முகப்பு
ஐந்து குண்டுகள்

அத்தியாயம் - 14

ஆனியின் கணவர் தென்னாப்பிரிக்காவில் ஒயின் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். திராட்சை  வளர்ப்பு அறிவும், சரியான பராமரிப்பும் இல்லாது நலிந்திருந்த அவர் வியாபாரத்தை ஆனியின் ஈடுபாடும்,

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:14 PM
பகிர்:

ஆனியின் கணவர் தென்னாப்பிரிக்காவில் ஒயின் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். திராட்சை  வளர்ப்பு அறிவும், சரியான பராமரிப்பும் இல்லாது நலிந்திருந்த அவர் வியாபாரத்தை ஆனியின் ஈடுபாடும், விடா முயற்சியும் மாற்றியது. அடுத்தடுத்து இருந்த தோட்டங்களையும் வாங்கி, சுமாரான அளவில் ஒயின் தயாரிப்பைத் தொடங்கிய ஆனி, முத்து, வைரம், கற்கள் கொண்ட ஆபரணங்களையும் வடிவமைக்கத் தொடங்கினார். வைரங்களை தரம் பிரிப்பது, வைரத்தின் விலை நிர்ணயிப்பதில் ஆலோசனை வழங்குதல் எனப்புகழ் பெற்ற ஆனி, ஜொஹென்னேஸ்பர்க்கிலும், ஐரோப்பாவில் ஆண்ட்வெர்ப், ஆம்ஸ்டெர்டாம் என வைரச் சந்தையிலும் பெருமளவில் புகழ்பெற்றார். வருமான வரியைத் தவிர்க்க, கணவரது வருமானத்திலிருந்து அவரது சொந்த வருமானத்தைத் தனியாகவே வைத்திருந்தார். அதுவே 1918ன் மதிப்பில் ஐநூறு ஆயிரம் பவுண்டுகள் இருந்தது.

ஆனி,  தீர்க்கமான அறிவினால், பணத்தை பல தொழில்களில் முதலீடாக, சந்தைப் பங்குகளாக, வைப்பு நிதியாக, தொழிலுக்கு வட்டிக்குப் பொருள்கொடுக்கும் முதலாக வைத்திருந்தார். ஒரு ட்ரஸ்ட்டை நியமித்து, அதன் வருவாயில் ஒரு பகுதியைக் கொடையாக கொடுக்க வைத்திருந்தார்.

லிண்டா, குளிர்பானத்தை மீண்டும் ஒரு முறை உறிஞ்சினாள். “ கணவர் முதலாம் உலகப்போரில் இறந்தபின் ஜொஹேன்னஸ்பர்க்கில் தன் மகளுடன் வாழ்ந்த ஆனி, இறுதிக்காலத்தில் இங்கிலாந்தில் தன் குடும்பத்தோடு வர ஆசைப்பட்டார். இது 1930கள். இங்கிலாந்தில் சில குடும்பங்களில் கட்டுப்பெட்டித்தனமாக  குடும்ப கவுரவம் பார்த்த காலம் அது., ஆனியின் ஆசையைவிட , ஆனியின் தந்தை எழுதிய கடிதம் கன்னிங்க்ஹாம் குடும்பத்திற்குப் பெரிதாகத் தெரிந்தது. அவள் குடும்பத்தில் சேர்க்கக்கூடாது என்பது தெளிவாக எழுதப்பட்டிருந்ததால், கோர்ட்டும் ஒன்றும் செய்ய முடியாத நிலை.

1932ல் நோய்வாய்ப்பட்டு ஆனி இறந்தபோது, அவரது உயில் , லாயர் ஒருவரால் இங்கிலாந்தில் கன்னிங்ஹாம் குடும்பத்தில் அறிவிக்கப்பட்டது. “எனது உடல் , குடும்ப புதைகாட்டில் அடக்கம் செய்யப்படவேண்டும் என்றும், அதற்கான விலையாக, தனது சொத்தில் மூன்றில் ஒரு பகுதி கன்னிங்க்ஹாம் குடும்ப வைப்பு நிதிக்கு வழங்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். கணவரின் பொருளீட்டு முழுதும் தன் மகளின் குடும்பத்திற்கு எழுதி வைத்திருப்பதாகவும், தனது சொந்த பொருளீட்டை மட்டுமே இந்த உயிலுக்கு உட்படுத்துவதாகவும் அதில்  இருந்தது.

