உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினராக தைவானை அனுமதிக்க பல நாடுகள் விருப்பம் தெரிவித்தும் சீனாவின் நெருக்கடியால் உலக சுகாதார கூட்டத்தில் தைவான் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே தைவானை உலக சுகாராத நிறுவனத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அனுமதிக்க சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தைவான் சீனாவின் ஒரு பகுதி எனவும், தைவான் ஒரு தனி நாடு அல்ல எனவும் சீனா கூறி வருகிறது.
உலக நாடுகள் கரோனா பேராபத்திற்கு பிறகு தைவான் உலக சுகாதார நிறுவனத்தில் இணைக்கப்பட வேண்டும் என்ற ஆதரவினை வலுப்படுத்தியது. உலக சுகாதார நிறுவனத்தில் தைவான் இணைக்கப்படுவது குறித்து அமெரிக்க செயலர் ஆண்டனி பிளிங்கன் கடந்த வாரம் கூறியதாவது, உலகம் கரோனா எனும் பேராபத்திற்கு எதிராகப் போராடி வருகிறது. இந்தச் சூழலில் தைவான் முக்கிய சர்வதேச அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தில் சேர்க்கப்படாமல் உள்ளது. இது தைவானின் தரத்தைக் குறைக்கிறது” என்றார்.
75ஆவது சுகாதாரக் கூட்டத்தில் தைவானை உலக சுகாதார நிறுவனத்தில் நிரந்தர பார்வையாளராக அறிவிக்க பெலிஸ், எஸ்வதினி, ஹைதி, துவாலு உள்ளிட்ட 13 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
கரோனா பேராபத்துக் காலத்தை தைவான் திறம்பட கையாண்டுள்ளது. 2.3 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தீவு நாடான தைவானில் கரோனாவின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை 1,300-க்கும் சற்று அதிகமாக மட்டுமே இறப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த 1972ஆம் ஆண்டு தைவான் உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டது. அதன் பின் சீனாவுக்கும், தைவானுக்கும் இடையேயான உறவு சுமூகமாக இருந்த காலக்கட்டமான 2009 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் தைவான் உலக சுகாதார நிறுவனத்தின் பார்வையாளராக இருந்து ஆண்டுக் கூட்டங்களில் கலந்து கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.