13. புதிய பூமி, புதிய வாழ்க்கை
லீ கேம்பிரிட்ஜ் வந்து சேர்ந்தான். அன்போடு வரவேற்ற நண்பன் செசில் அறையில் அடைக்கலமானான். சிங்கப்பூருக்கே, ஏதோ சொர்க்க பூமிக்கே
லீ
கேம்பிரிட்ஜ் வந்து சேர்ந்தான். அன்போடு வரவேற்ற நண்பன் செசில் அறையில் அடைக்கலமானான். சிங்கப்பூருக்கே, ஏதோ சொர்க்க பூமிக்கே வந்துவிட்டது போல் மனம் நிறைந்த சந்தோஷம். கேம்ப்ரிட்ஜ் அமைதியான சிறிய நகரம். ஊரில் கார்கள். மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் அதிகமில்லை. பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ மாணவிகள் எல்லோருமே சைக்கிள்களில் பயணித்தார்கள். லீ 20 வருடங்களாகப் பல மாணவர்கள் உபயோகித்த பழைய சைக்கிள் வாங்கினான். ஓல்ட் இஸ் கோல்ட் என்கிறமாதிரி, நல்ல கண்டிஷனில் இருந்தது. அவனுக்கு சைக்கிளில் பறக்கப் பிடிக்கும். சைக்கிளில் ஏறிவிட்டால், வானில் பறக்கும் சுதந்திரப் பறவையாகத் தன்னை நினைப்பான். கொளுத்தும் வெயில், கொட்டும் மழை எதுவாக இருந்தாலும், கர்ணனின் கவச குண்டலம்போல், அவனுக்கு சைக்கிள்.
கேம்பிரிட்ஜ் சாப்பாடும் அவனுக்குப் பிடித்தது. வயிற்றுக்கு மட்டுமல்ல, செவிக்கும், மூளைக்கும் வகுப்புக்கள் சோறு போட்டன. ஜெயிக்கும் வெறியோடு படித்தான். மூன்று மாதங்கள். தேர்வு நடந்தது. ஆறு மாதங்கள் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்த பிற மாணவர்கள், மூன்று மாதப் பயிற்சியோடு லீ. முடிவுகள் வந்தன. முதல் வகுப்பில் தேறிய மாணவர்கள் ஒரு சிலர். அவர்களுள் ஒருவன் – லீ. அவன் தங்கியிருந்த ஃபிட்ஸ்வில்லியம் ஹவுஸ் விடுதிக்கே வந்து பெருமையோடு அவனைப் பாராட்டியவர் தாச்சர்.
1947 மே மாதம். காதலி சூவிடமிருந்து நல்ல சேதி. அவளுக்கு இங்கிலாந்தில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்திருக்கிறது. ஒரு வருடத்தில் அவள் இங்கிலாந்தின் ஏதாவது பிரபலப் பல்கலைக்கழகத்தில் வந்து சேரலாம். ஆனால், ஒரு வருடம் காத்திருக்க லீ தயாராக இல்லை. அக்டோபரில் புது வகுப்புகள் தொடங்குகின்றன. ஐந்து மாதங்களில் எப்படியாவது கேம்பிரிட்ஜில் சூவுக்கு அட்மிஷன் வாங்கிவிட வேண்டும். யார் யாரைச் சந்தித்தால் காரியம் நடக்கும் என்று ஆராய்ச்சியே நடத்தினான். எல்லோரையும் பார்த்தான், பேசினான். தன் மதிப்பெண்களையும், மூன்றே மாதங்களில் ஆறு மாதப் பாடங்களைக் கரைத்துக் குடித்துத் தான் முதல் வகுப்பு வாங்கியதையும் விவரித்தான். இன்னொரு நெத்தியடி வாசகம் அவன் கையில் இருந்தது - ‘என் காதலி என்னைவிட புத்திசாலி.’
