அத்தியாயம் - 8
‘பெரியவங்க மன்னிக்கணும்’ என்றான் முத்துராசா கை கூப்பியபடி. சிதம்பரம்பிள்ளை திரும்பினார்.
‘பெரியவங்க மன்னிக்கணும்’ என்றான் முத்துராசா கை கூப்பியபடி. சிதம்பரம் பிள்ளை திரும்பினார்.
‘எனக்கு இந்த பெரிய வார்த்தையெல்லாம் புரியாதுங்க. ஆனா, இந்த ஊர்லயே மனுசனுக்கு மனுசன் உபகாரம் பண்ணாம கொன்னுபோடறான், பொம்பளைங்களை, பிள்ளைங்கள அனாதியாக்குறான் பாருங்க. அதை தடுக்கணும்னு தோணுதுய்யா. வெட்டிப் போடணும்னு வேகம் வருது சாமி” முத்துராசா உணர்ச்சிப் பிழம்பானான். கண்களை மூடினான்
குடை சாய்ந்த வண்டி, பெண்ணின் அலறல் மெல்ல மெல்ல அடங்கிய மூச்சின் ஒலி...
‘ஏ, ஒம்பேரென்னா?’
‘அய்யா?’ சட்டென நனவுலகில் மீண்டான் முத்துராசா.
‘ஒம்பேரென்னாங்கேன்’ சிதம்பரம் பிள்ளையின் குரலில் அதிகாரத்துடன் ஒரு கனிவு இருந்ததில் உருகினான் .
‘நல்லா சொன்னடே. வெள்ளைக்காரன மட்டும் எதிர்த்துட்டாப் போறாது. நம்ம மக்கள்ல, அடிமையா இருக்கறவங்களுக்கு வாழ்வு கிடைக்கணும். அவங்க முன்னேறணும். அதுதான் நாட்டுக்கு நல்லது. நீ என்ன செய்யணும்னு நினைக்கியோ அதயே செய்யி.என்னா?’
சிவாவின் பக்கம் திரும்பினார் சிதம்பரம் ‘இதான், அடிமட்டத்துல இருக்காங்களே அவங்களுக்கு இடமளிப்பு வேணுங்கேன். நாலு பேரை படிக்க வச்சமா, அதுல ஒருத்தனாச்சும் கீழ இருக்கானே அவங்க சாதிலேர்ந்து இருக்கணும்ங்கேன்’
‘இவரு பிள்ளைல்லா? இப்படிச் சொல்லுதாரே? சாதியில ஏத்துக்குவாங்களா?’வரும்போது மாடசாமியிடம் ப்ரமிப்பு அடங்காமல் முத்துராசா கேட்டான்.
‘அதென்னா அப்படிச் சொல்லுதே? பிள்ளைவாளோட மூத்த சம்சாரம் இருந்தப்போ, அவங்க வீட்டுல வேலை செஞ்ச ஒரு கிழவனுக்கு கண்ணு போயிட்டுன்னு, அவங்களே சோறு பிசைஞ்சு ஊட்டி விடுவாங்களாம்.. இன்னிக்கு பத்து வருசம் முன்னாடி. நினைச்சுப் பாக்க முடியுமாடே?’
திகைத்துப் போனான். தீண்டுவதே அருவருப்பாக நினைக்கும் காலத்தில், வாயில் ஊட்டி விடுவதா? அன்னபூரணி, காந்திமதியல்லவா அவர்?
‘ஊர்ல எத்தனை பேரு பிள்ளைவாளை அவதூறாப் பேசினாங்கன்னு எனக்குத் தெரியும். அதுக்கு அவரு இது மனுசனுக்கு மனுசன் செய்யற உதவி, யாருக்கும் நாங்க பதில் சொல்ல வேண்டியதில்லன்னுட்டாரு. அதுதான் பிள்ளைவாள்.
சரி அதவுடு. நாளைக் கழிச்சு ஒரு கூட்டம் இருக்கு. அதுக்கப்புறம் ஊருக்குப் போலாம், என்னா?’ என்றார் மாடசாமி. மவுனமாக சரி என்றான் முத்துராசா.
அன்று இரவு அவனால் தூங்கமுடியவில்லை. அரைகுறையாகக் கனவில் ரத்தக் குழம்பாக குங்குமம் சிந்திக் கிடக்க, அவன் நடுவே நிற்பதாகக் கண்டான். எதிரே சில வெள்ளைக்காரர்கள் மண்டியிட்டு நிற்க,. முன்னே காளியின் நீண்ட சிவந்த நாக்கு மட்டும் தொங்க, முத்து தடுமாறுகிறான். வெட்டுவதற்கு கத்தியை உருவும்போது ‘அதெல்லாம் வேண்டாங்கேன். ஊர்ல கஷ்டப்படறவனுக்கு உதவப் போங்கேன்” என்கிறது சிதம்பரம்பிள்ளையின் குரல்..
இருபத்தி ஐந்தாம் தேதி ,கூட்டத்தில் சிவாவின் முன்னே சிதம்பரம் பிள்ளை உரையாற்றினார். சிவாவின் தீப்பொறி பறக்கும் பேச்சின் முடிவில் அவசரமாக மாடசாமி, முத்துராசாவை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.
‘போலீஸ் உளவு பாக்க ஆட்களை அனுப்பியிருக்கு. திருநெவேலில இயக்கம் வளரணும். நீ அங்கிட்டு போய் தொடங்கப் பாரு.’ அவனை அனுப்பிவிட்டு, அவர் ஒரு குறுகிய தெரு ஒன்றில் மறைந்தார்.