உலகம்

ஒரு பயண அனுபவம்: பாலித் தீவில் பஞ்சபாண்டவர்கள்

தென்கிழக்காசிய நாடுகளில் பதினேழாயிரம் தீவுகளைக் கொண்ட இந்தோனேசியா 88% முஸ்லீம் மக்கள் வாழ்கின்ற இஸ்லாமியக் குடியரசு நாடு. இங்குள்ள பாலித் தீவிலோ 84%

DIN

தென்கிழக்காசிய நாடுகளில் பதினேழாயிரம் தீவுகளைக் கொண்ட இந்தோனேசியா 88% முஸ்லீம் மக்கள் வாழ்கின்ற இஸ்லாமியக் குடியரசு நாடு. இங்குள்ள பாலித் தீவிலோ 84% இந்து சமய மக்கள் வாழ்கிறார்கள் என்பது வியப்புக்குரியது.

வானூர்தி நிலையம் டென்பசாரிலிருந்து பரூனா செல்லும் வழியிலே மிகப் பிரம்மாண்டமான 'கீதா உபதேசம்' (தேரில் கண்ணன் அறவுரை வழங்க, வில்லேந்திய விசயன் கேட்டு நிற்கும் காட்சி) அந்நாட்டிற்குரிய கலைவேலைப்பாட்டுடன் நாற்சாலை நடுவில் கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. தீவின் பல்வேறு பகுதிகளில் தருமர் முதலான பஞ்ச பாண்டவர் சிலைகளும் கலையழகு மிளிர ஆங்காங்கே நிறுவப் பட்டுள்ளன.

இஃதென்ன? பாலியெனும் தீவா! பாண்டவர் புரமா! என்று வியக்கச் செய்கிறது. மற்றொரு பகுதியில் இயற்கையழகு செறிந்த கடற்கரை சார்ந்த ஒரு பெரிய பாறை ( மலை) அமைந்துள்ளது. வட்ட வடிவில் கட்டப்பட்ட கோட்டைபோல் அமைந்த இதனில் குந்தி, தருமர், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் இவர்களோடு மூஞ்சூறு ( மூஷிகம்)  ஆகியவை தனித்தனியே கல்லில் செதுக்கப்பட்டதுபோல் சிலையமைப்பில் காணப்படுகின்றன. `Pantai pandawa'  என்று பெரிய எழுத்தில் பாறை மேல்பகுதியில் பெயர்ப்பலகை அமைக்கப்பட்டுள்ளது. பஞ்ச பாண்டவர்களுக்குதான் இப்பெயர். இதைச்சார்ந்த கடற்கரை 'பாண்டவா பீச்' என்று அழைக்கப்படுகிறது.

கம்போடியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இந்து சமயம் பழங்காலத்திலே பரவியிருந்தமை நாமறிந்த செய்தியே, கங்கை வரை சென்று வெற்றி கண்டதால் "கங்கை கொண்ட சோழன்' என்றும், கடல்கடந்து சென்று கடாரம் வென்றதால் "கடாரம் கொண்டான்' என்றும், இராஜேந்திரச் சோழன் சிறப்புப் பெற்றான். இந்தக் கடாரம் மலேசியாவில் "கெடா' மாநிலமாக இன்றுள்ளது. இந்தோனேசியாவில் ஜாவாவும், சுமத்ராவும் உள்ளன. இவையும் சோழனால் வெல்லப்பட்டவையே. இந்தோனேசியாவின் தலைநகர் ஜாகர்த்தா, ஜாவாத் தீவில் உள்ளது. ஆயிரம் ஆண்டிற்கு முற்பட்ட வரலாறு இது.

இன்னும் பல்லாயிரம் ஆண்டின் முன்னரே அங்கெல்லாம் இந்து சமயம் பரவியிருந்தமைக்குப்  "பாலி'யே சான்று. ஐ.நா.வின் கலை, பண்பாட்டு அமைப்பின் அங்கீகாரம் பெற்ற தொல் பழஞ்சின்னமாகப் பாதுகாக்கப்படுகின்ற ஒரு கோவில் பாலியில் உள்ளது. இக்கோவில் (TAMAN AYUN) தாமன் அயுன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அயன் (பிரம்மா) தான் அயுன் ஆகியிருக்கக் கூடும். ஏனெனில், இக்கோவில் வரலாற்றில் படைத்தல், காத்தல், அழித்தல் ( பிரம்மா, விட்ணு, சிவன்) முத்தொழிலாற்றும் கடவுள் இடங்கொண்டிருப்பதாக எழுதப்பட்டுள்ளது.