Advertisement
சில வாரங்கள் ஓடின. முயற்சிகள் வெற்றி. லீ சூவுக்குத் தந்தி அனுப்பினான்,
‘கிர்ட்டன் (Girton) கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. அவர்கள் கடிதம் வருகிறது. புறப்படத் தயாராகு.’
அக்டோபர் மாதம். லிவர்பூல் துறைமுகம். சூ வருகை. காதலன் – காதலி உணர்ச்சி பூர்வமான ரொமான்டிக் சந்திப்பு. நேராக லண்டன் போனார்கள். ஊர் சுற்றினார்கள். உலகத்தையே மறந்தார்கள்.
கேம்பிரிட்ஜ் வருகை. சூவுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. எங்கே போவதானாலும், பஸ் அல்லது நடை. அக்டோபரில் இங்கிலாந்தின் நடுக்கும் குளிர். உல்லன் ஸ்வெட்டர், கோட்டு, ஷூக்கள் போட்டுக்கொண்டு நடக்க அவள் பட்ட சிரமம்.
ஒரு நாள். சூ லீயிடம் சொன்னாள், ‘நீ ரொம்பவும் மாறி விட்டாய்.’
‘என்ன சொல்கிறாய் சூ?’
‘இல்லை. சிங்கப்பூரில் நீ ரொம்ப ஜாலியான ஆள். எதற்கும் கவலைப்படாதவன். இங்கே சீரியஸ் ஆளாகிவிட்டாய்.’
லீ ஆலோசித்தான். சூ சொன்னது நிஜம். அவனே இதுவரை அறியாத உண்மை. குடும்பம், காதலி, பிசினஸ் என்று சிங்கப்பூரில் அவன் வாழ்ந்தது ஒரு கூண்டுக்குள். இங்கிலாந்து வந்தபின், அவனை அறியாமலே, அரசியல் ஈடுபாடும், திட்டவட்டமான கொள்கைகளும் சில மாதங்களில் அவனிடம் வந்துவிட்டன.
முதலில் கம்யூனிஸ்ட்கள் பற்றிய அவனுடைய மனப்போக்கு. கைகளில் பணமும், அதிகாரமும் வைத்திருக்கும் பூர்ஷ்வாக்கள் ஏழைகளின் உழைப்பைச் சுரண்டுகிறார்கள், இது தடுக்கப்படவேண்டும் என்னும் பொதுவுடைமைச் சித்தாந்தம் அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால், உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்ட வன்முறையிலும் பயணிக்கலாம் என்று கம்யூனிஸ்ட்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் அவனுக்குச் சம்மதமாக இல்லை. இந்தச் சம்மதமின்மை அடிக்கடி அவன் கருத்துக்களில், பேச்சுக்களில், வெறுப்பாகவும் வெளிப்பட்டது.
பிரிட்டிஷார் மேலும் அவனுக்கு வெறுப்புக் கலந்த கோபம். இதற்குப் பல யதார்த்த வாழக்கைக் காரணங்கள். கல்லூரியில் பேராசிரியர்கள் இன பேதமின்றி எல்லா மாணவர்களையும் சமமாக நடத்தினார்கள். வகுப்பில் இருந்த சக இங்கிலாந்து மாணவர்கள் அறிவுக்கும், திறமைக்கும் மதிப்புத் தந்தார்கள். ஆனால், விளையாட்டு மைதானத்தில் இனவெறி இருந்தது. பாட்மிண்டன். டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுக்களில் ஆசியர்கள், குறிப்பாகச் சீனர்கள் ஜொலித்தார்கள். ஆகவே, இந்த அணிகளில் ஆசியர்களுக்கு இடம் கிடைத்தது. ஆனால், கிரிக்கெட், ரக்பி கால்பந்தாட்டம், படகோட்டுதல் ஆகியவற்றில் வெள்ளையர்கள் தவிர மற்றவர்களுக்கு, ‘எங்க ஏரியா, உள்ளே வராதே.’
