இறைவழி மருத்துவம்

14. பரிசோதனைக் கூடத்தில் மனிதர்கள்

எனது நண்பர் தமிழ்நாடு மீன்வளத் துறையில் டைரக்டராக இருந்தார். அவர் மனைவிக்கு வயிற்று வலி.

டாக்டர் கனகசபாபதி

வயிற்று வலி என்ன ஆயிற்று?

எனது நண்பர் தமிழ்நாடு மீன்வளத் துறையில் டைரக்டராக இருந்தார். அவர் மனைவிக்கு வயிற்று வலி. எனவே, குடல் நோய் நிபுணரிடம் சிகிச்சைக்காகச் சென்றிருந்தார்கள். நண்பரின் மனைவிக்கு வயது சுமார் 45 ஆகியிருந்தது. அப்பெண்மணிக்கு, வாய் வழியாக ‘கேஸ்ட்ரோஸ்கோப்பி’ எனப்படும் கருவி செலுத்தப்பட்டது. டாக்டர் தனது அறிக்கையில், இரைப்பையில் அல்சர் எனப்படும் புண் இருப்பதாகவும், அதற்காக மாத்திரைகளை எழுதிக் கொடுத்து அனுப்பிவைத்தார். ஒரு மாதமாக மாத்திரைகளைச் சாப்பிட்ட பிறகும் வயிற்று வலி குறையவில்லை. மீண்டும் அதே மருத்துவரைப் பார்த்தார்கள். மீண்டும் அதே பரிசோதனை. அதாவது கேஸ்ட்ரோஸ்கோப்பி பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனை முடிவில், வயிற்றில் கேன்சர் வந்திருக்கிறது. மற்ற இடங்களுக்குப் பரவிவிட்டது. அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்று கூறி கைவிரித்துவிட்டிருந்தார்கள் டாக்டர்கள். அந்தப் பெண்மணியைக் காப்பாற்ற முடியவில்லை. ஒரு மாதத்துக்கு முன்பு வயிற்றில் புண்தான், சரியாகிவிடும் என்று சொன்னவர், அடுத்த மாதமே அது கேன்சர் குணப்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டார். அப்படியென்றால், இப்படிப்பட்ட பரிசோதனையை எப்படி நம்புவது? அந்தப் பெண்மணியின் கணவருக்கு வயது 50. ப்ளஸ் 2 படித்துக்கொண்டிருக்கும் மகன் இருக்கிறான். ஒரே மகன்தான். இவர்களுடைய வாழ்க்கை என்னவாகும்?

கர்ப்பப்பை சினை முட்டைப் பகுதியில் கட்டி

மற்றுமொரு சம்பவம். கலெக்டராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். அவரைச் சந்தித்தபோது அவர் கூறியது - ‘நான் கலெக்டராக வேலைப் பார்க்கும்போது, தஞ்சாவூரிலிருந்து எனது மனைவியை வயிற்று வலிக்காக சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவரிடம் காட்டினேன். பெண் மருத்துவரைப் பார்த்தோம். வயிற்றில் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு, கர்ப்பப்பையும், மற்ற உறுப்புகளும் நன்றாக இருக்கின்றன என்று சொல்லியதன் காரணமாக, சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டேன். ஒரு மாதம் கழித்து வயிற்று வலி அதிகமாகவே, மீண்டும் ஸ்கேன் பண்ணிப் பார்த்ததில் கர்ப்பப்பை அடியிலுள்ள சினைப்பையில் கேன்சர் இருப்பதாகவும், மற்ற உறுப்புகளுக்குப் பரவிவிட்டதால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் சொல்லிவிட்டார்கள்.

அவருடைய கேள்வி, ‘எப்படி டாக்டர் ஒரு மாதத்துக்கு முன்பாக சினைப்பையில் எந்தப் பாதிப்பும் இல்லை என்று சொன்னார்கள். அடுத்த மாதமே கட்டி பெரிதாகிப் பரவிவிட்டதாகச் சொல்கிறார்கள். என் மனைவி இறந்துவிட்டாள். இது என்ன நியாயம் டாக்டர்? மருத்துவ உபகரணங்களை நம்பி மருத்துவம் பார்க்கும் மனிதர்களை நம்பியதால் ஏற்பட்ட விளைவு இது.

இப்போது நான் இங்கே கூறப்போகும் விஷயம், நிச்சயமாகப் பெரும்பாலான மனிதர்களுக்குப் படிப்பினையைக் கொடுக்கும் என நம்புகிறேன்.

சிறுகுடலில் கேன்சர் - என்ன நடந்தது?