'குடும்பம்  ஒத்துக்கொண்டதா?' முத்து கேட்க ஆனி மர்மமாகப் புன்னகைத்தாள்

'கன்னிங்ஹாம் குடும்பத்தின் விரிவான வட்டத்தில் எதிர்ப்பு இருந்தது. நான் கன்னிங்ஹாம் குடும்ப ட்ரஸ்ட்டில் ஒரு அங்கத்தினர். குடும்ப ட்ரஸ்ட்டின் விதிகளில், வெளியேறிய குடும்பத்தவர் ஒரு தொகையை அளித்து மீண்டும் வரலாம்” என்று இருந்தாலும், ஆனியின் ட்ரஸ்ட்டின் விதிகளில் ஒரு தடங்கல். “சொத்தின் மற்றொரு பகுதி இந்தியாவில் ஒரு முத்துராசா குடும்பத்தினர்க்கு வழங்கப்படவேண்டும். மூன்றாவது பகுதி கன்னிங்க்ஹாம் குடும்பத்தினரின் பெயரில் மருத்துவ ஆய்வுக்கு வழங்கப்படவேண்டும். இதில் ஒன்று தடைப்பட்டாலும், மற்றது நடைபெற முடியாது' என்று ஒரு வினோதமான விதியை ஆனி இட்டிருந்தார்.

'ம்...' என்ற முத்துக்குமார் சிந்தனையில் மூழ்கினான் 'ஒருவேளை எல்லா சொத்தும் ஒரு குடும்பத்தினருக்கே போய்விடும் என்ற பயமாக இருந்திருக்கலாம். ஆனால் , ஏன் முத்துராசா குடும்பம்?'

லிண்டா, 'இரு பங்குக்களுக்கு பாத்தியப்பட்ட ஆட்கள் காத்திருக்கையில் இரு வருடங்களுக்குள் மற்ற பங்கு சரியான ஆட்களுக்கு வழங்கப்பட வேண்டும் . இல்லாவிட்டால் அதுவும் கன்னிங்க்ஹாம் குடும்ப நிதிக்கு வழங்கப்படலாம் என்று ஒரு விதியும் ஆனியின் ட்ரஸ்ட்டில் இருக்கிறது. சமீபத்தில் மருத்துவ ஆய்வுக்கான கம்பெனியை ட்ரஸ்டிகள் அனுமதித்துவிட்டனர். முத்துராசா குடும்பம்? அதுதான் கிடைக்காதிருந்தது' என்றாள்.

'ஏதோ சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுபோல அவர் இந்தியாவிலிருந்து கிளம்பி வந்தபின் முத்துராசாவைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவேயில்லை. அவரை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதையும் ஒரு சங்கேத  மொழியில் எழுதி வைத்திருந்தார். முத்துராசாவை, உண்மையான காதலின் வெளிப்பாடாக, மடங்கிய விரலும்,  ஐந்து குண்டுகள் நிறைந்த ஒரு கைத்துப்பாக்கியும் காட்டும்.' இதுதான் அவர் எழுதிவைத்திருக்கும் விவரம். எந்த ஊர் என்பதும் காணப்படவில்லை.

ஆனியின் அப்பாவின் கடிதங்கள், அவர் அம்மாவின், அக்காவின் டைரிகள் கொண்டு, அவர் திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் வந்ததை அறிந்தேன். திருநெல்வேலியில் என்ன நடந்தது? தெரியவில்லை. அவரது பெயர், 1911ல் வந்த தினசரிகளில் ஒன்றில் ஆண்டர்ஸன் கொலை என்ற செய்தியில் அடிபட்டது. திடீரென்று அச்செய்தி நின்று போனது. ஆண்டர்ஸன் கொலை வழக்கு என்ன ஆயிற்று? ஆனி அதிலிருந்து சில நாட்களில் திடீரென்று தென் ஆப்பிரிக்காவிற்குத் தனியாக கப்பலேற்றப் பட்டிருக்கிறார். ஏன்? அவரது தந்தை , ஆனி, தன் குடும்பத்தோடு கொண்ட உறவை மீண்டும் தொடரவே கூடாது என்று ஒரு நிபந்தனை விதித்திருந்திருக்கிறார். ஏன்? ஒரு உயிலில் எழுதி வைக்கும் அளவுக்கு திடீரென்று மகள் மீது ஏன் அப்படி ஒரு வெறுப்பு?

