முகப்பு
அறிதலின் எல்லையில்

வால்நட்சத்திரங்களும் வேற்றுகிரகவாசிகளும்

நம் சூரியனைவிட 50 சதவீதம் பெரியதாக உள்ள ஒரு விண்மீனில் 20 சதவீத ஒளிக்குறைவு ஏற்பட, அந்த வால்நட்சத்திரக் கூட்டம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும். ஒரு கணக்கு போட்டுப் பார்த்ததில், அதற்கு 6,48,000 வால்நட்சத்திரங்கள் தேவை எனத் தெரியவந்தது. அதாவது, சுமார் 200 கிலோமீட்டர் அகலம் கொண்டவையாக அந்த ஒவ்வொரு வால்நட்சத்திரமும் இருக்க வேண்டும்.

பகிர்:

வேற்றுலகவாசிகள்… சொன்னதுமே நினைவுக்கு வருவது பறக்கும் தட்டுக்கள்தான். ஹாலிவுட் அறிவியல் புதினப் படங்கள். 1950-கள் முதல் 70-கள் வரை, மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் வேற்றுலகவாசிகள், பறக்கும் தட்டுகள் போன்றவை குறித்த பெரிய பரபரப்பு இருந்தது. ரோஸ்வெல் என்கிற இடத்தில் விழுந்த பறக்கும் தட்டை அமெரிக்க ராணுவம் கைப்பற்றியது என்றும், அங்கிருந்து வேற்றுலகவாசிகளின் உடல்கள் அமெரிக்க ராணுவத்தின் ரகசிய மையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டன. பறக்கும் தட்டுகள் பல இடங்களில் காணப்பட்டதாகவும் செய்திகள் குவிந்தன. ஒருகட்டத்தில், அமெரிக்க விமானப்படையே ஒரு உயர்மட்ட புலனாய்வுக் குழுவை நியமித்தது. கோண்டோன் கமிட்டி, 1966 முதல் 1968 வரை, பறக்கும் தட்டு குறித்த அனைத்து தரவுகளையும் ஆராய்ச்சி செய்து, பொதுவாக அவை இயற்கையான விஷயங்கள், ஆனால் தவறாகக் காணப்பட்டு விநோதமாகப் புரிந்துகொள்ளப்பட்டவை என்பதாக ஒரு முடிவுக்கு வந்தது.

ஆனால், இந்த கமிட்டியில் இருந்த ஆலன் ஹைனெக் எனும் வானவியலாளர், இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த பூமிக் கிரகத்துக்கு வேற்றுலகவாசிகள் வருகிறார்கள் என்பதை அப்படி ஒன்றும் புறந்தள்ளிவிட முடியாது எனக் கருதிய அவர், வேற்றுலகவாசிகள் - ‘இனம் தெரியாத பறக்கும் பொருட்கள்’ (Unidentified Flying Objects - UFO) ஆகியவற்றுடன் மனிதர்களுக்கு ஏற்படும் நெருக்கமான எதிர்கொள்ளல்களை (close encounters) மூன்றுவிதமாகப் பிரித்தார் -

  1. முதல்வித எதிர்கொள்ளுதல்: UFO-களை பார்த்தல்.

  2. இரண்டாம்வித எதிர்கொள்ளுதல்: UFO-களை பார்த்ததுடன் இல்லாமல், அதனால் ஏதாவது பௌதீக தாக்கம் ஏற்படுவது.

  3. மூன்றாம்வித எதிர்கொள்ளுதல்: UFO-களில் இருக்கும் வேற்றுலகவாசிகளுடன் தொடர்பு.

இதில் மூன்றாம்விதமான எதிர்கொள்ளுதல், ஒரு விசித்திர நிகழ்வாக அமெரிக்காவில் மாறியது. ஹிப்னாட்டிச மயக்கத்தில், பலர் தாம் UFO-களில் எடுத்துச் செல்லப்பட்டு, பலவித பரிசோதனைகளுக்கு ஆட்படுத்தப்பட்டதாகவும், பாலியல் சோதனைகள் அல்லது அனுபவங்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறினர். 1977-ல் இதே பெயரில், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் ஒரு திரைப்படத்தை எடுத்தார் – ‘Close encounters of the third kind’ என்று.