அவர் சுமார் 55 வயது நிரம்பியவர். சென்னையிலுள்ள புகழ்பெற்ற ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த எட்டு மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்படுவதாகவும், பல மருத்துவர்களிடம் காட்டியும் வயிற்று வலி குறையவில்லை என்றும் கூறினார். அவருக்கு அடுத்த நாளே கேஸ்ட்ரோஸ்கோப்பி பரிசோதனை எங்கள் மருத்துவமனையிலேயே செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இது எங்களது மருத்துவமனை மூடுவதற்கு முன்பாகச் செய்யப்பட்டது. பரிசோதனை செய்வதற்காகக் குடல் நோய் நிபுணரே வந்திருந்தார். அவர் அந்தக் கருவியை வயிற்றுக்குள் செலுத்தி, இரைப்பையையும் தாண்டி டியோடினம் முதல் பாகத்துக்கும் சென்றார். என்னை அழைத்து என்னையும் பார்க்குமாறு கூறினார். பிறகு என்னிடம், ‘நல்லா பார்த்துக்கோங்க டாக்டர். இதுவரையிலும் கருவி வந்துவிட்டது. வயிற்றில் புண்ணோ, கட்டியோ இல்லை. எனவே, நான் கருவியை வெளியே எடுத்துவிடட்டுமா?’ என்று கேட்டார்.

நான் அவரிடம், கருவியை டியோடினம் இரண்டாவது பாகம் வரை செலுத்துமாறு கூறினேன். அங்கே பார்த்தபோது, சின்னச் சின்ன கொப்புளங்களாக டியோடினம் இரண்டாம் பாகத்தில் பரவியிருந்தது. அவற்றில் சிலவற்றை அந்தக் கருவியால் வெட்டி எடுத்து பரிசோதனைச் சாலைக்கு அனுப்பினோம். சென்னையிலுள்ள புகழ்பெற்ற மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து மருத்துவமனைக்கு மருத்துவ அறிக்கை, ஒரு வாரம் கழித்து வந்தது. வயிற்றில் புண் இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மருத்துவ அறிக்கை தவறு என்று உணர்ந்தேன். அதை எப்படி நிரூபிப்பது? அந்தப் பரிசோதனையை மீண்டும் நடத்த முடிவு செய்தேன். ராயப்பேட்டையிலுள்ள ஒரு புகழ்வாய்ந்த மருத்துவப் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பிவைத்தேன். கணவன் மனைவி இருவரும் டாக்டர்கள். வெளிநாட்டில் படித்தவர்கள். அவர்களும் கேஸ்ட்ரோஸ்கோப்பி பரிசோதனை நடத்திவிட்டு, வயிற்றில் புண் என்று அறிக்கை கொடுத்துவிட்டார்கள்.

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்கோ தவறு என்று மட்டும் தெரிந்தது. மூன்றாவது முறையாக, இரண்டு இடத்திலும் எடுத்த அந்தத் திசுக்களை அதாவது கண்ணாடியில் பொருத்தப்பட்ட திசுக்களை, ஒரு மருத்துவரிடம் அனுப்பிவைத்தேன். அவர் அதை மைக்ரோஸ்கோப்பில் பார்த்துவிட்டு, அந்தத் திசுவில் கேன்சர் இருக்கிறது என்று அறிக்கை கொடுத்தார்.

உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தேன். இரண்டு புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர்கள், மூன்றாவது மருத்துவ நிபுணராக நானும் உடன் இருந்தேன். மயக்க மருத்துவர், நோயாளியை மயங்கவைத்த பிறகு அறுவை சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. வயிற்றை திறந்து இரைப்பைக்குப் பின்பு உள்ள கணையத்தைப் பார்த்தோம். அறுவை சிகிச்சை நிபுணர், கணையத்தை தொட்டுப் பார்த்துவிட்டு என்னிடம், ‘இது டியோடினத்தில் உள்ள கேன்சர். இது கணையத்தில் உள்ள கேன்சர். அங்கிருந்து இது குடலுக்குப் பரவியிருக்கிறது. எனவே, கேன்சர் வந்த குடலையும், கணையத்தையும் அறுவை சிகிச்சை செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு, இரைப்பையையும், சிறு குடலையும் நேரடியாக இணைத்துவிடலாம். இதற்கு மேல் வேறு ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.

நான் அவரிடம், ‘கணையத்தில் புற்றுநோய் கிடையாது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை செய்யுங்கள்’ என கேட்டுக்கொண்டேன். அத்துடன், ‘குடலில் கேன்சர் பாதித்த பகுதியையும், கணையத்தினுடைய மூன்று பகுதிகளான தலை, உடம்பு, வால் ஆகியவற்றில் இருந்து தலையை மட்டும் எடுத்துவிட வேண்டும். இதனால் பித்த நீரும், கணைய நீரும் குடலில் சேர்வது துண்டிக்கப்பட்டுவிடும். எனவே, பித்த நீரும் கணைய நீரும் குடலில் சேர வழி அமைக்க வேண்டும். இவ்வளவையும் செய்து முடிக்க, கிட்டத்தட்ட 8 மணி நேரம் ஆகும். இருந்தாலும் இதைச் செய்து முடிக்க வேண்டும்’ என்று உறுதியாகக் கூறினேன்.