இக்கோவிலைச் சுற்றி ஆறு ஓடிக்கொண்டிருந்ததற்கு அடையாளம் இருக்கிறது. கோட்டையைச் சுற்றியிருக்கும் அகழிபோல் வட்ட வடிமைப்பில் பெரும்பள்ளம் காணப்படுகிறது. பள்ளத்தைக் கடக்கப் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆற்று நீர் புனித நீராக (Holy Water)  கருதிப் பயன்பெற்றனர் என்ற குறிப்பும் காணப்படுகிறது. ஆனால் கோவில் திறக்கப்படவில்லை. திறக்கப்படுவதும் இல்லையாம். நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

கதவுகள் மூடப்பட்ட கோபுர வாயில்களே பல இடங்களிலும் காணப்படுகின்றன. தீவு முற்றிலும் நூற்றுக்கணக்கான இந்துக் கோவில்கள் உள்ளன. பல, பராமரிப்பு இன்றி, வழிபாடும் இன்றி வெறும் சுற்றுலா இடங்களாகவே மாறிவிட்டன. வீட்டு வாயில், சாலையோரம், சந்திகள், கோவில் சுற்றுப்புரம் எங்கும் மக்கள் கடவுளுக்குப் "படையல்'  வைத்துள்ளார்கள். சிறிய ஓலைக்குட்டான் ஒன்றில் ஏதோ ஒரு சிறு பழம், பிஸ்கட், தின்பண்டம், ஒரு பூ, சிகரெட் உட்பட வைத்துள்ளனர்.

வேத ஆகம வழிபாடுகள் இல்லை. எங்கேயும் சிவலிங்கமோ, வேறு வடிவங்களோ கருவறையில் இல்லை அது வெற்றிடமாகவே உள்ளது. சமயச் சடங்குகள் பின்பற்றப்படுகின்றன.   இறந்தவர் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரியூட்டுகிறார்கள். திருமண ஊர்வலம்  செல்கிறார்கள். வண்ண வண்ணமாய் (புடைவையும் இல்லை, கைலியும் இல்லை) ஒருவகை ஆடையணிந்த பெண்களும், ஆண்களும் எல்லாச் சடங்குகளிலும் கூட்டமாய் வரிசையில் சென்று ஒழுங்கைப் புலப்படுத்துகிறார்கள்.

உலுவாட்டு எனுமிடத்தில் பெரிய பரப்பில் காடு,மலை, கடல் மூன்றும் கலந்த அருமையான காட்சிகள் நிறைந்த இடத்தில் ஒரு பழைமையான கோவில் உள்ளது. இங்கும் பூட்டிய கதவுகள்தாம். மிக உயரமான மலைப் பகுதிகளில் நின்று கீழே பன்னூறு அடி அழத்தில் ஆர்ப்பரித்து மோதும் கடலைப் பார்ப்பது ஆனந்தம். அதனினும் மாலையில் கடலில் கதிரவன் மறைவதைக் காண்பது பேரானந்தம். இவ்விடத்தே மூன்று நான்கு பகுதிகளில் கோவில் காணப்படுகிறது.

இந்த இடத்தில் உள்ளே செல்லுமுன், வாயிலில் கட்டணம் பெறுகிறார்கள். அத்துடன் வண்ண வண்ணமாய் இடையாடை கட்டிவிடுகிறார்கள். முழங்கால் தெரிய உடை உடுத்தியிருந்தால் வேட்டி போலவும், மற்றவர்க்கு இடுப்பில் (மேலாடையைச் சுருட்டி நாம் கட்டிக் கொள்வது போலவும்) பட்டையாகக் கட்டிவிடுகிறார்கள்.

'தனுலாட்' (Tanuh Lot) எனுமிடத்தில் அமைந்துள்ள " புராலுகுர்' (Pura Luhur) எனும் கோவில் அற்புதம், அற்புதம், அற்புதமே. கடல் நீர்ப் பரப்பில் மூன்று வெவ்வேறு இடங்களில் சிறிய குன்றுகளில் ஏறி, கடல்நீரில் கால் நனையச் சென்று,  குகை கடந்து,  படியேறிச் சென்று கடவுளை மனத்தில் நினைத்து, இயற்கை எழில் கண்டு மகிழலாம். கடல்பரப்பில் நீருக்குள் இருப்பதால் இதனை சுற்றுலாப் பயணியர் நீர்க் கோவில் (Water Temple) என்றழைக்கிறார்கள்.

மலேசியா, பத்துமலை முருகன் கோவில் படி ஏறிச் செல்லும் வழியெல்லாம் சுருள் சுருளான பாறைப் படிவங்கள் தொங்குவது போன்ற ஓர் அதிசயக் காட்சியைக் காணலாம். அதுபோல் இந்தக் கோவில் காட்சியும் மனத்தில் மறக்க முடியாத ஒன்றேயாகும். குகைப் பகுதியில் நீர் ஊற்று ஒன்றிலிருந்து நன்னீர் வருகிறது. அதனைத் தலையில் தெளித்துக் கொண்டும் சிறிதே அருந்தியும் மக்கள் மகிழ, அங்குள்ள பூசாரி ஆசீர்வதித்துக் காதில் 'பூ' வைத்து விடுகிறார். தட்டில் நிரம்ப ரூபாய்த் தாள்கள் இடுகிறார்கள் ( காணிக்கை - தட்சணை) நாங்களும் பின்பற்றினோம். இங்கும் கதிரவன் மறையும் காட்சி மிக இனியது.