ஸ்பீல்பெர்க் படத்தில் வேற்றுக்கிரக விண்கலம் இறங்கும் காட்சி

இந்தத் திரைப்படத்துக்கு, முன்னணி அமெரிக்க அறிவியல் புனைகதையாளர் இருவரின் எதிர்வினைகள், எதிரெதிர் சாய்வுகளில் இருந்தன. ஐசக் அஸிமாவ், இப்படம் மிக மோசமான அறிவியல் பார்வை கொண்டதாகவும், மட்டரகமானது என்றும் கடுமையாகத் தாக்கியிருந்தார். ரே பேரட்பரி, இந்தத் திரைப்படம் அருமையானது என்றும், பிரபஞ்ச வெளியில் வேறுபாடுகள் கடந்த மானுடத்தை முன்னிறுத்துவதாகவும் கூறினார்.

பறக்கும் தட்டுகளும் வேற்றுலகவாசிகளும், புற யதார்த்தத்தை தாண்டிய ஒரு உளவியல் நிகழ்வாகவும் மாறியது ஒரு சுவாரசிய நிகழ்வு. வேற்றுலகவாசிகளுடனான தொடர்புகள் குறித்த நினைவு மீட்புகள் ஏற்படுவதற்கு முன்னரே, UFO-களை உளவியல் அடிப்படையில் கார்ல் யுங் அணுகினார். அவற்றின் பௌதீக யதார்த்தம் குறித்தோ அல்லது அவை வேற்றுலகில் இருந்து வருகின்றனவா என்பது குறித்தோ அவர் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

ஜாக்யு வாலே (Jacques Vallee)

மற்றொரு சுவாரசியமான கருதுகோளை, ஒரு பிரெஞ்சு அறிஞர் முன்வைக்கிறார். ஜாக்யு வாலே (Jacques Vallee) வைக்கும் யூகமானது, பறக்கும் தட்டுகளை நாட்டார் கதைகளுடன் இணைக்கும் ஒரு விசித்திரமான கோட்பாடு. ஸ்பீல்பெர்கின் ‘க்ளோஸ் என்கவுன்டர்ஸ்’ படத்தில் ஒரு பிரெஞ்சு விஞ்ஞானி வருவார். வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்புகொள்ளும் முறையை ஆராய்ச்சி செய்பவர். அவர் இந்த வாலேயின் ஆளுமை அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாத்திரம்தான். இவரது கோட்பாட்டை ஒரு தனி கட்டுரையாகவே காணலாம்.

வானவியலாளர் கார்ல் சாகன், வேற்றுலகில் அறிவார்ந்த பண்பாடுகள் இருப்பதை அறிவியல்பூர்வமாக அணுகுவதில் ஆர்வம் உடையவர். அதற்கான தொழில்நுட்ப முயற்சிகளை உருவாக்குவதில் தீவிரமாக இயங்கியவர். ரேடியோ மின்காந்த தொலைநோக்கிகள் மூலம் வேற்றுலக அறிவார்ந்த பண்பாடுகளைத் தேடும் முயற்சி, இன்று சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து நடப்பதற்கான முக்கியக் காரணங்களில் சாகனின் முயற்சியும் ஒன்று.

நம்மைச் சுற்றி இருக்கும் இந்த நட்சத்திரப் பெருவெளியில் எத்தனை வேற்றுலகப் பண்பாடுகள் இருக்கலாம்? இதனைக் கணிக்க ஒரு சமன்பாடு பயன்படுத்தப்படுகிறது. இதனை உருவாக்கியவர் பிராங்க் டிரேக் என்கிற வானவியலாளர்.

இந்தச் ‘சமன்பாடு’, நிகழ்தகவுகளை (probabilities) இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு சமன்பாடு. நம் சூரிய குடும்பம் இருக்கும் கேலக்ஸி ஆகாயகங்கை (Milkyway). இதில் எத்தனை அறிவார்ந்த தொழில்நுட்ப முன்னேற்றம் கொண்ட பண்பாடுகள் வேற்றுகிரகங்களில் இருக்க முடியும்?

