இமயத்தின் மடியில்!
இமயமலை பயணத்தை பற்றி பல நண்பர்கள் கேட்கும் போது ரஜினிகாந்த் அடிக்கடி போய்வருகிற இடமா என்று கேட்கிறார்கள். ‘ஹிம்’ என்றால் வடமொழியில் பனி. ‘ஹிமாலயம்’ என்றால் பனியால் சூழப்பட்ட ஆலயம்
இமயமலை பயணத்தை பற்றி பல நண்பர்கள் கேட்கும் போது ரஜினிகாந்த் அடிக்கடி போய்வருகிற இடமா என்று கேட்கிறார்கள். ‘ஹிம்’ என்றால் வடமொழியில் பனி. ‘ஹிமாலயம்’ என்றால் பனியால் சூழப்பட்ட ஆலயம் என்று பொருள். இம்மலைத் தொடர் கிழக்கு மேற்கில் 2000 கிமீ தூரம் விரிந்து பரந்துள்ளது.ஆப்கானிஸ்தான் தொடங்கி, பாகிஸ்தான், இந்தியா, நேபாளம். சீனா, பூடான், மியான்மர் வரை பரவியுள்ளது. இது மேற்கே காஷ்மீர் முதல் சிங்காங் பகுதி வரையிலும் கிழக்கே திபெத் முதல் அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டிருக்கிறது. இந்து மகாசமுத்திரத்திலிருந்து வரும் மேகக் கூட்டங்களை தடுத்து இந்திய திருநாட்டை வளமான நாடாக மாற்றியுள்ளது இம்மலை. அதே சமயம் திபெத்திலிருந்து வரும் கடும் குளிர் காற்றை தடுத்து நிறுத்தி நல்லதொரு தட்பவெப்ப நிலையை வடநாட்டில் நிலவ உதவுவதும் இந்த மலைத் தொடர்கள்தான்.
புவியியல்படி உலகிலேயே ஒப்பற்ற மிகப் பெரிய,மிக உயர்ந்த,பிரமாண்ட மலைத்தொடர் இதுவேயாகும். 30 மில்லியன் வருடதிற்கு முந்தி தோன்றியதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எப்போதுமே உறைபனி மூடி இருக்கும் இந்த இமயமலைத் தொடர் ஆசியா கண்டத்தில் இருக்கிறது. இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இம்மலைத்தொடருக்கு வடக்கே 4,300 மீட்டர் உயரத்திலே திபெத் உயர் பீடபூமி உள்ளது. உலகத்திலேயே உயரமானதும், அதே சமயத்தில் உலகிலே உள்ள மலைகளில் இளையமலையும் ஹிமாலய மலைதான்.எப்போதும் பனியால் மூடப்பட்டிருப்பதால் அப்பனி உருகி பாயும் சிந்து,கங்கை,பிரம்மபுத்திரா என்னும் வற்றாத ஜீவநதிகள் உருவாகி ஆசிய கண்டத்தையே வளமாக்குகின்றன. உலகின் உயரமான சிகரமான எவெரெஸ்டில் தொடங்கி 8000 மீட்டருக்கும் மேலே, உயரமான பனி மூடிய சிகரங்கள் அனைத்தும் அமைந்திருப்பதும் இம்மலை தொடரில் தான். உலகின் 10 மிக உயரமான சிகரங்களில் ஒன்பது சிகரங்கள் இமயமலையிலே இருக்கிறது. இதிலிருந்தே இம்மலையின் பிரமாண்டத்தை உணரலாம்.இம்மலையில் புராணத்தோடு தொடர்புடைய பல சக்தி வாய்ந்த ஸ்தலங்கள் இருக்கிறது. அதன் தரிசனத்திற்காகத் தான் நண்பர்களுடன் பயணித்தேன்.
