரிலாக்ஸோ ஃபுட்வேர், ஸ்டெர்லிங் வில்சன், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், ஐநாக்ஸ் விண்ட், பிசிபிஎல் கெமிக்கல், குஜராத் ஸ்டேட் பெட்ரோ, கிராவிட்டா இந்தியா, லோதா டெவலப்பர்ஸ், நெட்வொர்க் 18, பிஎல்எஸ் இன்டர்நேஷனல், இன்டர்குளோப் ஏவியேஷன், ஹெச்பிசிஎல், குஜராத் கேஸ், ஆர்இசி உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று 52 வாரக் குறைந்தபட்ச நிலையை எட்டியது.
உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.97 சதவீதம் உயர்ந்து 113.3 அமெரிக்க டாலராக உள்ளது.