புரியாத கேள்விகளும், கிடைக்காத பதில்களுமாக நான் திணறிக்கொண்டிருந்தபோது, நடேசபிள்ளை டைரி குறித்து அறிய நேர்ந்தது. அதில் ஆனி பற்றி செய்தி இருப்பதாக ஓண்ட்டோரியோவில் அவர் கொள்ளுப்பேரன் அறிவித்ததும் பரபரப்பானேன். அதுதான் இங்கே என்னை வர வைத்தது.'

லிண்டா நிறுத்தினாள். அவனது விழிகளை ஊடுருவிப் பார்த்தாள் 'வெளிப்படையாகச் சொல்றேன். எனக்கு அந்த பணம் வேண்டும். எனது புற்றுநோய் ஆராய்ச்சிக் கம்பெனிக்கு பணம் தேவைப்படுகிறது. கன்னிங்ஹாம் குடும்பத்தில் இருக்கும் மருத்துவ ஆராய்ச்சியும் என்னுடையது மட்டுமே. வி.ஸி கம்பெனிகளின் பணம் இன்னும் வந்து சேரவில்லை ஆனியின் சொத்தில் எனக்கு உரிமையிருக்கிறது அது வருவதற்குத் தடையாக இருக்கிற முத்துராசாவின் பங்கு கொடுக்கப்பட முடியாது என்பதை உறுதிப்படுத்திவிட்டு, அதையும் என் பங்கை எடுத்துக்கொள்ள தீர்மானித்தேன்.'

முத்து நிமிர்ந்து உட்கார்ந்தான்

'யெஸ். எனது இந்த பயணம் ஐந்து குண்டுகள் நிறைந்த அந்த துப்பாக்கியைக் கண்டுபிடிக்கவோ, உன் குடும்பத்தோடு உறவு கொண்டாடவோ அல்ல. அனைத்து தேடல்களையும் ஆவணப்படுத்திவிட்டு, முத்துராசா குடும்பமென்று ஒன்று இல்லை என்பதை ட்ரஸ்ட்டிகளுக்கு நிரூபணப்படுத்திவிடவே வந்தேன். இரண்டு வருடங்கள் இந்த மாதத்துடன் முடியப்போகிறது. இன்னும் மூன்று நாட்களில் மான்செஸ்டரில் ட்ரஸ்டிகளுக்கு முன் என் அறிக்கையை சமர்ப்பித்ததும், மூன்று மாதங்களில் என் பங்கு வந்துவிடும்'

'அப்படியானால்... உனது நோக்கம், ஆண்டர்ஸன் கொலை துப்பு துலக்குவது இல்லையா?'

'லுக்' என்றாள் சற்றே ஆயாசமாக 'ஆண்டர்ஸன் இறப்பு ஒரு சம்பவம். அதில் பாதிக்கப்பட்ட என் மூதாதையின் வாழ்வில் நடந்தது மற்றொரு துயர சம்பவம். இன்றைய யதார்த்தம் , அவரது சொத்து, அதில் எனது பங்கு. உனது பங்கு. அதனைக்குறித்துப் பேசுவது நலம்'

முத்துக்குமார் ஒன்றும் பேசாது எழுந்தான். தெருவின் கோடி வரை சிந்தனை வயப்பட்டு இருமுறை நடந்தான். பின் செல்லியாத்தாவின் வீட்டுக்கு பக்கத்துவீட்டில் போனில் தொடர்பு கொண்டான்.

செல்லியாத்தா காட்டில் சுள்ளி பொறுக்கப் போயிருந்தாள். அரைமணி நேரம் வேப்ப மர நிழலில் காத்திருந்து முத்து பொறுமையிழந்தான். அங்கே திரிந்துகொண்டிருந்த சிறுவன் ஒருவனை அழைத்தான் 'லே, செல்லியாத்தா கிழவியைப் பாத்தீன்னா, வெரசலா வீட்டுக்கு வரச்சொல்லு. ரெண்டுபேர் காத்துட்டிருக்காங்கன்னு சொல்லு, என்னா?'

அவன் தலையசைத்து ஓடினான். இரண்டு மணி நேரம் கழிந்தபின்னும் செல்லியாத்தா வரவில்லை. புழுக்கம் அதிகமாயிருக்க, மேலும் நிற்க முடியாமல், முத்துக்குமாரும் லிண்டாவும் திரும்பினர். அவ்ர்கள் தெருவின் எல்லையில் திரும்புவதை உடைமரக்காட்டில் ஒளிந்திருந்து ஒரு ஒல்லியான வயதான பெண் கவனித்துக்கொண்டிருந்தாள்.

தொடரும்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.