கடைகளில் விற்பனைப் பெண்கள் ‘இந்தப் பரதேசிக் கூட்டம் எங்கே பொருட்கள் வாங்கப்போகிறார்கள்?’ என்று ஆசிய வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் தராமல் பராக்குப் பார்த்தார்கள். பேருந்துகளில் நடத்துநர்களும் ஆசியர்களை நடத்தியது இப்படித்தான். உணவு விடுதிகளிலும், ஆசியன் இரண்டாம் தரக் குடிமகன்தான்.
இனவெறியின் கொடூர முகத்தை லீ தத்ரூபமாக உணர்ந்தது அவன் வாடகைக்கு அறை தேடியபோது. ஏராளமான வீடுகளும், தெருக்களும் வெள்ளையர்களுக்கு மட்டுமே என்று விளம்பரம் செய்தார்கள். அவன் சீன நாட்டவன் என்னும் ஒரே காரணத்துக்காக அறை தர மறுத்தார்கள், கதவுகளை முகத்துக்கு நேராக மூடினார்கள், இழிவாகப் பேசினார்கள். பேராசிரியர் தாச்சர் போன்ற நல்லவர்கள் வாழும் நாட்டில் இப்படிப்பட்ட இனவெறி ஓநாய்களா? அதிர்ந்தான்.
அதிர்ச்சி வெறுப்பாக மாறியது. மலாயாவும், சிங்கப்பூரும் நாங்கள் பிறந்த பூமி, எங்கள் பொன்மணித் திருநாடு. ஆசியர்களை இழிவாக நடத்தும் இந்த வெள்ளையர் கூட்டமே, எங்களை ஆட்சி செய்ய உங்களுக்கு என்ன உரிமை, என்ன தகுதி என்று கொதித்தான்.
இந்தியர்கள் மாணவர் யூனியன் பதவிகளுக்குப் போட்டியிட்டார்கள், ஜெயித்தார்கள். ஏனோ, இந்தப் பதவிகளில் லீக்கு ஈடுபாடு இருக்கவில்லை. ‘படிப்பில் ஜொலிக்கவேண்டும். முதல் வகுப்பில் பாஸ் பண்ணவேண்டும்.’
படிப்போடு காதலையும் லீ சிந்தித்தான். சூவோடு பேசினான். கிறிஸ்துமஸ் விடுமுறையில் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ இருவரும் முடிவெடுத்தார்கள். அவள் வீட்டில் சொன்னால் பூகம்பமே வெடிக்கும். அவளை உடனே சிங்கப்பூருக்குத் திரும்பிவரச் சொல்லுவார்கள். ஆகவே, இரண்டு வீடுகளுக்கும் தெரியாமல் ரகசியத் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள். .
ஒரு நண்பன் ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்டார்ட்ஃபோர்ட் ஆன் ஆவன் (Stratford-on-Avon) என்னும் இடத்தில் மலிவான வாடகையில், வசதியான ஒரு ஹோட்டல் இருப்பதாகவும் அவர்கள் இருவரும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு அங்கே போகலாம் என்றும் யோசனை சொன்னான். அதைக் கேட்ட லீ மனதில் இன்னொரு எண்ணம் பிறந்தது. ஆங்கில இலக்கிய ரசிகர்களான அவனுக்கும், சூவுக்கும் கல்யாணம் செய்துகொள்ள ஷேக்ஸ்பியர் பிறந்த மண்ணைவிடச் சிறந்த இடம் கிடைக்காது. ஒரு பிளாட்டினம் மோதிரம் வாங்கிக்கொண்டான். ஸ்டார்ட்ஃபோர்ட் ஆன் ஆவன் போனார்கள். மோதிரம் தந்துனானே.
இருவரும் கேம்ப்ரிட்ஜ் திரும்பினார்கள். சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனால், குடும்ப சுகத்தைவிடப் படிப்பு முக்கியம் என்பதை உணர்ந்து படிப்பில் கடும் உழைப்பைக் கொட்டினார்கள். தேர்வு முடிவுகள் வந்தன. மறுபடியும் லீ முதல் வகுப்பு. சூ இரண்டாம் வகுப்பில்தான் தேறினாள். லீ அவளைத் தேற்றினான். ஏமாற்றத்தை மறக்க, அவளை ஸ்விட்சர்லாந்துக்கும், பாரிசுக்கும் இரண்டு வார ஜாலி ட்ரிப் கூட்டிக்கொண்டு போனார். .