இங்கு N என்பது இந்த காலக்ஸியில் இருக்கும் அறிவார்ந்த பண்பாடுகளின் எண்ணிக்கை. R என்பது விண்மீன்கள் உருவாகும் வேகம். அதில் f (p-planetary systems) என்பது, அவ்வாறு உருவான விண்மீன்களில் அவற்றைச் சுற்றி சுழலும் கிரகங்கள் உள்ள பின்னம். இதில் n (e-earth like) என்பது, இவற்றில் பூமி போன்ற கிரகங்கள் உள்ளவை எத்தனை என்பது. இப்படிப்பட்ட கிரகங்களில், எத்தனை கிரகங்களில் உயிர் தோன்றியிருக்கும் என்கிற சாத்திய பின்னமே f (l-life). அப்படி உயிர்கள் தோன்றிய கிரகங்களில், அறிவுள்ள உயிரினங்கள் பரிணமித்திருக்கும் சாத்திய பின்னம் கொண்டவை எத்தனை என்பது f (i-intelligence). அப்படி அறிவுள்ள உயிரினங்கள் பரிணமித்த கிரகங்களில், தொழில்நுட்ப பண்பாடு கொண்ட சமுதாயங்களாக உருவாகும் சாத்திய பின்னம் கொண்டவை எத்தனை என்பது f (c-culture). இனி அப்படிப்பட்ட தொழில்நுட்ப சாத்தியங்கள் கொண்ட உயிரினங்கள் வரும்போது, அவை அழிவைத் தரும் அணு ஆயுதங்களையும், உலகையே மாசுபடுத்தும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கக்கூடுமே. அப்போது தொழில்நுட்பம் மட்டும் இருந்தால் போதுமா; அவை தம்மைத் தாமே அழிக்காமல் நீடித்து வாழும் தன்மையும் கொண்டிருக்க வேண்டுமே. அதைத்தான் L குறிக்கிறது. கார்ல் சாகன் இதை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். ஒரு வேற்றுலகப் பண்பாட்டுடன் தொடர்புகொள்ள, அந்தக் காலம் வரை நீடித்து உயிர்வாழ நம்மை நாமே அணு ஆயுதங்களால் அழித்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

இந்தச் சமன்பாட்டை வைத்து, வேற்றுலக அறிவார்ந்த பண்பாடுகள் நம் அண்டவெளிப் பக்கத்து வீடுகளில் எத்தனை இருக்கின்றன என துல்லியமாகவெல்லாம் கணிக்க முடியாதுதான். ஆனாலும், சில ஊகங்களைச் செய்யமுடியும். பொதுவாக, நம்மைப்போல் தொழில்நுட்ப வளர்ச்சிகொண்ட 3500 வேற்றுகிரகப் பண்பாடுகள் கொண்டவை இருக்கலாம் என சொல்கிறார்கள். 2010-ல், க்ளாடியோ மக்கோன் என்கிற இத்தாலிய வானவியலாளர், புள்ளியல் அடிப்படையில் இந்தச் சமன்பாட்டை எடுத்துக்கொண்டு, எத்தனை வேற்றுலகப் பண்பாடுகள் இருக்கலாம் எனக் கணித்தார். அவர், 4590 பண்பாடுகள் இருக்கலாம் என்கிறார்.

இந்தப் பண்பாடுகள் எல்லாம், நம்மில் இருந்து பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும். (ஒரு ஒளி ஆண்டு என்பது ஒரு ஆண்டில் ஒளி பயணிக்கும் தூரம்). இந்தப் பிரபஞ்சத்தில், ஒளியின் வேகமே உச்சகட்ட வேகம். மின்காந்த அலைகளில் ஒரு குறிப்பிட்ட அலைவரிசைப் பிரிவே நாம் காணும் ஒளி. எனவே, எந்த மின்காந்த அலைவரிசையில் நம்மை ஒரு சமிக்ஞை வந்தடைந்தாலும், அது வந்த இடத்தில் ஒளி ஆண்டுகளின் தொலைவுக்கு அது பழமையாக இருக்கும். உதாரணமாக, நமக்கு ஒரு வேற்றுகிரக சமிக்ஞை –சர்வநிச்சயமாக வேற்றுகிரக சமிக்ஞை என தெரிந்துவிட்ட ஒன்று - கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். அது ஆண்ட்ரோமிடா கேலக்ஸி என்கிற விண்மீன் பெருங்கூட்டத்திலிருந்து வந்தது என வைத்துக்கொள்வோம். எனில், அது பூமியை வந்தடைய 25 லட்சம் ஆண்டுகள் பயணித்திருக்க வேண்டும். அதாவது, அந்த சமிக்ஞையை ரேடியோ அலைவரிசையாக ஒரு பண்பாடு அனுப்பியபோது, மானுடத்துக்கு முந்தைய தொல்-மானுட பேரினக்குரங்கு மூதாதையர்களான ஹோமோஹேபிலிஸ் (Homohabilis) இங்கே பரிணமித்திருந்தார்கள்.