இறைவன், மருத்துவ நிபுணரின் மனத்தை மாற்றினார்

இதற்கு, அறுவை மருத்துவ நிபுணர் என்னிடம், ‘இவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை செய்துகொண்ட யாரும் ஒரு வருடத்துக்கு மேல் உயிர் வாழவில்லை. இரண்டாவது, நோயாளி தனக்கு கேன்சர் நோய் வந்திருக்கிறது; எனவே ஒரு வருடத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டோம் என்று முடிவு செய்திருப்பார். அதனால், அவர்கள் நம்மைத் தவறாக நினைக்க மாட்டார்கள். எனவே, கேன்சர் உள்ள பகுதியை எடுக்க வேண்டாம்’ என்று கூறினார்.

உண்மைக்குக் கிடைத்த வெற்றி

நான், இது தவறு. உலகில் எங்கும் யாரும் வாழாவிட்டாலும் இவர் வாழட்டுமே. நானும் உலகம் தழுவிய குடல் நோய் சம்பந்தப்பட்ட மாநாடுகளில் கலந்துகொண்டு வருகிறேன். நாளைக்கு யாராகிலும், எந்த வெளிநாட்டாவராகிலும், அறுவை சிகிச்சை செய்தோம்; இத்தனை வருடம் வாழ்கிறோம் என்று ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பித்தால், அடுத்த நாள் உங்கள் வீட்டுக்கு வருவேன். கதவை தட்டுவேன். அன்று நீங்கள் பதில் சொல்லி ஆக வேண்டும் என்று சொன்னேன். சரிங்க டாக்டர், நாம ஆபரேஷன் தொடர்வோம் என்று கூறினார்.

மதியம் ஒரு மணிக்கு ஆரம்பித்த அறுவை சிகிச்சை இரவு எட்டரை மணிக்கு முடிந்தது. வெட்டி எடுக்கப்பட்ட குடலையும், கணையத்தையும், பக்கத்து ரூமுக்கு எடுத்துச்சென்று கத்தியால் பிளந்து பார்த்தோம். கேன்சர் செல்கள் குடலில் தோன்றி, கணையத்தின் தலைப்பகுதி வரை நின்றிருந்தது. அதைப் பார்த்த அறுவை சிகிச்சை நிபுணர், ‘நீங்கள் சொன்னது சரிதான். கணையத்திலிருந்து குடலுக்குச் செல்லவில்லை. குடலிலிருந்துதான் கணையத்துக்குச் சென்றுள்ளது’ என்றார்.

சரியான தருணத்தில், கேன்சரால் பாதிக்கப்பட்ட பகுதி நீக்கப்பட்டுவிட்டது. ஒரு பெரிய நன்மைக்காக, இறைவன் கொடுத்த ஆற்றலைக் கொண்டு டாக்டரிடம் எடுத்துச் சொன்னேன், அவரும் ஒப்புக்கொண்டார். அன்று அந்த நோயாளி காப்பாற்றப்பட்டார். அந்த நோயாளி பல வருடங்கள் வாழ்ந்தார். 10 வருடங்களுக்கு மேலாகத் தொடர்பில் இருந்தார். இப்போது உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.

இப்படித்தான், நான் மருத்துவமனை நடத்திய காலங்களில், நல்லதுக்காக மிகவும் போராடவேண்டி இருந்தது.

மருந்து, மாத்திரை, அறுவை சிகிச்சை எதுவும் தேவையில்லை. நோயாளிக்கு எந்தக் கஷ்டமும் தேவையில்லை. கேன்சராக இருந்தாலும், டிபியாக இருந்தாலும், எல்லாவற்றுக்கும் பிரார்த்தனைதான். இந்த அவஸ்தைகளில் சிக்கி உடலும் மனமும் அதிகம் கஷ்டப்பட வேண்டாம் என்று இறைவன் காட்டிய வழிதான் இறைவழி மருத்துவம்.

இனிமேல் இப்படி கஷ்டம் வேண்டாம்!

ஒவ்வொரு நாளும் நோயாளிகளுக்காக நான் பட்ட கஷ்டமும், நோயாளிகள் பட்ட கஷ்டமும் நினைத்துப் பார்க்கும்போது, இறைவன் எந்த அளவுக்கு நம்மைக் காப்பாற்றி இருக்கிறான் என்று தோன்றுகிறது.

அறுத்தெடுக்கப்பட்ட குடலை ஒரு பக்கெட்டில் எடுத்துக்கொண்டு, முதன்முதலாக மருத்துவ அறிக்கை கொடுத்த அந்த மருத்துவரைச் சந்தித்தேன். ‘நீங்கள் கொடுத்த அறிக்கையைப் பாருங்கள். நீங்கள் கொடுத்த அறிக்கைக்கும், வெட்டி எடுக்கப்பட்ட குடலுக்கும் சம்மந்தம் உள்ளதா? எவ்வளவு பெரிய தவறை செய்துவிட்டீர்கள்?’ என்றேன். அதற்கு அவர், ‘மருத்துவத் துறையில் தவறு நடக்கலாமே’ என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டார்.

எனவேதான் சொல்கிறேன். இவர்களை நம்பலாமா? கூடாதா? நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

தொடர்புக்கு- டாக்டர் கனகசபாபதி: 9840910033

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT