…பின்னர் சென்னையில் மழை பெய்தது
இப்படிப்பட்ட அழிவுகளைச் செய்ய இன்று நமக்குக் காலனிய ஆட்சியாளர்களும், மதமாற்ற நோக்கங்களும் தேவையே இல்லை. நாமே அவற்றை அருமையாகச் செய்வோம். இன்று, குளங்களை ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றி, கூறுபோட்டு விற்கிறவர்கள், பிரதோஷம் தோறும் கோவில் செல்கிற பக்த பெருமக்கள்தான்.
இந்தியாவின் பெரும் பகுதிகள் ‘வானம் பார்த்த பூமி’ என அழைக்கப்பட முடிந்தவை. பெய்யும்போது பெரும் மழைகள், பெரும் வெள்ளங்கள். பொய்த்துவிட்டாலோ வாழ்வாதாரமே இல்லாமல் வறண்டுபோகும் நிலை. இந்தச் சூழ்நிலைதான் இந்தியாவில் தொன்றுதொட்டே நிலவுகிறது. எனவே, அதன் ஆதி விடிகாலை தொட்டே இந்தியப் பண்பாட்டில் நீர் சேகரிப்பும், சேகரித்த நீரைப் பராமரிப்பதும் முக்கிய அம்சங்களாக இருந்து வருகின்றன.
இன்றைய குஜராத்தில் உள்ளது தோலவிரா (Dholavira). சிந்து - சரஸ்வதி பண்பாட்டைச் சார்ந்த ஒரு பழமையான நகரத்தின் எஞ்சிய தொல்-எச்சங்கள். 5000 ஆண்டுகளுக்கு பழமையானது. நூறு ஏக்கர்களுக்குப் பரந்து விரிந்த நகரம். 1967-ல், இந்திய அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தோலவிரா, மழை நீர் சேகரிப்புக்கான ஒரு முன்மாதிரி என்றே சொல்ல வேண்டும். மழை நீரால் ஏற்படும் இரு வெள்ள நீரோட்டங்கள் நடுவே அமைக்கப்பட்டிருக்கிறது இந்நகர். வடக்கில் இருக்கும் நீர் படுகை மன்ஸர் என்றும் தெற்கில் இருப்பது மன்ஹர் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரு மழை நீர் வெள்ளப் பெருக்குகளில் இருந்தும் நீரை அற்புதமான முறையில் சேகரித்தெடுத்துப் பயன்படுத்தும் ஒரு அமைப்பினை இந்நகரத்தை வடிவமைத்தவர்கள் அமைத்திருக்கின்றனர்.
முழு நகரமும், ஏரிகளாலும் குளங்களாலும் சூழ்ந்திருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நகரால் 2,48,463 m கன அளவு மழை நீரைச் சேகரிக்க முடியும். ஏரிகளின் நகரம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் இதைக் கருதுகின்றனர். தோலவிராவின் காலகட்டம், இன்றைக்கு நான்காயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர்.
தொடர்ந்து, பாரதப் பண்பாட்டில் நீர் வளம் பேணுவதென்பது மைய அம்சமாகவே இருந்து வந்திருக்கிறது. ஒரு அரசு நல்லரசாகக் கருதப்பட, நீர்நிலைகள் குறித்த அறிவியலில் தேர்ந்த ஒருவர் அரசவையில் இருப்பது அவசியம் எனக் கருதப்பட்டிருக்கிறது. தாமே உருவாக்கியவை என்றாலும்கூட, நீர்நிலைகளை மானுடப் பயன்பாடு என்பதைத் தாண்டி, அவற்றைத் தம் அளவில் உயிருள்ள அமைப்புகளாகக் கருதியிருக்கிறார்கள். அவை ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்; அத்துடன் அவற்றைச் சுற்றி மரங்கள் வைக்கப்பட வேண்டும். என்ன மரங்கள் என்பதைக்கூட சொல்லியிருக்கிறார்கள். கடுக்காய் மரங்கள், நெல்லி மரம், அரச மரம்… ஆக, இங்கு நீர்நிலைகளின் பராமரிப்பு, சொந்தக் குழந்தைக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்புடன் செய்யப்பட்டிருக்கிறது.
அப்படியே நாட்டின் மறுமுனையில் இருக்கும் நாகர்கோவிலுக்கு வாருங்கள். நாகர்கோவில், கன்யாகுமரி மாவட்டத்தின் தலைநகர். காலனிய ஆட்சியின் காலகட்டம். கிழக்கிந்திய கும்பெனி ஆட்சியாக வேர் பிடித்து வளர்ந்த காலகட்டம். பத்தொன்பதாம் நூற்றாண்டு.