சரி, நம்மைச் சுற்றியிருக்கும் அண்டவெளியிலிருந்து நம்மை வந்தடையும் எண்ணற்ற மின்காந்த அலை சமிக்ஞைகள், இயற்கையான பல வானியல் நிகழ்வுகளில் இருந்தும், விண்மீன்கள், நியூட்ரான் விண்மீன்கள், ஏன் அண்டவெளி தூசிப்படலங்களில் இருக்கும் மூலக்கூறு கூட்டங்கள் எனப் பலவற்றில் இருந்தும் வரும். பல்சார்கள் போன்ற இயற்கையான விண்மீன்களிலிருந்து வரும் மின்காந்த அலைகள் சீரிய துடிப்பு கொண்டவை. ஏதோ ஒரு செயற்கையான கருவியிலிருந்து வந்தவை போலவே இருக்கும். அப்படி இருக்க எப்படி கண்டுபிடிப்பது, நமக்கு வந்த அலை சமிக்ஞை செயற்கையானது – ஒரு வேற்றுலகப் பண்பாட்டால் அனுப்பப்பட்டது என்று?

1977, ஆகஸ்ட் 15-ல், இந்தியா தனது 30-வது சுதந்தர தினத்தைக் கொண்டாடியது. அன்றுதான், உலகின் மறுபக்கம் மற்றொரு வெகு சுவாரசியமான நிகழ்வு நிகழ்ந்தது. வானவியலாளர் ஜெரி எக்மன் (Jerry Ehman), ஒரு தாளில் ஒரு சுழி சுழித்து ‘வாவ்’ (wow) என்று எழுதினார். இன்று அது உலகப் புகழ்பெற்ற ஒரு மர்மமாகிவிட்டது. அதென்ன 'வாவ்’? ஒரு மின்காந்த சமிக்ஞை – ரேடியோ அலைவரிசையில் 72 விநாடிகளுக்கு மட்டும் கிடைத்த ஒரு சமிக்ஞை. ஓஹையோ பல்கலைக் கழகத்தின் ரேடியோ விண்-தொலைநோக்கியால் பெறப்பட்ட சமிக்ஞை அது. அது வந்த அலைவரிசை 1420 மெகா ஹெர்ட்ஸ். இதன் இணையான அலை நீளம் 21 செமீ. இது வானவியலாளர்களால் ஹைட்ரஜன் கோடு என அழைக்கப்படுகிறது. நாம் அறிந்த பிரபஞ்சத்தில், அதிக அளவில் கிடைக்கும் தனிமம் ஹைட்ரஜன்.

ஒரு அறிவார்ந்த வேற்றுலகப் பண்பாடு ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்தி தொடர்புகொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்கும் பட்சத்தில், அது மாற்றுலகப் பண்பாடுகளைத் தேட, இயல்பாக இந்த அலைவரிசையைத்தான் பயன்படுத்தும் என வானவியலாளர்கள் கருதுகின்றனர். எனவே, அந்த அலைவரிசையில் தேட, இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அந்த அலைவரிசையில் எந்த ரேடியோ தொலைத்தொடர்பும் பூமியில் செய்யப்படுவதில்லை. அந்த அலைவரிசையில்தான் கிடைத்தது இந்த ‘வாவ்’ சிக்னல். எனவேதான், அது ‘வாவ்’ என அந்த வானவியலாளரை கிளர்ச்சி அடைய வைத்தது. அது வந்த பகுதிகளில் தேடல் தொடர்ந்தது. இன்றுவரை அப்படி ஒன்று மீண்டும் கிட்டவில்லை.