இரண்டாம் வருடப் படிப்பு. எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வருடம். படிப்பு, படிப்பு. ஆனால், எப்போதும் படிப்பு என்று அவர்கள் புத்தகப் புழுக்களாக இருக்கவில்லை. வார இறுதிகளில் நண்பர்களை அறைக்குக் கூப்பிடுவார்கள். சூ அற்புதமாகச் சமைப்பாள். நண்பர்கள் குழாமில் சூ சமையலுக்கு ஒரு ரசிகர் கூட்டமே உருவானது.
லீ மனதில் அரசியல் ஈடுபாடு துளிர்விடத் தொடங்கியது. இங்கிலாந்தின் மக்கள் சபைக் (House of Commons) கூட்டத்துக்கு அடிக்கடி போனான். அன்றைய அரசியல் பிரபலங்களின் வார்த்தை ஜாலங்களைக் கேட்டு ரசித்தான். எத்தனை விதமான தலைவர்கள், எத்தனை அணுகுமுறைகள், எத்தனை வகைப் பேச்சுக்கள்.....ஒவ்வொருவர் பாணியிலிருந்தும் நல்லதைத் தேர்ந்தெடுத்து, தன் பாணியை அவற்றின் சங்கமாக்கக் கிடைத்த மகா அனுபவம்!
தேர்வு முடிவுகள் வந்தன. லீ முதல் வகுப்பு. அத்தோடு 75 சதவிகித மதிப்பெண் வாங்கி, ‘நட்சத்திர அந்தஸ்து’ வாங்கிய ஒரே மாணவன்! சூவும் முதல் வகுப்பு. அளவில்லா சந்தோஷத்தோடு தங்கள் குடும்பங்களுக்குத் தெரிவித்தார்கள். இரண்டு குடும்பங்களும் மகிழ்ச்சிக் கடலில்.
பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. சிங்கப்பூரில் வழக்கறிஞர்களாகத் தொழில் செய்ய, வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் வேண்டும். இருவரும் லண்டன் போனார்கள். மிடில் டெம்பிள் (Middle Temple) என்னும் அமைப்பில் பயிற்சி. இதில் வேலைப் பளு குறைவாக இருந்தது. அரசியலில் ஆழம் பார்க்க லீ முடிவு செய்தான். அவனுடைய ராஃபிள்ஸ் கல்லூரித் தோழர்கள் பலர் ஏற்கெனவே அரசியல் நீரோட்டத்தில் கலந்திருந்தார்கள். பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் பூட்டிய அடிமைத் தளைகளை அறுத்து, மலாயாவும், சிங்கப்பூரும் சுதந்திர நாடாக மலரும் இலக்கோடு மலாயன் ஃபோரம் (Malayan Forum) என்னும் அமைப்பை உருவாக்கியிருந்தார்கள். இன வேறுபாடின்றி, சீனர்கள், மலாய், இந்தியர்கள் எனப் பல வகையினரும், மலாய் – சிங்கப்பூர் தேசத்தவர் என்ற உணர்வோடு ஒன்றுபட்டிருந்தார்கள். 1947 – இல் இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுப் பெற்ற விடுதலை இந்த இயக்கத்துக்குக் கிடைத்த உற்சாக டானிக். ஃபோரம் கூட்டங்கள், இங்கிலாந்து அரசியல் தலைவர்களோடு சந்திப்புகள் ஆகியவை நடத்தினார்கள். மலாய் – சிங்கப்பூர் சுதந்திரத்துக்கு ஆதரவு திரட்டினார்கள்.