பாலி இயற்கை எழில் கொஞ்சும் தீவு. எங்கெங்குப் பார்த்தாலும் நீலக் கடற்பரப்பு, பச்சைப் பசுங்காடுகள், செம்மண் வயல்வெளிகள், பழுப்பு நிறப் பாறைகள், குன்றுகள் எனப் பன்னிறமும் மின்னுகின்றன. இயற்கையில் மட்டுமன்று, இந்தோனேசியர் உடையிலும் பலவண்ணங்கள் மிளிர வண்ண ஆடைகளையே உடுத்தி மகிழ்கின்றனர்.

இசை, நாட்டியம், நாடகம் ஆகிய கலை வடிவங்களே அவர்கள் தம் கடவுள் வழிபாடாகக் கருதப்படுகின்றன. மந்திரம் ஓதுதல், பாசுரங்கள் பாடுதல் போன்ற பழக்கங்கள் இல்லை போலும், சுற்றுலா இடங்களாக மாறிவிட்டதால் போலும், எல்லா இடங்களிலும் கால்களில் செருப்பணிதல் தடுக்கப்படவில்லை.

 கடல் நீர் விளையாட்டுகள் நிரம்பிய "பராத்தமா பீச்' காட்டிற்குள் யானை மீது சவாரி செய்யக் கூடிய "சபாரி', பட்டூர் ஏரி, பட்டூர் மலை, (காணரிய அழகு கொட்டிக்கிடக்கும் பகுதி) டெகலங் (Tegallenge) என்னுமிடத்தில் அமைந்துள்ள வரிசை வரிசையாய்ப் பாத்தி பாத்தியாக அமைக்கப்பட்ட நெல் வயல்கள்

(Rice Teror Cafe) அவ்விடத்து வானுயர வளர்ந்துள்ள அடுக்கடுக்கான தென்னை மரங்கள் எல்லாமே உள்ளம் கொள்ளை கொள்ளுகின்றன.

'இது வேறுலகம் தனியுலகம்' என்னுமாறு 'குட்டா பீச்'  கடற்கரையில் பன்னாட்டவரும் கடற்கரையில் கதிரவன் குளியல் (Sunbath), செய்யும் காட்சிகளும் தீவில் உண்டு.

கட்டடங்கள் எல்லாம் கலையழகு மிக்கவை. சிற்ப வடிவங்கள் கூர், கூராகச் செதுக்கப்பட்டு மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் மிக்கவையாகக் காணப்படுகின்றன. கணேசா (விநாயகா) சிலைகளும் சித்திரங்களும் பல இடங்களில் காணலாம். கிருஷ்ணா வணிக வளாகம் (ஷாப்பிங் மால்) கிருஷ்ணா தங்கும் விடுதி(ரிசார்ட்ஸ்) எல்லாம் இங்கு உள்ளன.

உலகிலேயே மிக அதிகமான பணம் (எண்ணிக்கையில்) இங்கேதான் புழக்கத்தில் உள்ளது. 'பாலி'யின் நாணயம் ரூபாய்தான். ஆனால் நம் ஊர் ஒரு ரூபாய்க்கு அந்நாட்டு நாணயம் இருநூறு சமம். ரூபா மதிப்பு அவ்வளவு குறைவு. ஆதலின், காப்பி விலை நம் ஊர் பணத்தில் ரூ.125/- விலை அதிகம்தான்.

பாலித்தீவின் மற்றுமொரு வியப்பு - ஆழ்கடலின் நடுவில் பத்துக் கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிப்பாதை கொண்ட அற்புதமான பாலம் அமைத்திருப்பதாகும். கண்ணால் காண்பதற்கும், பாலத்தின் மீது 'உந்து'வில் பயணிப்பதற்கும் ஆவலை மிகுவிக்கும் அருமையுடையது இது.

-கவிக்கோ ஞானச்செல்வன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இவ்வளவு பெரிய படத்தில் இதைக் கவனிக்கவில்லையா?

"பராசக்தி" படப்பிடிப்பு நிறைவு! கொண்டாடிய படக்குழு! | SK | Sudha Kongara

ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

குறைந்த வட்டி, உடனடி கடன்! Online Scam-ல் மாட்டிக்காதீங்க! | Cyber Scams | Online Shield

கர்பா குயின்... அனன்யா!

SCROLL FOR NEXT