அத்தியாயம் 29
நீதிபதியின் அறையிலிருந்து அவர்கள் வெளிவந்தபோது கோர்ட்டில் இரண்டு போலீஸ்காரர்களின்
நீதிபதியின் அறையிலிருந்து அவர்கள் வெளிவந்தபோது கோர்ட்டில் இரண்டு போலீஸ்காரர்களின் காவலில் முத்துராசா தவிர வேறு யாருமில்லை. கன்னிங்ஹாம் விருட்டென வாயில் நோக்கி விரைந்தார். அவரைத் தொடர்ந்து முகத்தைப் பொத்தி, அழுகையை அடக்கியவாறே ஆனியின் தாய் தடுமாறி நடந்தாள்.
‘அடுத்த திங்கள் காலை 10 மணிக்கு என் அறைக்கு இவனைக் கொண்டுவர்வேண்டும். இன் கேமெரா’ என்றபடி ஜட்ஜ் நடந்தார். அவர் பின்னால் நடந்து வந்த ஆனி, இழுத்துச் செல்லப்பட்ட முத்துராசா ஒரு பெஞ்ச் அருகே திரும்பியதில், அவனை நோக்கி முறுவலித்தாள்.
நடேசபிள்ளை, பாளையங்கோட்டை போலீஸ் லாக்கப்பில் முத்துராசாவைக் கண்டு திரும்பிவந்துகொண்டிருந்த வேளையில், முத்தாயி அவரைக் கண்டு அரற்றியபடியே ஓடிவந்தாள்.
‘எங்கண்ணனுக்கு என்னாச்சிய்யா?’ என்றவள் தொப்பென தரையில் அமர்ந்து , உரத்த குரலில் தொடங்கினாள்
காவலுக்கு நின்னவரை கட்டிப் போட்டானே?
சிங்கமா நின்னவர சிறையில போட்டானே?…’
‘ஏட்டி, நிறுத்து’ அதட்டினார் பிள்ளை. ‘ஒப்பாரி வக்காத. அவன் நல்லாத்தான் இருக்கான். சீக்கிரம் வந்துறுவான். வெரசலா வீட்டுக்குப் போ’
‘எப்படிப் போவன்? படுக்கையிலே கிடக்காளே,அவம் பொஞ்சாதிக்கு, பிள்ளக்கு என்ன சொல்லுவேன்? வயிறு கலங்குதே சாமி…
குளத்துலே மீனெல்லாம் செத்தே மொதக்கயிலே
களத்துலே நாத்தெல்லாம் கருகித்தான் போவயிலே
அளத்துலே உப்பெல்லாம் கரியாக் கிடக்கையிலே
எளவுக்குறி அறியாம சிறுக்கிநான் சிரிச்சேனே..
‘இந்தா’ என்றார் நடேசபிள்ளை குரல் உயர்த்தி ‘என்ன எளவு விழுந்து போச்சின்னு ஒப்பாரி வைக்கே? நாங்க பாத்துகிடுவம். வீட்டுக்குப்போ’
அவளுடன் வந்த பெண் ‘யாத்தா, வா. அவுக சொல்லிட்டாள்ளா?’ என்றபடி, முத்தாயியைக் கைத்தாங்கலாகப் பிடித்து நகர, நடேசபிள்ளை அவளை அழைத்து ‘ ஏவுட்டீ, அந்தா, அந்த முக்குல, கிழங்கு அவிச்சி வச்சிருப்பான். இவளுக்கு வாங்கிக்கொடுத்து, நீயும் தின்னுட்டு, ஊருக்கு நடையக் கட்டு, வெளங்கா?’ என்றபடி சட்டைப்பையில் துழாவி, இரு நாணயங்களைக் கொடுத்தார்.
‘டே, உன்னை உள்ளாற வச்சிருக்கறது, எனக்கு பெரிய பிரச்சனை கேட்டியா? ஊரே வந்து நிக்கி. ஒந்தம்பி, பத்து ஆளோட அருவா எடுத்து நிக்கான். போலீஸ வெட்டிப்போட அஞ்சி நிமிசமாவாதுங்கான். கூட்டியாறேன். ஒண்ணும் ஏக்கூடமா செய்யாதேன்னு சொல்லி வையி, என்னா?’ இன்ஸ்பெக்டர் முத்துராசாவிடம் சொல்லிக்கொண்டிருக்கையில், தட்தடவென இருவது பேர் போலீஸ் ஸ்டேஷனில் நுழைந்தனர்.
‘டே, தம்பி, அமைதியா இரி. பிள்ளைய்யா பாத்துகிடுவாரு.’ முத்துராசா சொல்வது காதில் விழாத அளவிற்கு சத்தமிட்டு அவர்கள் முன்னே வர, இன்ஸ்பெக்டரின் கண்ணில் ஒரு பயம் தெரிந்தது. இது ஒரு சாதிக்காரன் இல்லை. முழுக்கிராமமே வந்து நிற்கிறது.
முத்துராசா அவர்களை அமைதிப்படுத்த சில நிமிடங்களானது. ஒரு மணி நேர காராசார விவாத்த்தின் பின் அவர்கள் கிளம்ப, ‘பொம்பளேள் யாரும் வரவேண்டா, கேட்டியா? இங்கிட்டு வந்து அழுவாச்சி வைக்க்க்கூடாது.’ நடேசபிள்ளை அவர்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லி அனுப்பினார்.
முத்துராசா, தனியாக அடைத்து வைக்கப்பட்டான். அவள் என்ன சொல்லியிருப்பாள்? களக்காடு காட்டில் நடந்தவற்றிற்குக் கண்கண்ட சாட்சி என்றால் அங்கு அவள் ஒருத்தி மட்டும்தான். மானசீகமாக குருவாக வரித்த மாடசாமிபிள்ளையோ, வ.உ.சியோ அல்லது சிவாவோ இல்லாத நிலையில் அவன் மனம் தளர்ந்த்து.
நடேசபிள்ளை நல்லவர்தான். ஆனால் இவர்கள் போல தலைவர் இல்லை. இவர் ஒரு ஊடகம் மட்டுமே என்பதை அவன் முன்பே உணர்ந்திருந்தான். அவரிடம் கேட்கலாமா? ஆனால் அவருக்கு அவள் அறையுள் என்ன சொன்னாள்? என்பது தெரியாது. அவர்கள் குடும்பம் மட்டுமே நீதிபதியின் அறையில் இருந்தனர். வழக்கை இழுத்து நீட்டவேண்டாம் என்பதற்காக, அவளது சாட்சியத்தை மட்டும் வைத்தே , தண்டனையைக் கொடுத்துவிடுவார்களோ? அவள் பாதிக்கப்பட்டவள், பெண் அதுவும் ஆங்கிலேயர்.
தன் பையனை ஒரு கணம் நினைத்தான். தம்பியும் முத்தாயியும்தான் அவனை இனி வளர்க்கவேண்டும். அவன் உயிருக்கு ஆபத்து வரலாம். சேதுபதியின் ஆட்கள் வெறுமே இருக்கப் போவதில்லை.
தம்பிக்கு இன்னும் திருமணமாகவில்லை. முத்தாயி, வெட்டி முறித்துக்கொண்டு வந்துவிட்டாள்… அண்ணனைப் பற்றி அவன் ஏதோ குடியில் தவறாகச் சொன்னால், அவள் கேட்பாளா?
திடீரென, காலடி ஓசை கேட்க விழித்தான். இரவோடிரவாக அவன் வேறு சிறைக்கு மாற்றப்பட்டான்.
தொடரும்...