சிங்கப்பூரின் அரசியல் சூழலை லீ ஆராய்ந்தான். இரண்டு அரசியல் அணிகள் இருந்தன. முதல் அணி, ப்ரொக்ரெஸிவ் கட்சி (Progressive Party). இந்தக் கட்சியின் பெரும்பாலான அங்கத்தினர்கள் இங்கிலாந்தில் சட்டமும், மருத்துவமும் படித்து முடித்து வந்திருந்த உயர்மட்டத்தவர்கள். ஆங்கிலேயர்கள் தங்களைவிட உயர்வானவர்கள் என்னும் தாழ்வு மனப்பான்மை இவர்கள் ஆழ்மனங்களில் ஓடியது. ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபட்டுச் சிங்கப்பூரும், மலாயாவும் தனி நாடுகளானால், தங்களால் நிர்வகிக்கமுடியாது என்னும் எண்ணம் கொண்ட மிதவாதிகள்.
இன்னொரு துருவமாக இருந்தவர்கள் கம்யூனிஸ்டுகள். போராட்டங்கள் மூலமாக ஆட்சியைப் பிடிப்பது இவர்கள் வழி. மலாயாவின் பொருளாதாரம் ரப்பர், தகரம் ஆகிய பொருட்களின் ஏற்றுமதியை நம்பி இருந்தது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் இந்த ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட்டது. மலாயா தள்ளாடியது. ஏராளம் பேர் வேலை இழந்தார்கள். மலாயாவில் நிறையச் சீனர்கள் பணி செய்தார்கள். தங்கள் வாய்ப்புக்களைச் சீனர்கள் பறிப்பதாக மலாய் மக்கள் நினைத்தார்கள். இரு இனத்தவருக்குமிடையே அடிக்கடி சண்டைகள், சச்சரவுகள். கம்யூனிஸ்ட் கட்சி இந்தச் சண்டைகளில் குளிர் காய்ந்தது. ரப்பர் தோட்டத் தொழிலாளிகளையும், தகரத் தொழில் ஊழியர்களையும் தூண்டிவிட்டார்கள். வேலை நிறுத்தங்கள் வாடிக்கையாயின.
ஜூன் 16, 1948. ரப்பர் தோட்டத் தொழிலாளிகள் தங்கள் மூன்று முதலாளிகளைச் சுட்டுக் கொன்றார்கள். இந்த நிகழ்ச்சி மலாயா கம்யூனிஸ்ட் புரட்சி 1948 (Malayan Communist Party Revolt அல்லது சுருக்கமாக MCP Revolt ) என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டிஷ் அரசாங்கம் மலாயாவிலும், சிங்கப்பூரிலும் அவசர நிலையைப் பிரகடனம் செய்தது. கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடை விதித்தது. இக்கட்சியினர் தலைமறைவாக இயங்கினார்கள். வன்முறையால் விடுதலை வாங்கிவிடலாம் என்று நம்பினார்கள். அந்த வழிகளைக் கடைப்பிடித்தார்கள்.
இவர்கள் இருவருக்கும் நடுவே, மலாயன் ஃபோரம் அணி வன்முறை இல்லாத போராட்டங்கள் மூலமாக விடுதலை பெற விரும்பியது. முதல் அணி ஆங்கிலேய அடிவருடிகள், கம்யூனிஸ்ட்கள் கனவு உலக சஞ்சாரிகள் என்பது லீ அபிபிராயம். எனவே, ஃபோரம் பயணித்த பாதை சரியானது, தன் கொள்கைக்கும், மனப்போக்குக்கும் ஒத்துபோவது என்று முடிவு செய்தான். ஃபோரம் அமைப்பில் சேர்ந்தான்.
1950. இங்கிலாந்தில் பாராளுமன்றத் தேர்தல். லீயின் கேம்பிரிட்ஜ் வகுப்புத் தோழன் ஒருவன் தொழிலாளர் கட்சி (Labour Party) சார்பில் போட்டியிட்டான். எதிர்க் கட்சியான கன்சர்வேட்டிவ் (Conservative Party) களைவிட, தொழிலாளர் கட்சி காலனி நாடுகளிடம் தெளிவான, பரிவான கொள்கைகள் கொண்டதாக லீ நினைத்தான். ஆகவே, தோழன் என்னும் எண்ணம் மட்டுமல்ல, மலாய்-சிங்கப்பூர் விடுதலைக்கு உதவி செய்ய வாய்ப்புள்ள கட்சி என்னும் சிந்தனையும் அவனை நண்பனுக்குத் துணையாக நிற்கத் தூண்டியது.