நாகராஜர் கோவிலின் தெற்கு வாயில் மகாமேரு மாளிகை. அதன் முன், ஒரு பெரிய குளம் இருந்தது. அங்குதான் தெப்பத் திருவிழா நடைபெற்றது என்பதை முந்தைய தலைமுறையின் முதியோர், அவர்களின் குழந்தைப் பருவ நினைவுகளாகக் கூறியுள்ளனர். இக்குளத்தின் கரைகள், பெரும் கற்களால் வலுவாக அமைக்கப்பட்டிருந்தன. 1818-ம் ஆண்டு, லண்டன் மிஷனின் தலைமையகம் நாகர்கோவிலில் அமைக்கப்பட்டது. அன்று நாகர்கோவில், திருவிதாங்கூருடன் இருந்தது. திருவிதாங்கூரை ஆண்டவர் கௌரி பார்வதி பாய். அவர் பெயரளவில்தான் ராணி. உண்மையான ஆட்சி அதிகாரம், கும்பெனி பிரதிநிதியான கர்னல் மன்றோவிடம் இருந்தது. மன்றோவின் கட்டளைப்படி, மத போதகர் சார்ல்ஸ் மீட், நாகர்கோவில் உரிமையியல் நீதிபதியாக திருவிதாங்கூர் அரசால் நியமிக்கப்பட்டார். இன்றைக்கும், நாகர்கோவிலில் இவர் பெயரால் ஒரு சாலை (மீட் சாலை) இருக்கிறது.
ஒழுங்காக நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உடையவர் சார்ல்ஸ் மீட். பின்னர், திருவிதாங்கூரில் கிறிஸ்தவச் சபையின் வரலாற்றை மதப் பணியாளர் அகுர் (C.M.Agur) எழுதும்போது, மீட் அவர்களின் நாட்குறிப்புகள் சிறந்த தரவுகளை அளிக்கின்றன. நாகர்கோவிலில் அன்றைய பிரதான சாலை அருகே, ‘மேற்கே இஸ்லாமிய மசூதியும் கிழக்கே அஞ்ஞானிகள் வழிபடும் இந்துக் கோவிலும்’ உள்ளதை அவர் காண்கிறார். அவ்விடத்தில் மையமாக ‘உயிருள்ள தேவனுக்கு’ ஒரு சர்ச் எழுப்பப்பட வேண்டுமென அவர் கருதுகிறார். இரு பக்கங்களிலும் உள்ள இந்து கோவிலையும் முஸ்லிம் மசூதியையும் சிறுமையாக்கி, கர்த்தரின் சர்ச் மென்மேலும் ஓங்கி வளர கர்த்தரின் அருளை கோரி எழுதுகிறார்.(1) நீதிபதியாகத் தமக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தினார், சார்ல்ஸ் மீட். சிறையிலிருந்த கைதிகளைப் பயன்படுத்தி, நாகராஜர் கோவிலுக்கான தெப்பக்குளத்தின் கரைகளைக் காத்த பெரும் கற்களைக் கொண்டுவரச் செய்தார். அவற்றைப் பயன்படுத்தி தேவாலயத்தை உருவாக்கினார். தம் திருப்பணிக்கு நாகராஜர் கோவில் யானையையே பயன்படுத்திக்கொண்டார் மீட். (Agur, p.708), 1819-ல் தொடங்கிய வேலை 1843-ல்தான் இனிதே முடிந்தது. இன்று, மீட் எழுப்பிய தேவாலயம், உள்ளூர் கிறிஸ்தவப் பெருமக்களால் ‘கல் கோவில்’ என அழைக்கப்படுகிறது.(2)
(பழைய புகைப்படம்: கரையிழந்த குளம் - இன்று திடல், நன்றி: கோவில் கும்பாபிஷேக மலர்)
கரை இடிக்கப்பட்ட நாகர் குளம், ஆண்டாண்டு காலமாகக் குறுகிக் குறுகி அவலப்பட்டது. தெப்பத் திருவிழா உத்சவம் நின்றது. தெப்பக்குளம், குட்டையாகி பின்னர் திடலானபோது நிறுத்தப்பட்டது. குமரி மாவட்ட வரலாற்றில் ஈடுபாடு கொண்ட டாக்டர் பத்மநாபன், 1992-ல் எழுதுகிறார் - “நாகராஜா ஆலயத்தின் புகழை மங்கசெ செய்ய எடுக்கப்பட்ட திட்டத்தின் முதல்படி இது. நாகராஜர் ஆலயத்துக்கு உரிமையான தெப்பக்குளம், அந்த உரிமையைப் பறிக்கொடுக்கும் நிலையில் உள்ளது. நாகர்கோவில் நாகராஜா ஆலயத்தின் தெப்பக்குளமாக திகழ்ந்த இடம், தாற்காலிகப் பேருந்து நிலையமாக ஒருமுறை மாறியது. பிற சமயத்தாரின் பிரசார மேடையாக்கும் முயற்சிகூட ஒருமுறை நடைபெற்றது”. (டாக்டர் எஸ்.பத்மநாபன், நாகராஜா ஆலயமும் குளங்களும், 1992).
ஆனால், இப்படிப்பட்ட அழிவுகளைச் செய்ய இன்று நமக்குக் காலனிய ஆட்சியாளர்களும், மதமாற்ற நோக்கங்களும் தேவையே இல்லை. நாமே அவற்றை அருமையாகச் செய்வோம். இன்று, குளங்களை ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றி, கூறுபோட்டு விற்கிறவர்கள், பிரதோஷம் தோறும் கோவில் செல்கிற பக்த பெருமக்கள்தான்.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தோலவிரா போன்றே, நாகர்கோவில் என்று இன்று அறியப்படும் சிறிய நகரமும் குளங்கள் சூழ்ந்த ஒரு நகரமாகத்தான் இருந்தது. 15-க்கும் மேற்பட்ட குளங்கள் – பெரும் குளங்கள் இருந்தன. அருள்மிகு நாகராஜர் கோவிலுடன் இணைந்தே பல குளங்கள் இருந்தன. இன்று, பேருந்து நிலையங்களும் பெரும் வர்த்தக மையங்களும், இக்குளங்களை அழித்தே கட்டப்பட்டுள்ளன. நகரின் மையத்தில் இருக்கும் அண்ணா பேருந்து நிலையம், இன்றும் ‘குளத்து பஸ் ஸ்டாண்ட்’ என்றே அழைக்கப்படுகிறது. தாழ்வாக அமைந்திருக்கும் அந்தப் பேருந்து நிலையத்துக்குள் செல்ல இருக்கும் படிகளின் அமைப்பே, குளத்தின் விஸ்தீரணத்தின் நினைவை நமக்கு அளிக்கும். அதேபோல, பெதஸ்தா காம்ப்ளக்ஸ் எனும் வர்த்தக நிறுவனம், கிறிஸ்டோபர் பேருந்து நிலையம் ஆகியவை, குளங்களை அழித்துக் கட்டப்பட்டவையே. முப்பதாண்டுகளுக்கு முன்னர்கூட, ஊரின் நடுவில் உயிருடன் இருந்த செட்டிக்குளம், இன்று வர்த்தக நிறுவனங்களும் திருமண மண்டபங்களும் கொண்ட ‘ரியல் எஸ்டேட்’ களமாக மாற்றப்பட்டுவிட்டது.
இருபதாம் நூற்றாண்டு சென்னைக்கு வாருங்கள்.
1997-ல், முருகப்ப செட்டியார் ஆராய்ச்சி மையம் (Murugappa Chettiar Research Centre (MCRC), சென்னை மக்களின் வாழ்வாதார நீர்த் தேவை எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்பதைக் குறித்து ஒரு கள ஆராய்ச்சி நடத்தியது. 155 மாநகராட்சி வார்டுகளில், 10000 வீடுகளில் நடத்தப்பட்ட அந்த ஆராய்ச்சி மூலம், மக்களின் நீர்த் தேவைகளை 80 விழுக்காட்டுக்கும் மேல் நிலத்தடி நீரால் பூர்த்தி செய்யப்படுவது தெரிந்தது. நிலத்தடி நீர் என்பது நம் முன்னோர்களாலும் இயற்கையாலும் சேமித்து வைக்கப்பட்ட மூலதனம். அதிலிருந்து நாம் அபரிமிதமாக எடுத்துக்கொண்டிருக்கிறோம், நாளைய சந்ததிகளுக்கு ஏதுமில்லாமல். MCRC, பொதுமக்கள் பங்கேற்புடன் மழை நீரைச் சேகரிக்கும் பாரம்பரிய அமைப்புகளை – ஏரிகள், கோவில் குளங்கள் ஆகியவற்றை - சரி செய்ய வேண்டும் என்றும் பாதுகாக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.
கோவில் குளங்கள்?
