முகப்பு
அரசியல் அரங்கம்

இளைஞர்களை களமிறக்குகிறார் ஜெயலலிதா

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இளவயதினரை களப் பணியில் இறக்கிவிடுவதற்கு அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 2006-ம் ஆண்டுக்குப் பிறகு சட்டப் பேரவைக்கு நடந்த இடைத் தேர்தல

Updated On : 28 ஜூலை, 2025 at 4:08 AM
பகிர்:

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இளவயதினரை களப் பணியில் இறக்கிவிடுவதற்கு அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

2006-ம் ஆண்டுக்குப் பிறகு சட்டப் பேரவைக்கு நடந்த இடைத் தேர்தல்கள் அனைத்திலும் திமுக கூட்டணியே வென்றுள்ளது.

அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் திமுகவில் சேர்ந்தனர்.

இதுபோன்ற காரணங்களால் அதிமுகவுக்கு தொய்வு ஏற்பட்டிருந்தது. பென்னாகரம் இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பா.ம.க.  இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அதிமுக டெபாசிட் தொகையையே இழக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் தொண்டர்கள் சோர்ந்து போவதைத் தடுக்க புதிய அணுகுமுறைகளை ஜெயலலிதா மேற்கொண்டார். தீக்குளித்த தொண்டர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற மதுரைக்கும், ஈரோட்டுக்கும் சென்றார்.

சென்னையில் கட்சி அலுவலகத்துக்கு அடிக்கடி வரத் தொடங்கினார். முன்னாள் அமைச்சர் கே.ஏ. கிருஷ்ணசாமி மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடைய உருவப் படத்தைத் திறந்து வைக்க அவரின் வீட்டுக்குச் சென்றார்.

கட்சித் தொண்டர்களிடம் நேரில் மனு வாங்கவும் ஏற்பாடு செய்தார். முதல் நாளில் அவரே மனுக்களை வாங்கினார். இப்போது வாரம் முழுக்க கட்சி அலுவலகத்தில் மனுக்களை சில தலைவர்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

உள்கட்சித் தேர்தல் குறித்த புகார் மனுக்கள்தான் அதிகம் இருக்கும் என்றாலும், பரஸ்பரம் குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதா முக்கியத்துவம் தர மாட்டார் என்று கட்சி மேலிடத் தலைவர்கள் கூறுகின்றனர்.

உதவிகள் கேட்டு வரும் கோரிக்கைகள், பதவி கேட்கும் கோரிக்கை, தங்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு தேதி கேட்கும் கோரிக்கை போன்றவற்றுக்குதான் உடனுக்குடன் பதில் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்வி உதவி, திருமண உதவி போன்றவை குறித்து நடவடிக்கை எடுத்து உதவிகளை அளிப்பதன் மூலம் தொண்டர்களிடம் உற்சாகத்தை அதிகரிக்க முடியும் என்று மேலிடத் தலைவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அதிமுகவில் இருந்து முக்கிய தலைவர்கள் திமுகவுக்குப் போவது பற்றி இந்தத் தலைவர்கள் அதிகம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

நேரில் வந்து பேசினால் பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்ற அளவுக்கு ஜெயலலிதா யாருக்காகவும் இறங்கி வந்தது கிடையாது. முத்துசாமிக்காக அந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் பிறகும் முத்துசாமி திமுகவுக்குப் போய்விட்டார். இவ்வளவு கூறியும் முத்துசாமி சென்றுவிட்டார் என்று ஜெயலலிதா மீது தொண்டர்களுக்கு மரியாதை அதிகரிக்குமே தவிர, அது எந்த வகையிலும் கட்சிக்குப் பாதிப்பாக இருக்காது என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும், அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து செல்பவர்களுக்கு திமுகவில் பதவிகள், மரியாதை தரப்படும் போது ஏற்கெனவே அந்தக் கட்சியில் உள்ளவர்கள் அதிருப்தி அடைவார்கள் என்பதால், அது திமுகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று அதிமுகவினர் எதிர்பார்க்கின்றனர்.

நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 2 உறுப்பினர் இடங்கள் கிடைத்தன. இதில் ஓர் இடம் சசிகலாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தரப்படும் என்றும், இன்னொரு இடம் கட்சியில் தீவிர செயல்பாடு உள்ள ஒருவருக்கு வழங்கப்படும்என்று ஆரம்பத்தில் பேசப்பட்டது.

ஆனால் சசிகலாவின் குடும்பத்தினருக்கு கட்சியில் முக்கிய இடம் தரப்படவில்லை என்பதைக் காட்டும் வகையில் வேட்பாளர் தேர்வு அமைந்துவிட்டது.

சட்டப் பேரவைத் தேர்தல் சமயத்திலும் சசிகலாவின் குடும்பத்தினரிடம் இருந்து விலகித்தான் கட்சி இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் செயல்பாடுகள் இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பொதுத் தேர்தலின் போது திமுக அணிக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்தால் மட்டும்தான் அதிமுக வெற்றி பெற முடியும். பணம் செலவழிப்பதில் அதிமுக போட்டியிட முடியாது என்பதால் பிரசாரம்தான் பலமாக இருக்க வேண்டும் என்று முன்னணி தலைவர்கள் கருதுகின்றனர்.

அதற்காக, மறுவரையறை செய்யப்பட்டுள்ள சட்டப் பேரவைத் தொகுதிகள் அடிப்படையில் கட்சியில் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி போன்றவற்றுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. மாநகராட்சிகளில் வட்டார அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த அணிகளில் இருப்பவர்கள் 35 வயதுக்கு உள்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நேரத்தில் இவர்கள்தான் களப் பணியில் தீவிரமாகச் செயலாற்ற முடியும் என்று மூத்த தலைவர்கள் நம்புகின்றனர்.

இவர்களை ஒன்று திரட்டி, பிரசாரத்துக்கான உத்திகளை வகுத்துக் கொடுத்து களமிறக்கினால் 1996-ல் திமுக பெற்றது போன்ற ஆதரவை இப்போது அதிமுக பெற்றுவிடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.