பிரச்சாரத்துக்குக் கார் ஓட்டும் டிரைவராகவும், பிற ஒத்தாசைகள் செய்யவும் ஆள் தேவை. லீ தன் சேவையை வழங்கினான். மனைவி சூவோடு போனான். இரண்டு வாரங்கள். அற்புதமான அரசியல் அனுபவம், அரங்கேற்றம். அனல் கக்கும் பேச்சுக்களைக் கேட்டான். சில கூட்டங்களில் அவனும் பேசினான். இரவில் அவனோடு அறையைப் பகிர்ந்துகொண்டவர் ஒரு ரெயில் ஓட்டுநர். அவரோடு பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டான், விவாதித்தான். அடிமட்ட மக்களின் ஆதங்கங்களை அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள அவரோடு செலவிட்ட நேரம் உதவியது. லீயின் தோழன் தோல்வி கண்டான். ஆனால், இந்தப் பிரச்சாரப் பிரவேசம் லீக்கு எதிர்காலத்தில் அரசியல் நீரோட்டங்களைப் புரிந்துகொள்ள உதவிய பாலபாடம்.
மிடில் டெம்பிள் பயிற்சி முடிந்தது. தேர்வில் கணவன், மனைவி இருவரும் பாஸ். அப்போது அவனுக்கு வந்தது ஒரு கடிதம். சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஃபோல்ஜர் (Foulger) எழுதிய கடிதம். தான் லீயின் பெற்றோரின் நண்பன் என்றும்., விடுமுறையில் வந்திருக்கும் தன்னோடு அவர்கள் சில நாட்கள் தங்கவேண்டும் என்றும் அழைப்பு. லீ சூவோடு போனான். மூன்று நாட்கள் அவரோடு. அன்போடு பேசினார், பழகினார். ஆனால், இது வெறும் சந்திப்பல்ல, ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராகப் பேசும் அவன் விரைவில் சிங்கப்பூர் திரும்பப்போகிறான். வந்தவுடன் என்ன செய்வான் என்று காவல் துறையின் கண்காணிப்பு. ஊருக்குப் போன பிறகு, பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்கவேண்டும்.
இங்கிலாந்துக்கு டாட்டா சொல்லும் நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்தன. அனுபவங்களை அசைபோட்டு, கற்ற பாடங்களை எடைபோடும் பழக்கம் அவனுக்கு உண்டே? அவனைக் கவர்ந்த முக்கிய அம்சம், இங்கிலாந்து மக்களின் பண்பாடு, கட்டுப்பாடு. சின்னச் சின்ன விஷயங்களுக்கும்
‘தாங்க் யூ’ சொன்னார்கள். வீதிகளில் பாதசாரிகளுக்காக வாகனங்களை நிறுத்தினார்கள். சிக்னல்களில் கட்டுப்பாடு காட்டினார்கள். நாட்டின் பல பாகங்களில் யுத்தச் சிதிலங்கள் இருந்தன. கடந்த காலத்தைப்பற்றிக் கண்ணீர் விட்டுக்கொண்டே காலத்தைக் கடத்தாமல், என்ன செய்யலாம் என்று வருங்காலத் திட்டங்கள் போட்ட துணிச்சல் லீயைக் கவர்ந்தது. சிங்கப்பூரிலும் இவை அனைத்தையும் நிகழத்தவேண்டும், அதற்கான மனப்பாங்கை மக்களிடம் வளர்க்கவேண்டும்.