சென்னையில் இயங்கும் சூழலியல் கல்வி மையம், சி.பி.ராமசாமி ஐயர் சூழலியல் கல்வி மையம் (C.P.Ramaswami Aiyar Environmental Educational Center - C.P.R.EEC). 2004-ல், இந்த மையம் சென்னையில் மட்டும் உள்ள ஐம்பது கோவில் குளங்களைக் கண்டறிந்து, அவற்றின் தல புராணம், அவற்றின் நீர்த் தரம், அவற்றின் இன்றைய நிலை ஆகியவற்றை ஆவணப்படுத்தி ஒரு நூலாக வெளியிட்டது. சென்னை மாநகராட்சி என இன்றைக்கு அறியப்படும் நிலப்பரப்பில் மட்டும் 124 ஏரிகள் இருந்தன. 50 கோவில் குளங்கள் இருந்தன. கோவில் குளங்கள் இன்றும் எஞ்சி இருக்கின்றன. மெல்ல அவை இனி மாளுமாக இருக்கலாம். 1883-ல், பிரிட்டிஷ் அரசு இந்த நீர்ச் சேகரிப்பு அமைப்புகளைக் குறித்து ஒரு சர்வே நடத்தியது. மாபெரும் பஞ்சத்தைத் தொடர்ந்து செய்யவேண்டி வந்த ஒரு சர்வே. இவை அனைத்துமே அப்பகுதிக்கான மழை நீரை அறுவடை செய்யும் ஒரு பேரமைப்பின் அங்கங்களாக அமைக்கப்பட்டவை எனக் கண்டறிந்தது.
காலனிய ஆட்சியின்போது, நம் பாரம்பரிய நீர்ப்பாசன - விவசாய முறை தகர்ந்தது. அத்துடன், நீர்நிலைகள் பேணுதலும் குறையலானது. ஆனால், எப்படிப்பட்ட அமைப்புகளை நாம் பெற்றிருந்தோம்? கர்னல் ஜெ.ஆண்டர்ஸன், மெட்ராஸில் இருந்த பிரிட்டிஷ் ராணுவத்தின் பொறியியலாளர் அணியில் கர்னலாக இருந்தவர். அவர், தக்காணத்தில் தாது வருஷ பஞ்சத்துக்குப் பிறகு ஜனவரி 1878-ல், ‘இந்தியாவில் பஞ்சங்களும் பெருவெள்ளங்களும்’ (Famines and Floods in India) எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரையில், தென்னிந்தியாவில் பதிவு செய்த தகவல் வெளியிடப்பட்டிருந்தது -
உலகின் வேறு எந்தப் பகுதியிலும் சுதேச அரசர்கள் தங்கள் தேசத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த அளவு முயற்சிகள் செய்ததில்லை.
தென்னகம் செல்லச் செல்ல அந்நியப் படையெடுப்புகளின் பாதிப்புகள் இல்லாத ஹிந்து அரசர்களின் ராஜ்ஜியங்களில் விவசாய நீர்ப் பாசன அமைப்புகள் மிக முழுமையாகவும் விரிவாகவும் அமைந்திருக்கின்றன.
…கிடைக்கும் ஒவ்வொரு நீராதாரமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குளங்களும் ஏரிகளும் மிகச் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாகக் கிடைக்கும் மழை நீருக்கு மட்டுமாக அவை வடிவமைக்கப்படவில்லை. மிக அதிகமாக (வெள்ளப் பெருக்குகளை ஏற்படுத்தும்) மழைகளையும் கணக்கில் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
…இவை தவிர, ஆறுகள், கால்வாய்கள், இவை இரண்டையும் இணைக்கும் அமைப்புகள் என அனைத்துமே நீர்ப்பாசன வசதிக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போக்குகளை –குறிப்பாக இந்திய நீர்ப்பாசன நிர்வாகத்தைப் புறக்கணித்ததை, கடுமையாகக் கண்டித்தவர் சர். ஆர்தர் காட்டன். 1850-களில், தென்னிந்தியாவில் விளங்கிய சுதேசி நீர்ப்பாசன முறையை இவர் கண்டு வியந்திருக்கிறார். இவர் சேலம் மாவட்டக் கிராமங்களில் மட்டும் 8864 கிணறுகள், 218 தடுப்பணைகள், 164 சிறுவாய்கால்கள், 1017 சிறுகுளங்கள் புறக்கணிக்கப்பட்டு பாழ்பட்டன என்கிறார்.1877 தாது வருஷ பஞ்சத்தின் ஒரு முக்கியச் சோக மையமாக அமைந்தது சேலம் மாவட்டம்தான். (Mike Davis, Late Victorian Holocausts: El Nino Famines and the Making of the Third World, Verso Books,2002, p.336).