இந்நிலையில், அன்டானியோ பாரிஸ் (Antonio Paris) எனும் வானவியலாளர், இது ஒருவேளை அந்தப் பகுதியில் செல்லும் ஒரு வால்நட்சட்திரத்தால் ஏற்பட்ட சமிக்ஞையாக இருக்கலாம் எனக் கருதுகிறார். எப்போதுமே, அறிவியல் எழுத்தாளர்களுக்கு வால்நட்சத்திரங்கள் சுவாரசியமான சமாசாரம்தான். டைனோசர்கள் அழிவு தொடங்கி ஸ்வஸ்திகா வரை, விண்கற்கள் மீதும் வால்நட்சத்திரங்கள் மீதும் காரணங்கள் சுமத்திப் பலர் எழுதியுள்ளனர். உதாரணமாக, கார்ல் சாகனும் ஆன் ட்ரூயனும் எழுதிய ‘காமெட்’ நூலைப் படித்துப் பார்க்கலாம். ஜெயந்த் விஷ்ணு நர்லிக்கர், மறைந்த ப்ரெட் கோயல் ஆகியோர், வால்நட்சத்திர தூசிகளில் இருந்து பூமியின் வளிமண்டல மேல்தளங்களை நுண்ணுயிரிகள் அடைவதற்கான சாத்தியங்களைப் பேசியிருக்கிறார்கள்.

இப்போது இந்த வரிசையில், ‘வாவ்’ சமிக்ஞையும் சேர்ந்துவிட்டது. 1977-ல் ‘வாவ்’ சமிக்ஞை கிடைத்த அதே அண்டவெளிப் பகுதியில் சஞ்சரிக்கக்கூடிய இரு வால்நட்சத்திரங்களை, வானவியலாளர்கள் பின்னாட்களில் கண்டறிந்தனர். இந்த வால்நட்சத்திரங்களின் வால்களில் இருந்து கணிசமான அளவில் ஹைட்ரஜன் வெளியாகும். இதுவே இந்த ‘வாவ்’ சமிக்ஞையின் மர்மமாக இருக்கலாம் என அன்டானியோ கருதுகிறார். இது ஒரு கருதுகோள்தான் (Hypothesis). மீண்டும் 2017-18 காலகட்டத்தில், 'வாவ்’ சமிக்ஞை கிடைத்த அதே பகுதியில் மீண்டும் இந்த வால்நட்சத்திரங்கள் சஞ்சரிக்கும். அப்போது மீண்டும் அதேபோல ஒரு சமிக்ஞை 1420 MHz அலைவரிசையில் கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால், ஒரு மர்மம் முடிச்சு அவிழும் சாத்தியம் காட்டும்போது, மற்றொரு மர்மம் முளைத்தெழுகிறது.

நாசாவின் கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி, 2009 முதல் 2013 வரை விண்மீன்களை அவதானித்து, அது குறித்த தரவுகளைப் பூமிக்கு அனுப்பிவருகிறது. பூமியின் வானவியலாளர்களின் விண்வெளிக் கண்கள் அவை. இந்தத் தரவுகள் கணிசமானவை. இவற்றை ஆராயவும், அறிவியலை ஜனநாயகப்படுத்தவும், ‘கிரகங்களைத் தேடுவோர்’ (Planet Hunters) என்கிற அமைப்பு, இந்தத் தரவுகளைத் தம் இணையதளம் மூலமாக, அறிவியல் ஆர்வமும் தேடலும் அறிவும் கொண்ட ‘குடிமக்கள்-அறிவியலாளர்கள்’ (citizen scientists) காணத் தருகிறது. அப்படி, நிறுவனங்களுக்கு அப்பால் ஆர்வம் கொண்ட குடிமக்கள்-அறிவியலாளர்கள் குழுவால் ஒரு விஷயம் கண்டறியப்பட்டது.