இமாலய பயணத்தில் முதலில் சென்று, இறங்கிய இடம், இயற்கையை நேசிப்பவர்களின் சொர்க்கபுரியான மாயாபுரி. பாரதத்தின் 7 புனித நகரங்களில் ஒன்று இது. பண்பாடு நாகரீகத்தின் பல வண்ணகலவையாக காட்சியளிக்கும் ஹரிதுவாரின் வரலாற்று பெயர்தான் மாயாபுரி .ஹரிதுவார் என்றால் கடவுளை அடையும் வழி எனலாம். ஏனெனில் இங்கிருந்து தான் பிரமாண்ட ஹிமாலய பர்வத்தின் பல ஸ்தலங்களுக்கு யாத்ரீகர்கள் பயணமாகிறார்கள்.இரயில் நிலையதிலிருந்து சில நிமிட பயணத்தில் சங்கரமடத்தை அடைந்தோம். இங்குதான் தங்குவதற்கான முன்னேற்பாடுகளை நெல்லை ராஜீவ் அவர்கள் செய்திருந்தார். நாங்கள் தங்கிய அறையே கங்கையின் கரையில் தான்.பின்புற வாசலில் கங்கை குதூகலமாக ஓடிக்கொண்டிருந்தால், கங்கையை ஆசையாக தொட்டேன், நதியின் வேகம், குளிர்ச்சியான உணர்வு உடலை சிலிர்க்க வைத்தது. உடனே பக்கவாட்டிலிருந்து பார்பதை விட நீரோட்டத்தை நேர் எதிரே காண அருகே இருந்த பழைய பாலத்தின் மீதேறி கங்கையை பார்த்துக்கொண்டே இருந்தேன். வர்ணிக்க வார்த்தைகளில்லை! அத்தகைய பிரமாண்டம்!
கண்களை நிறைக்கும் பேரெழிலில் திளைத்திருந்த நொடியில் போனில் அழைப்பு வந்தது, ‘குளித்துத் தயாராகுங்கள். ஆட்டோ ஏற்பாடு செய்திருக்கு எல்லா இடங்களையும் பார்த்துட்டு வந்து கங்கா ஹாரத்திக்கு போகணும்’...
அறைக்கு பின்புற பகுதியில் கங்கையில் சூரிய நமஸ்காரத்துடன் குளியல். நதியில் இறங்கும் ஒவ்வொரு அடியிலும் கங்கையின் வேகம் உடலை தள்ளியது. ஆனந்தமான குளியல்.அறையில் உடன் வந்த நண்பர்கள் யோக சாதனாக்களை செய்தார்கள்..நான் மீண்டும் கங்கையை கரையில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன், இவ்வளவு தண்ணீர் பாய்கிறதே,எத்தனை வருட காலமாக இப்படி ஓடிக் கொண்டிருக்கும்? என மனஓட்டத்தில் இயற்கையின் அதிசயத்தை விழிகள் விரிய பார்த்துப் பார்த்து வியந்து கொண்டிருந்தேன். ‘ஆட்டோ வந்தாச்சு போகிற வழியிலே சாப்பிட்டுக்கலாம்’ என்று கேப்டன் சொல்ல என் கவனம் கலைந்தது.ஆட்டோவில் முன் பகுதியில் அமர்ந்து, தெருவை வேடிக்கை பார்த்தேன்.நிறைய மடங்கள்,சத்திரம், பழமையான கட்டிடம் என தெருவின் இருபுறமும் இருக்கிறது. ஆடி கார், ஆட்டோரிக்க்ஷா எதிலிருந்து இறங்கும் மனிதராக இருந்தாலும் முகத்தில் ஒரு தேடல் இருப்பதைப் பார்த்தேன்.
கங்கையைத் தேடி சாரை சாரையாக மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். மானஸாதேவி, சண்டிதேவி,தக்ஷேஷ்வர மஹாதேவ் கோவில்,பாவன்தாம் (கண்ணாடி துண்டுகளால் ஆன கோவில்),ராம் மந்திர் என கோவில்களை தரிசித்துவிட்டு ஹாரத்தி காணும் ஆவலில் அறைக்கு திரும்பினோம். பல கோவில்கள் ட்ரஸ்ட் மூலமாக நிர்வாகிக்கப்படுகிறது. மீண்டும் கங்கையில் ஒரு குளியல், ஹாரத்தி காண கடைவீதி வழியாக நடந்தோம். விதவிதமான கடைகள். விதவிதமான தின்பண்டங்கள்.விதவிதமான மனிதர்கள் என பொழுது ஆனந்தமாகக் கரைந்து கொண்டிருந்தது. மாலை நெருங்கும் வேலையில் நதியின் கரையில் மக்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது,கங்கை நதிக்கு நடக்கும் ஹாரத்தி நிகழ்ச்சியை காண. சிறிது நேரத்தில் ஹாரத்தி பாடலுடன் நிகழ்சி துவங்கியது, அனைவரும் கங்கையை ஆராதித்து ஒலி எழுப்பினர். சிறிது நேரத்தில் ‘கங்கா மா கி ஜெய்’ எனும் கோசத்துடன் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தவுடன்,பலரும் தீபப் பூக்களை நதியில் விட்டு பிரார்திக்கும் காட்சி அருமையாக இருந்தது.ஒரு நதியை எப்படியெல்லாம் உயர்வாக புகழ்ந்து, தாயாக பாவித்து, ஆராதனை செய்கிறார்கள் என்பதை மனதில் அசைபோட்டபடி கடைவீதியின் இரவு காட்சிகளை வண்ண வண்ண விளக்குகளின் அழகை ரசித்தபடி அறைக்கு திரும்பினேன் நண்பர்களுடன்.