சரி. இப்போது விடுதலை அடைந்துவிட்டோம். நம் நீர்நிலைகளை நாம் என்ன செய்தோம். சி.பி.ராமசாமி ஐயர் சூழலியல் கல்வி மையம் வெளியிட்டிருக்கும், சென்னை கோவில் குளங்கள் குறித்த நூல் என்ன சொல்கிறது? ஐம்பது கோவில் குளங்களில் ஒரு சிலவற்றின் நிலைகளைக் காணலாம்.
ஆதம்பாக்கம், நந்தீஸ்வரர் கோவில் குளம்: “…கரைகளில் அமைந்திருக்கும் கடைகளிலிருந்து கழிவுநீர் குளத்தில் கலக்கிறது”.
அயனாவரம் காசி விஸ்வநாதர் கோவில் குளம்: “…சுற்றியும் வேகமாக நடக்கும் நகரமயமாக்கலால், எல்லா மடைகளும் அடைக்கப்பட்டுவிட்டன”.
ஜார்ஜ் டவுன், காசி விஸ்வநாதர் கோவில் குளம்: “…சுற்றியும் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பினால், இந்தக் குளத்துக்கு நீர் கொண்டு வரும் அமைப்பு அடைக்கப்பட்டுவிட்டது. ஆண்டுகளாகத் தொடர்ந்து குப்பைகள், கழிவுகள் கோவில் குளத்தின் தென் கிழக்குப் பகுதியில் கொட்டப்பட்டு, அந்த இடம் மூடப்பட்டு, அது இன்று கார்கள் நிறுத்தும் பகுதியாக மாறிவிட்டது”.
கோயம்பேடு, லவ-குச தீர்த்தம்: “…கோவில் மடைகள் அடைக்கப்பட்டுவிட்டன”.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், கபாலி தீர்த்தம்: “…சுற்றிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களால், மடைகள் அடைக்கப்பட்டுவிட்டன”.
மயிலாப்பூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில், சித்திரக் குளம்: “…மிகவும் மாசுபடுத்தப்பட்டுள்ளது. எல்லாவிதமான கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் என மோசமாக்கப்பட்டுள்ளது”.
நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் குளம்: “…குப்பைகள் குன்றென குவித்திருக்கின்றன. ஆகாயத் தாமரைகள் பூத்திருக்கின்றன. சுற்றியிருக்கும் கடைகளிலும் வங்கிகளிலும் இருந்து கழிவு நீர் குளத்துக்குள் வருகிறது”.
பார்க் டவுன், ஏகாம்பரேஸ்வரர் கோவில் குளம்: “கிழக்குக் கரையைத் தவிர்த்து, மூன்று பக்கங்களிலும் அபார்ட்மென்ட் குடியிருப்புகள் வந்துவிட்டன. இந்த அபார்ட்மென்ட்களில் வசிக்கும் மக்கள், கோவில் குளம் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. தம் வீட்டுக் கழிவுகளால் கோவில் குளத்தை மாசுப்படுத்துகிறார்கள்”.
மயிலாப்பூர் கோவில் குளத்தின் உள்ளே
தொடர்ந்து இதே கதைதான்
கிண்டி பொறியியல் கல்லூரியில், நீராதார மையம் ஒன்று உள்ளது. (Centre for Water Resources, Guindy Engineering College) இதைச் சார்ந்த ஆராய்ச்சியாளர் மாதவி கணேசன். இவர், சென்னையில் உள்ள 39 கோவில் குளங்களின் நீர் சேகரிப்புச் சாத்தியங்களை ஆராய்ச்சி செய்திருக்கிறார். குளங்களின் சராசரி ஆழம் 4.5 மீட்டர்கள். இவை மூலம் 13,00,000 m கன அளவு மழை நீரைச் சேகரிக்க முடியும். ஆனால், இன்று எழுப்பப்படும் கட்டடங்கள், இவற்றின் நீர் வரவுப் பாதைகளையும், வெள்ளத்துக்குத் திறந்துவிடப்பட்டு மிகுதி நீரை ஆபத்தின்றி வெளியே கொண்டுசெல்லும் அமைப்புகளையும் ஆக்கிரமித்து அடைத்துவிட்டன.(4)
பின்னர், நவம்பர் 2015-ல் சென்னையில் மழை பெய்தது.
குறிப்புகள்
|