ஒரு விண்மீனுக்கு அதைச் சுற்றும் கோள்கள் உண்டா இல்லையா என அறிவது எப்படி? அந்த விண்மீனை நாம் பார்க்கும்போது, அதன் ஒளியில் ஒரு சிறு குறைவு ஏற்படும். அந்த விண்மீனின் கோள் அதைக் கடக்கும்போது இது நடக்கும். இந்த ஒளிக் குறைவை (light dip) வைத்து, அந்தக் கோள் குறித்து சில விஷயங்களைக் கணித்துவிட முடியும். அப்படி ஒளிக்குறைவு ஏற்படும் ஒரு விண்மீன் KIC 8462852 என்பது. நம் சூரியனைவிட 50 சதவீதம் பெரியது இந்த விண்மீன். ஆனால், விண்மீனை ஒரு கோள் சுற்றும்போது ஏற்படும் ஒளிக்குறைவுபோல இங்கே ஏற்படவில்லை. விண்மீனின் வெளிச்சத்தில் 20 சதவீதத்தைக் குறைப்பதுபோல ஏதோ ஒன்று அதைச் சுற்றுகிறது. அதுவும் ஒரு ஒழுங்கற்ற வடிவத்தில்.

இந்த விண்மீனைக் கண்டுபிடித்தவர் தபீதா போயாஜியான் (Tabetha Boyajian). அவர் ஒரு ஊகத்தை முன்வைத்தார். இந்த விண்மீனை ஒரு வால்நட்சத்திரக் கூட்டம் கடந்துபோய்க்கொண்டிருந்திருக்கலாம். அப்போது அவை உடைந்துபோய், அந்த எச்சசொச்சங்களும் வால்நட்சத்திரத் தூசிகளும், இப்போது இந்த விண்மீனை சுற்றிக்கொண்டிருந்திருக்கலாம். அவற்றால் இந்த ஒளிக்குறைவு ஏற்படலாம். ஜேசன் ரைட் (Jason Wright), பென்ஸில்வேனியா மாகாண பல்கலையைச் சார்ந்த வானவியலாளர். இவர் கொஞ்சம் அதீதமான ஒரு ஊகத்தை முன்வைக்கிறார். இவை வேற்றுலகவாசிகளால் உருவாக்கப்பட்ட பெரும் செயற்கை அமைப்புகளாக இருக்கலாமே! ஆனால், உடைந்து சிதறிய வால்நட்சத்திரக் கூட்டத்தின் எச்சசொச்சங்களே இயல்பான இயற்கையான விளக்கமாக அமைந்தது.

அல்லது, அப்படித்தான் நினைத்துக்கொண்டிருந்தோம். லூஸியானா மாகாணப் பல்கலையின் வானவியலாளர் ப்ராட்லி ஸ்காயிஃபெர் (Bradley Schaefer) ஒரு அட்டகாசமான வேலையைச் செய்தார். கணினி தொழில்நுட்பமெல்லாம் வருவதற்கு முன்னால் எடுக்கப்பட்ட வானவியல் நோக்கு புகைப்படங்களை ஆவணப்படுத்தியிருந்தார்கள். அந்தப் புகைப்பட பிளேட்களை எடுத்தார். இந்த விண்மீன் இருக்கும் பகுதிகள் அங்கே எப்படி இருக்கின்றன என்பதை ஆராய்ந்து பார்த்தார்.

ஏற்கெனவே, தபீதா குழுவினர் இந்தப் பிளேட்களை ஸ்கேன் செய்து டிஜிடலைஸ் செய்து ஆராய்ந்துவிட்டனர். ஒன்றும் இல்லை என்றும் சொல்லிவிட்டார்கள். ஆனால் ஸ்காயிஃபெர், பழைய பாட்டா முறையில் ஸ்கேனரால் பார்க்காமல், கண்களால் பார்த்தார். 1890 முதல் 1989 வரை உள்ள புகைப்பட பிளேட்கள். என்ன அதிசயம்! அவற்றில், இந்த விண்மீனின் ஒளிக்குறைவு தொடர்ந்து நிகழ்ந்திருக்கிறது. 20 சதவீதக் குறைவு.

படத்தில், KIC 8462852 விண்மீனின் ஒளிக்குறைவுதன்மை, கிராஃபில் அளக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது. 800 நாட்களிலும் 1500 நாட்களிலும் ஒளிக்குறைவு காட்டப்பட்டுள்ளது.