எல்லாக் குடிமக்களையும் இங்கிலாந்தின் அரசியல் சட்டம் சமமாக நடத்தியது. எல்லோருக்கும் சமமான வாழ்க்கைத் தரம் தர முயற்சித்தது. யுத்தத்தால் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு. இதை எதிர்கொள்ள ரேஷன் முறை. எல்லோருக்கும் இலவச மருத்துவ வசதிகள். பல அம்சங்களில், குறிப்பாக மக்கள் நலத்திட்ட்ங்களில் உலகம் இங்கிலாந்திடம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் ஓராயிரம் இருப்பதாக நம்பினான். நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால், இந்த நல்ல திட்டங்களைச் சிங்கப்பூரிலும் கொண்டுவரவேண்டும் என்று தீர்மானித்தான்.
இந்த அணுகுமுறை நடைமுறை சாத்தியமல்ல, நாட்டுக்கு நல்லதல்ல என்னும் ஞானோதயம் பல ஆண்டுகள் ஆட்சி நடத்திய பின் லீக்கு வந்தது. சொன்னான், இப்படி அரசாங்கம் இலவச விநியோகங்களில் இறங்கினால், ‘நாடு தனக்கு என்ன செய்யும் என்று தனி மனிதன் யோசிப்பானே தவிரத் தன்னை மேம்படுத்திக்கொள்ளும் எந்த முயற்சிகளும் செய்யமாட்டான். தனிமனித உந்துதல்தான் சமுதாயத்தை முன்னோக்கி இயக்கும் சக்தி.’
அவன் திரும்பிப்போகும் தாய்நாடு எப்படி இருந்தது தெரியுமா? சிங்கப்பூர் பற்றி வந்துகொண்டிருந்த செய்திகள் கவலை கொடுத்தன. கம்யூனிஸ்ட்கள் உபயத்தால் நாடு முழுக்க வேலை நிறுத்தங்கள். வன்முறையைக் கையில் எடுத்த சில யூனியன்காரர்கள் ரப்பர் தோட்ட முதலாளிகளைச் சுட்டுக் கொன்றார்கள். அரசாங்கமும், இங்கிலாந்தில் படித்து வந்த உயர் மட்டத்தவர்களும் முதுகெலும்பில்லாமல் சும்மா இருந்தார்கள். மக்கள் மனங்களில் நம்பிக்கையின்மை. நல்ல தலைவனே இல்லாத வெற்றிடம். அந்த வெற்றிடத்தைத் தன்னால் நிரப்பமுடியும், சிங்கப்பூருக்கு விளக்கேற்ற முடியும் என்னும் நம்பிக்கை, உறுதி லீயிடம் நிரம்பவே இருந்தது.
லீ மனைவி சூவோடு சிங்கப்பூர் போகும் கப்பல் ஏறினான். மூன்று வருடங்களுக்கு முன்னால், டிக்கெட் வாங்கப் பணமில்லாமல், கிடைத்ததைச் சாப்பிட்ட ஓசிப் பயணி. இன்று குளிர் சாதன அறை. நேரம் தவறாமல் சுவையான உணவு, சீருடைப் பரிசாரகர்கள், மரியாதையான உபசரிப்பு. பயணத்தில் மட்டுமா? கடந்த மூன்று வருடங்களில் அவன் வாழ்க்கையிலும் எத்தனை மாற்றங்கள், வெற்றிமீது வெற்றிகள்! படிப்பில் வெற்றி – சட்டத்தில் முதல் வகுப்பு, காதலில் வெற்றி. திருமணம். அரசியல் பிரவேசம், பிரச்சாரப் பிரவேசம். பேராசிரியர் ஹரால்ட் லாஸ்கி கொள்கைகளின் தாக்கம். கம்யூனிஸ்ட்கள் பற்றிய மதிப்பீடு. மலாயா – சிங்கப்பூருக்கு ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்னும் தீவிரம். தான் முழுமனிதனாக மறுபிறவி எடுத்ததுபோல் லீ உணர்ந்தான். நன்றி, இங்கிலாந்து!
(தொடரும்)