கட்சிகளும், காட்சிகளும்.. யார் பெறுவார் அந்த அரியாசனம் - 22
ஐந்து கட்ட வாக்குப் பதிவு முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு நடக்க இருக்கும் ஆறாவது கட்டத்தில்தான் 15வது மக்களவைத் தேர்தலின் ...
ஐந்து கட்ட வாக்குப் பதிவு முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு நடக்க இருக்கும் ஆறாவது கட்டத்தில்தான் 15வது மக்களவைத் தேர்தலின் சுவாரஸ்யமான கட்டமே ஆரம்பமாகப் போகிறது. முன்பே குறிப்பிட்டிருந்தபடி, கேரளம், ஒரிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தனது எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க இருக்கும் காங்கிரஸ், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஏற்படும் இழப்புகளை சரிகட்டுவதுடன் தனது பலத்தை சற்று அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகப் பரவலாகக் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு அணியின் உத்தேச பலத்தின் அடிப்படையில் ஆறு விதமான காட்சிகள் ஏற்படும் வாய்ப்பு தென்படுகிறது. முதலாவது காட்சி, காங்கிரஸ ý க்கு சுமார் 155 அல்லது 160 இடங்களே கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதாவது, 2004 தேர்தலை விட 15 இடங்களில் காங்கிரஸ் கட்சி கூடுதலாக வெற்றி பெறுகிறது என்று கருதுவோம்.
காங்கிரஸின் தோழமைக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ள இப்போது திமுக, தேசியவாதக் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆகியவைதான். மேலே குறிப்பிட்ட கட்சிகள் அனைத்தும் சேர்ந்தாலும்கூட 35 இடங்களுக்கு மேல் கிடைக்குமா என்பது சந்தேகமே. சரி, தனது பழைய கூட்டாளிகளான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சிகளும் 10 இடங்களில்தான் வெற்றி பெறும் வாய்ப்பு காணப்படுகிறது. சுமார் 20 இடங்களில் வெற்றி பெறக் கூடிய சமாஜவாதி கட்சியின் ஆதரவையும் சேர்த்தால்கூட, கூட்டணிக் கட்சிகளால் 70க்கு மேற்பட்ட எண்ணிக்கையைத் தந்துவிட முடியுமா என்பது சந்தேகம்தான்.
ஆனால் காங்கிரஸின் 160, கூட்டணிக் கட்சிகளின் 70ம் சேர்ந்தால் சுமார் 230 இடங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெறக் கூடும். பாஜகவைத் தனிமைப்படுத்தும் கோஷத்துடன் இடதுசாரிகள் கை கொடுத்தால், மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பு உண்டு. நரசிம்ம ராவ் செய்ததுபோல, பாஜகவையும், இடதுசாரிகளையும் ஒருவர் மாற்றி ஒருவர் ஆதரிக்க வைத்து ஆட்சியில் தொடரவும் வாய்ப்புண்டு.
இங்கே சிக்கல் என்னவென்றால், இடதுசாரிகளின் ஆதரவு பெற்றால், சுமார் 10 இடங்களுடன் ஆதரவு தரும் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறும். தனது ஆதரவுக்கு விலையாக உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி ஆட்சியைக் கலைக்கச் சொல்வார் முலாயம் சிங். நரசிம்மராவைப் போல அரசியல் நெளிவு சுளிவுகள் தெரிந்தவரல்ல மன்மோகன் சிங்.
அடுத்த காட்சி, காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததுபோல 160 இடங்களில் வெற்றி பெறாமல் 140 இடங்களில்தான் வெற்றி பெறுகிறது என்று வைத்துக் கொள்வோம். தோழமைக் கட்சிகளின் பலத்தையும் சேர்ந்தால் 175 இடங்கள்தான் தேறும். முலாயம், லாலு, பாஸ்வான் ஆகியோர் சேர்ந்தாலும் கூட 200 முதல் 210 இடங்கள்தான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் திமுகவையும், லாலு - பாஸ்வான் கட்சிகளையும் உதறிவிட்டு, ஜெயலலிதா மற்றும் நிதீஷ்குமாரின் ஆதரவுக்குக் காங்கிரஸ் தயாராகலாம். அப்போதுகூட எண்ணிக்கை போதாமல் இருக்கும். தேவ கெ ü டா, சிரஞ்சீவி என்று எல்லோரையும் இழுத்துப் போட்டுக் கொண்டாலும் பெரும்பான்மையை நெருங்க முடியாது.
அந்தச் சூழ்நிலையில், 1996-ல் அமைந்ததுபோல, சரத்பவார், ஜெயலலிதா, முலாயம் சிங், நிதீஷ்குமார், நவீன், பிரகாஷ் காரத் என்றுகாங்கிரஸ் அல்லாத ஒருவர் அந்தக் கட்சியினர் ஆதரவுடன் பிரதமரானால், சந்திரபாபு நாயுடு மற்றும் நவீன் பட்நாயக்கே கூட ஆதரவு தரக் கூடும். ஆனால், அதற்குக் காங்கிரஸ் தயாராக இருக்குமா என்பது சந்தேகம்தான். யார் பிரதமர் என்கிற போட்டியிலேயே இந்தக் காட்சிக்குத் திரை விழுந்து விடும்.