சரி, நம் சூரியனைவிட 50 சதவீதம் பெரியதாக உள்ள ஒரு விண்மீனில் 20 சதவீத ஒளிக்குறைவு ஏற்பட, அந்த வால்நட்சத்திரக் கூட்டம் எந்த அளவுக்கு இருக்க வேண்டும். ஒரு கணக்கு போட்டுப் பார்த்ததில், அதற்கு 6,48,000 வால்நட்சத்திரங்கள் தேவை எனத் தெரியவந்தது. அதாவது, சுமார் 200 கிலோமீட்டர் அகலம் கொண்டவையாக அந்த ஒவ்வொரு வால்நட்சத்திரமும் இருக்க வேண்டும்.

சர்வநிச்சயமாக, சாத்தியமே இல்லாத விஷயம்.

ஸ்காயிஃபெர், வால்நட்சத்திர ஊகத்தை நிச்சயமாக நிராகரித்துவிட்டாலும், அந்த விண்மீனை வேற்றுலகவாசிகளின் விந்தை அமைப்புகள் சுற்றுகின்றன என்பதை உடனடியாக ஏற்கவில்லை. ஒரு நூற்றாண்டு அவதானிக்கப்பட்ட விண்மீன் ஒளிக்குறைவுக்கும், கெப்ளர் விண்வெளி விண்நோக்கி காட்டும் ஒளிக்குறைவுக்கும் ஒரே காரணம்தான் இருக்க வேண்டும். அது, பெரும்பாலும் வேற்றுலகவாசிகளின் பெரும் அமைப்புகளாக இருக்க வாய்ப்பு இல்லை என்கிறார் அவர்.

வேற்றுலகவாசிகளின் விநோத அமைப்புகள்? ஊக ஓவியம் - நன்றி, நியூ சயின்டிஸ்ட்

ஆக, வேற்றுலகவாசிகள் குறித்த கேள்விகள் இன்னும் உயிர்துடிப்புடன் இருக்கின்றன.

இந்தத் தேடலை SETI (Search for Extra Terrestrial Intelligence) என்கிறோம். நீங்களும் நானும்கூட இந்தத் தேடலில் பங்குகொள்ளலாம்.

பல சமயங்களில், நம் கணினியின் முழு ஆற்றலையும் நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால், விண்வெளி முழுக்க இருந்து வரும் மின்காந்த அலைகளில், செயற்கையான சமிக்ஞைகள் இருக்கிறதா என்பதைத் தேட, பெரும் கணினிச் சக்தி தேவைப்படுகிறது. ஆனால், அதற்கென நிதியை ஒதுக்க அரசுகள் தயங்குகின்றன. அடுத்தவன் தலையில் அணுகுண்டு போட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கினாலும், தலையில் ஏரியலுடன் குட்டை மனிதர்களை வேற்றுகிரகங்களில் கண்டுபிடிக்க எதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்கிற கேள்வி, மானுட அரசியலாளர்களின் மகத்தான கேள்வி.

எனவே, ஒரு மென்பொருளை உருவாக்கினார்கள் SETI-காரர்கள். இதை உங்கள் கணினியில் நீங்கள் நிறுவினால், ஸ்க்ரீன்சேவர்போல அது செயல்படும். 'சும்மா இருக்கும்' கணினியின் கணக்காற்றலை, நீங்கள் வேலை செய்யும்போதே, விண்வெளியிலிருந்து வந்த எண்ணற்ற அலை சமிக்ஞைகளில், 'நான் இங்கு நலமே, நீ அங்கு நலமா' மாதிரி ஒரு மின்காந்த குசலவிசாரிப்பை கண்டுபிடிக்கப் பயன்படுத்தும். இதை இந்த இணைய அட்ரஸ் மூலமாக உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம். (http://setiathome.ssl.berkeley.edu/)

யார் கண்டது, ஆண்ட்ரோமிடா கேலக்ஸியில் இருந்து அனுப்பப்பட்ட அந்த வேற்றுலகவாசியின் செய்தியை உலகுக்கு அறிவிக்கப்போகும் கணினி உங்களுடையதாகக்கூட இருக்கலாம்.

மேலதிக விவரங்களுக்கு -

Magazines

  • Famous Wow! signal might have been from comets, not aliensNew Scientist, 11-Jan-2016

  • Comets can’t explain weird ‘alien megastructure’ star after allNew Scientist, 15-Jan-2016 

Journal references

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.