எங்கள் அறையின் சன்னல் வழியாக மீண்டும் இரவில் கங்கையின் அழகை ரசித்து கொண்டிருந்தேன். யாரோ எவரோ நதியில் விட்ட தீபப்பூ நதியின் வேகதிற்கு ஏற்ப மிதந்து போய் கொண்டிருந்ததது.சற்று நேரத்தில் மறுநாளைய பயண அறிவிப்பை வெளிட்டார் கேப்டன். ‘அதிகாலையில் எழுந்து யோக பயிற்சியை முடிச்சுக்கோங்க, 7 மணிக்கு வேன் வந்திடும். பஞ்சகேதார் பயணம் நாளை முதல் ஆரம்பம், நாளைய பொழுது முழுவதும் பயணம் தான், இடையில் அகத்தியர் கோவிலை பார்க்கலாம். இரவு சித்தாபூரில் ஓய்வு, மற்றதை அங்க அறைக்கு போய்ட்டு பேசிப்போம் ...’ என்றார்.
எனக்கு இனம் தெரியாத சிலிர்ப்பு உடல் முழுவதும் பரவியது. பஞ்சகேதாரைப் பற்றிய நினைவுகளில் கண்களை மூடினேன். உறக்கம் உடனே வந்தது. அதிகாலை எழுந்து கண் விழித்ததுமே கங்கையின் தரிசனம். கங்கையில் குளியல். நண்பர்கள் யோகப் பயிற்சி, தியானம் என்று பிஸியாக இருந்தார்கள், வெளியே தெருவை வேடிக்கை பார்கலாம் என்று அறையை விட்டு வெளியேறினேன். அதிகாலையிலே தெருவில் யாத்ரீகர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.சமஸ்கிருத பாடல்கள் தொலைவில் கேட்டுக்கொண்டிருந்தது. ஆங்காங்கே ஆட்டோக்கள் ‘சர்சர்’ என்று விரைந்தன. மடங்கள், தனியார் கோவில்கள் எனத் தெருவெங்கும் நிறைந்திருக்க, தங்கும் விடுதிகளும் இருந்தன. ‘ஏக் சாய்’ என்று கடையில் டீ சொன்னதுமே போனில் அழைப்பு, ‘வேன் வந்தாச்சு எங்கே இருக்கே’ கையில் வாங்கிய தேனீரை ருசித்துக் குடித்துவிட்டு, வேக வேகமாக அறைக்கு திரும்பினேன்.
தயாராக இருந்த வேனில், டிரைவரின் அறிமுகத்தோடு பயணத்தை தொடர்ந்தோம். ஹரிதுவாரில் இருந்து சில மணி நேர பயணத்தில் வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை தொடங்கியது. திறமையான ஓட்டுநர்களுக்கே சவால் விடும் சாலை. பக்கவாட்டில் பார்த்தால் கிடுகிடு பள்ளம். சில மணி நேர பயணத்தில் அகத்தியமுனி என்ற இடத்தை அடைந்தோம். அங்கு புராதன கோவில் ஒன்று அகத்திய முனிவர் பெயரில் இருக்கிறது. சில நிமிடங்கள் அங்கிருந்துவிட்டு, மீண்டும் பயணம். வழியெங்கும் இயற்கை காட்சிகள்! அற்புதம், அற்புதம் என்பதைத் தவிர வேறு பதம் அறியேன்!
சில மணி நேர பயணத்தில் சித்தாபூரை அடையும் பொழுது மாலை 5 மணி. குளிர் லேசாக வீச ஆரம்பித்தது. அங்கேயே அறையை வாடகைக்கு எடுத்து, ஓய்வெடுத்தோம். மறுநாளைய பயணம் கேதார்நாத் என்று முடிவாகியது. இந்த பெயரை கேட்பவர்கள், கேதாரானு புருவத்தை உயர்த்ததான் செய்வார்கள் .. 2013 லே, நடந்த வெள்ளப் பெருக்கை டிவியில் பார்க்காதவர்களே இருக்கமாட்டார்கள்.
தொடரும்…