மூன்றாவது காட்சி, பாரதிய ஜனதாக் கட்சிக்கு சுமார் 160 இடங்கள் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் கூட்டணிக் கட்சிகளான, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை, அகாலி தளம், இந்திய தேசிய லோக்தளம், ராஷ்ட்ரிய லோக்தளம், அசாம் கண பரிஷத் போன்ற கட்சிகள் சேர்ந்து சுமார் 40 இடங்களில் வெற்றி பெறக் கூடும். அதாவது, பாஜகவும் கூட்டணிக் கட்சிகளும் 200 இடங்களில் வெற்றி பெறுவதாக வைத்துக் கொள்வோம்.
அதிமுக, தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்ட்ர சமிதி, பிஜு ஜனதா தளம், திரிணாமூல் காங்கிரஸ் என்று பழைய தோழமைக் கட்சிகள் மீண்டும் பாஜகவிற்கு ஆதரவுக் கரம் நீட்டக் கூடும். ஏன், மாயாவதியேகூட சமாஜவாதி கட்சியின் ஆதரவில் ஒரு மத்திய அரசு அமைத்துவிடக் கூடாது என்பதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவைத் தரக்கூடும். மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.
ஒருவேளை, பாஜக 140 இடங்களில்தான் வெற்றி பெற்றால்? காட்சி நான்கு, வேறு விதமாக இருக்கும். பாஜகவும் கூட்டணிக் கட்சிகளுமாக 200 இடங்களில் வெற்றி பெற முடியாமல் போனால், பாஜகவின் பழைய தோழமைக் கட்சிகள் திரும்பிப் பார்க்குமா என்பது கூட சந்தேகம்தான். பிரகாஷ் காரத்தும் அந்தக் கட்சிகளுமாக, மூன்றாவது அணி அரசு அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தத் தொடங்கி விடுவார்கள்.
காட்சி ஐந்து, வேறு விதமானது. இடதுசாரிகளும், அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கும் கட்சிகளும் சுமார் 100 இடங்களில் வெற்றி பெற்று, நான்காவது அணியாகச் செயல்படும் முலாயம், லாலு, பாஸ்வானின் மூவரணி சுமார் நாற்பது இடங்களையும் வென்றால், இடதுசாரிகளின் கனவு ஒருவேளை பலிக்கக் கூடும். பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காக, காங்கிர ú ஸ அந்த அணிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கத் தயாராகும்.
1996-ல் அமைந்தது போல அப்படி ஒரு கூட்டணி ஆட்சி அமையுமானால், அது எத்தனை நாள் பதவியில் இருக்கும் என்பது நிச்சயமில்லை. யார் பிரதமர் என்று நாளும் பொழுதும் சர்ச்சை தொடரும். பிரதமர் பதவி கிடைக்காத கோபத்தில், கூட்டணிக் கட்சியினரே ஆட்சியைக் கவிழ்த்து விடலாம்.
ஆறாவது காட்சி என்ன என்று கேட்கிறீர்களா? காங்கிரஸ ý ம் பாரதிய ஜனதாவும் சேர்ந்து, இதுவரை மக்களவையில் பாதிக்கு மேல் இடங்களை வெற்றி பெற்று வருகின்றன. ஒருவேளை 15வது மக்களவையில் இந்த இரண்டு பெரிய கட்சிகளும் சேர்ந்து 272 இடங்களுக்கும் குறைவாக வெற்றி பெறும் சூழ்நிலை ஏற்பட்டால்?
யார் கண்டது? பிரகாஷ் காரத் தலைமையில் ஒரு இடதுசாரிக் கூட்டணி அரசோ, சரத் பவார் தலைமையில் மூன்றாவது அணி அரசோ அமையக் கூடும். யாரும் யாரும் ஆட்சி அமைக்க முடியாமல், மீண்டும் தேர்தல் வருமா என்றால், வராது. யாராவது ஒருவர் பிரதமராகவோ அல்லது சுழற்சி முறையில் ஆறு மாதத்திற்கு ஒரு பிரதமர் என்றோ சமரசம் செய்து கொண்டு மூன்றாவது அணி ஆட்சி அமைக்குமே தவிர, கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விடாது.
ஆறாவது கட்டத்தில், ஏற்படக் கூடிய ஆறு காட்சிகளைப் பார்த்தோம். இப்படியெல்லாம் நடக்கக் கூடும் என்று சொல்லிவிட்டோம். ஆனால் நடக்க இருப்பது என்ன? அரியாசனம் யாருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது?
இந்தக் கேள்விக்கு விடை தருவதற்கு முன்னால், கருத்துக் கணிப்புகள் என்ன சொல்கின்றன? அந்த கணிப்புகள் சரியாக இருக்குமா இருக்காதா? கருத்துக் கணிப்பு மற்றும் வாக்குக் கணிப்புகள் முறையாகத்தான் நடத்தப்படுகின்றனவா? இதையும் பார்த்து விடுவோம்.
(தொடரும்)